அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்!
அவலங்கள் ஆயிரம் அரங்கேற்றி, மக்களின்
கவனத்தை வேறிடம் திசைமாற்றித் துணிவுடன்,
எவருக்கும் அஞ்சாமல் பாதகம் செய்வோரை,
ஆண்டாண்டு காலமாய் ஆட்சியில் ஏற்றி,
அடையாளம் தெரியாமல் போகின்ற தமிழா!
அடிமைக்கும் அடிமைபோல் முதுகுத் தண்டுடைந்து,
அல்லல்கொண் டழிவதிலே ஆனந்தம் கண்டாயோ?
அடைகாக்கும் கோழிகூட அன்னியரைக் கண்டால்,
அடையாளம் கண்டுடனே தற்காத்துக் கொள்ளும்!
அரைநூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும்கூட,
அம்மிக்கல் போல்நீயும் அசையாமல் இருந்தால்,
அன்றாடம் மிளகாயை அரைத்துந்தன் தலைமீது,
‘ஆட்சி’ என்னும் பெயரிலே பூசுவார்கள் என்றும்!
அறிவுக்கண் திறந்துந்தன் மீதரைத்த மிளகாயை,
அள்ளியெடுத் தவர்முகத்தில் ஒருமுறை நீ பூசு!
அடிமனதில் எரிகின்ற செந்தீயை எடுத்து,
அன்னைத்தமிழ்த் தேசத்தின் தீமைகளைக் கொளுத்து,
அமைந்திடுமொரு நல்லாட்சி, அப்பொழுதே நமக்கு!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Comments
Post a Comment