க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
3
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:
மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி
செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும்,
கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும்
காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்
ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக
அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால்
தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு
அனுப்புவதையும் மனத்தில் கொண்டு இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் போலும்.
காவலர்கள் ஐயப்பட்டு மாறன், முல்லையைப் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்களின்
பண்பை நையாண்டி செய்யும் பாவலர்:
‘தப்பேதும் செய்யாரை இரவில் கண்டால்
தண்டிக்கா திருப்பதற்குப் பரிசு கேட்பார்.
எப்போதும் சீருடையில் சிரிக்கச் சுற்றி
இராக்கடையில் கையேந்தி இரப்பெ டுப்பார்.’
எனக் காவலர்களைப் பிச்சைக்காரர்களுக்கு இணையாக உருவகப் படுத்துகிறார்.
இப்பொழுதும் இரவில் காவலர்கள் ஊர்க்காவல்
என்ற பெயரில் கடை,கடையாக ஏறி, இறங்கிக் கையூட்டுப் பெறுகின்ற காட்சியை நாம்
கண்ணாரக் காணலாம். இதைக் கண்டிருக்கும் பாவலர், தக்க இடத்தில்
பிய்த்தெடுக்கிறார்.
பிறிதொரு காட்சியில், தமிழ்ப்போராளிகள்
ஊரிலுள்ள அனைத்துக் கடைகளிலும் பெயர்ப்பலகையைத் தமிழில் மாற்ற வேண்டும்
என்று போராட்டம் செய்கின்றனர். அப்பொழுது கலவரம் ஏற்படுகிறது. கல்லெறி
நடைபெறுகிறது. இந்தக் காட்சியைப் பாடலில் உருவகப் படுத்திப் பாவலர்
சொல்லும் சுவை நமக்கு நம்மையும் மீறிச் சிரிப்பை வரவழைப்பதாய் உள்ளது.
‘உடைந்தனவே பெயர்ப்பலகை என்று பார்த்தான்
ஒன்றிரண்டு வெண்பற்கள் தரையில் வீழ’
தமிழில் பெயர்ப்பலகை மாற்றமாட்டேன் என்று
சொல்லும் வணிகர்களின் பல்லுடைந்து ஓலைவாயாய் நிற்கும் காட்சியை நினைத்துப்
பாருங்கள். சிரிப்பு உங்களுக்குத் தானாகவே வரும்.
இதேபோன்று ஆங்காங்கே சிறு,சிறு நகைச்சுவைகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. படித்துச் சுவையுங்கள், இல்லை, சிரியுங்கள்.
பகுத்தறிவு:
கதைப் பாத்திரங்களில் திருப்பங்கள்
இருந்தால் சுவை கூடுதலாகும். இந்தக் கலையைச் சிறுகதை, புதினங்களில்
மட்டுமல்ல திரைப்படங்களிலும் நாம் காண்கிறோம். அதேபோன்று இந்தப்
பாவியத்தில் ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கின்றார் ஐயா அவர்கள். ஐயப்பன்
கோயிலுக்குப் பெருங்கூட்டம் செல்கிறது. கூட்டத்தில் ஒருவராகப் பெரியவர்
ஒருவர், பெயர்; அண்ணல். பத்தர்களுக்கே உரிய ஆடை, அடையாளங்களுடன்
செல்கின்றார். ஒரு சூழ்நிலையில் கதைத்தலைவன் செம்மல், புதிதாகத்
திருமணமாகி, மனைவியை விட்டுவிட்டு வந்திருக்கிறான் என்று அறிகிறார்; மனம்
கொதிக்கிறார். அந்த இடத்தில் பாவலர் அந்தப் பாத்திரத்தை இதழாளராகவும்,
பகுத்தறிவாளராகவும் எடுத்துக்காட்டி, செம்மலுக்கு அறிவுரை கூறுவதாக
மதப்பித்தர்கள் அனைவருக்கும் சவுக்கடி கொடுக்கின்றார் பாருங்கள்:
‘வீழ்வதற்கு மதப்பழக்கம் தூண்டும் என்றால்
விட்டொழித்து நலமாக வாழ்ந்தால் என்ன?’
‘பழம்உண்ண மாட்டாமல் நோன்பி ருந்து
பாழான கோயிலுக்கு வந்து விட்டாய்.
புழுப்பிடித்த வழக்கத்தை இளையோர் தூக்கிப்
போடாமல் உருப்படுமா வாழ்க்கை இங்கே?’
என்ன வேகம் நிறைந்த சொல்லாட்சிகள். இல்லறம்
என்னும் நல்லறத்தை இனிதுற நடத்தாமல் இறைவனுக்கு நோன்பிருப்பதால் எந்தப்
பயனும் இல்லை என்கிற கருத்தைக் கதைத்தலைவனுக்குக் கூறப்படுகின்ற அறிவுரையாக
மேம்போக்காகத் தோன்றினாலும், இந்த நாட்டில் மண்டிக் கிடக்கின்ற முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைகளை அறுத்தொழித்தால்தான் மக்கள் உருப்படுவார்கள், நாடு முன்னேறும் என்னும் ஒட்டுமொத்தக் குமுகாயத்திற்கான அறிவுரை வரிகளாக அல்லவா அவை விளங்குகின்றன.
எந்தச் சூழ்நிலையாகயிருந்தாலும் அதற்கேற்ப ஒரு கொள்கைப் பாவலன் தன்னுடைய கொள்கையைப் புகுத்திவிடுவான். இந்தக் கலையை நாம் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலேயே
படித்திருக்கிறோம். அதை மீண்டும் பகுத்தறிவுப் பாவியமான இந்தப்
பாவியத்தில் காண முடிகிறது. சொல்லவேண்டிய இடத்தில் மட்டுமல்ல, சொல்ல
முடியாத இடத்திலுங்கூட சொல்லவேண்டிய கருத்தைச், சொல்லக்கூடிய வகையில்
சூடாகச், சுவையாக அழுத்தந் திருத்தமாகச் சொல்ல முடியும் என்பதற்குச்
சான்றாக மேலே கூறப்பட்ட வரிகள் அமைந்திருக்கின்றன.
இன்னும் இதுபோன்ற வரிகள் ஏராளமாக நூல்நிரவக் காணலாம். படியுங்கள்.
தமிழுணர்வு:
‘ஏச்சுகள் இழிவுகள் எவையுமென் தொண்டினை
இம்மியும் அசைப்பதில்லை! – வாள்
வீச்சுகள், குண்டுகள் உடல்பிளந் தாலுமே
விளைவினில் மாற்றமில்லை!
பூச்சுகள், புனைவுகள் புரட்டுகள், எத்துகள்
பொய்எனைச் சார்வதில்லை! – விடும்
மூச்சுகள் ஒவ்வொன்றும் தமிழ்,இனம், நாடெனும்
முழக்கினில் சோர்வதில்லை!’
இது பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தன்னைப்பற்றிப் பறைசாற்றிக் கொண்ட பாடல். இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு
வரியும், சொல்லும், ஏன் ஒவ்வொரு எழுத்தும் கூடத் தனித்தமிழ்ப் பாவலர் ஐயா
தமிழமல்லன் அவர்களுக்குப் பொருந்தும். எந்தச் சூழலிலும் தன் நிறம்
மாற்றிக் கொள்ளாத வீரத் தமிழ் மறவர் ஐயா அவர்கள் தன்னுடைய இந்த நூலிலும்
தன் தமிழுணர்ச்சியை வேண்டுமட்டும் புகுத்தியுள்ளார். சொல்லப் போனால் இந்தப்
பாவியத்தில் வரும் அண்ணல் பாத்திரம் ஐயா தமிழமல்லன்தானோ என்று எண்ணத்
தோன்றுகிறது.
அண்ணலைச் சுற்றியுள்ள கூட்டத்திடை
மொழியுணர்ச்சிபற்றிப் பேச்சு வருகிறது. அப்போது உரையாற்றும் அண்ணலின்
கருத்தாகக் கீழ் வரும் பாடலைப் பாடுகின்றார் ஐயா அவர்கள்:
இன்றைய காலத்தில் பண்பலை என்னும் பெயரில்
ஒரு பண்பில்லா அலை வானொலி வழியாக நம் காதுகளைக் கடித்துக் குதறிக்
கொண்டிருப்பதை நாம் அறிவோம். அது நம் அன்னைத்தமிழை அணு, அணுவாகக் கொலை
செய்வதை நாம் கண்டுங் காணாமல் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால்
தமிழ்ப்போராளியான ஐயா அவ்வாறு இருக்கவில்லை. வெகுண்டெழுந்து வெடிப்பதைப்
பாருங்கள்:
‘ஒலிவடிவில் அன்றாடம் பண்ப லையில்
நேராகத் தமிழ்க்கொலையைச் செய்கின் றார்கள்.
மொழியுணர்ச்சி செத்தால்தான் முதலைக் கூட்டம்
முழுதாகக் கொள்ளையிட முடியும் என்றே
ஒழிக்கின்ற விரகாக (தந்திரமாக) பண்ப லையை
ஓயாமல் பயன்படுத்திக் களிக்கின் றார்கள்.
கழிசடைபோல் செம்மொழியைக் கடித்துத் துப்பிக்
காதுக்குள் புகுத்துகின்றார், கயமைக் கூட்டம்
குழிவெட்டித் தீயாரைப் புதைத்தல் என்றோ?
கொதிப்பாலே மக்கள்தாம் எழுதல் என்றோ?’
என்று கொதிக்கின்ற வரிகளைக் கொட்டுகின்றார். இந்தக் காட்சியைப் படிக்கும் போது பாவேந்தர் பாரதிதாசனின் கீழ்வரும் பாடல் வரிகள் நம் நினைவுக்கு வராமல் இருக்கா.
தமிழரெல்லாம் தமிழருக்குத் துணையாய் நிற்க
தமிழ்கொன்று தமிழினத்தை ஈட ழித்து
தமிழரல்லார் மூச்சுவிடா துழைக்கின் றார்கள்
தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும்
தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின் றார்கள்
தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார்.
தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய
தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க!
என்று நமக்கெல்லாம் அறைகூவல்
விடுக்கின்ற பாட்டு வரிகளுக்கும் பாவலர் ஐயா அவர்களின் பாட்டு வரிகளுக்கும்
பெரிதாக வேறுபாடு தெரியவில்லை அல்லவா?
மேற்சொன்ன ஐயாவின் பாடலைப்
படித்தபின்னும் நாம் கொதிக்காமல் இருந்தால் நாம் பெயருடன் நடமாடும்
பிணங்கள் ஆவோம். தான் கொண்ட உணர்ச்சியைப் படிப்பவருக்கும் வரும்படி
எழுதுவது என்பது மிகவும் கடினம். அதுவும் பாடலில் வடிப்பதென்பது மிக மிகக்
கடினம். ஆனால் அந்தக் கலையில் கைதேர்ந்தவராக உள்ளார் பாவலர்ஐயா அவர்கள்.
– ஆறு.செல்வன்
Comments
Post a Comment