Skip to main content

குதித்தெழுந்து வாருங்கள்! – மெல்பேண் செயராமர்




தலைப்பு-குதித்தெழுந்துவாருங்கள் :thalaippu_kuthithezhundhu_ vaarungal

குதித்தெழுந்து வாருங்கள் !


படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்
அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்
குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்
அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !

குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்
அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்
பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்
எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !

அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்
ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்
என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது
ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !

கொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்
நிலைகெட்டுத் தடுமாறி    நீசராய்   மாறிடுவார்
வெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து
வேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் !

உழைக்கின்ற காசெல்லாம் ஒருசதமும் மிஞ்சாது
பிழைக்கின்ற பிழைப்பதனில் பெருங்குழப்பம் வந்துவிடும்
கிடைக்கின்ற நல்வாழ்வும் கீழ்நிலைக்கு வந்துவிடும்
நடைப்பிணமாய் ஆகியவர் நரகத்தைத் தொட்டுநிற்பர் !

நாட்டிலே குடியொழித்தால் நல்லதே நடக்குமென
ஏட்டிலே எழுதிவைத்த எழுத்தையெலாம் ஒதுக்கிவிட்டுக்
கூட்டமாய்க்  குடிகுடித்துக்  குவலயத்தை அழிப்பதனை
கூண்டோடு அழித்திடுவோம்  குதித்தெழுந்து வாருங்கள் !

வள்ளுவர் பிறந்தமண்ணில் வகைவகையாய் குடியிருக்கு
மாசமண முனிவரெலாம் குடியொழிக்கு வகைசொன்னார்
தெள்ளுதமிழ் நூல்கள்பல குடியொழிக்கச் சொன்னாலும்
உள்ளமதில் கொள்ளாமல் உயிர்குடிக்கக் குடிக்கின்றார் !

அன்பை அறத்தை அகிம்சையை அழித்துநிற்கும்
அநியாயக்  குடிதன்னை அகற்றிடுவோம் வாருங்கள்
துன்பமெலாம் தந்துநிற்கும் துன்மார்க்கக் குடிதன்னை
துடைத்தொழிக்க  வாருங்கள் தூய்மையாய் வாழ்ந்திடுவோம் !

மெல்பேண் செயராமர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்