Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்






தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram9

9. மனத்தை யாளுதல்

  1. மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி.
ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும்.
  1. நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது.
மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது.
  1. அறனு மறனு மறிதிற னிலாதது.
மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது.
  1. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும்.
மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும்.
  1. அதனெறி விடாஅ தாளுத றங்கடன்.
மனத்தை அதன் வழியில் செல்லவிடாமல் அதனை ஆளுதல் நம் கடமை ஆகும்.
  1. தானதிற் பிரிந்து சந்தத நிற்க.
ஒருவன் தன் மனத்திலிருந்து எப்பொழுதும் பிரிந்து நிற்றல் வேண்டும்.
  1. எதையது நினைத்ததோ வதையுடன் காண்க.
மனம் எதை நினைக்கிறது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
  1. மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக.
மனம் நினைப்பது தீயது என்றால் மனத்தை உடனடியாக அதிலிருந்து விலக்க வேண்டும். மனம் நினைப்பது நல்லது என்றால் அதில் மனத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
  1. பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக.
மனம் நினைப்பது பயனற்றது என்றால் உடனடியாக பயனுள்ளவற்றில் மனத்தைத் திருப்ப வேண்டும்.
  1. ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க.
ஒன்றை நினைக்கும் பொழுது மனம் மற்றொன்றை நினைக்க விடுதல் கூடாது.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

வ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்