அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
அரசியல் மந்திரம் கற்போம்!
தகதிமிதோம்! தகதிமிதோம்!
அரசியல் மந்திரம் கற்போம்!
தமிழகங் காக்கத் துடித்தெழுந்து,
தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்!
தகதிமிதோம்! தகதிமிதோம்!
விரைவினில் மாற்றம் காண்போம்,
மிகமிகும் மனதின் சீற்றங்களால்,
சுகம்மிகும் மாற்றம் காண்போம்!
தவறென்று தெரிந்தும் திருந்தாத,
துரியோ தனகுணத் தலைவர்களும்,
துச்சா தனகுணத் தடியர்களும்,
தமிழன்னை மடியில் கைவைத்து,
துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி,
தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும்,
தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்!
தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்!
தகதிமிதோம்! தகதிமிதோம்!
தீந்தமிழ் நாட்டைக் காப்போம்,
நெருப்புடன் மோதும் மனத்தோடு,
சரித்திரம் ஒன்றைப் படைப்போம்,
தீர்ப்புகள் எழுதும் துணிவோடு,
தேர்தலில் புதுமுடி வெடுப்போம்!
தமிழர்கள் பெருவடி வெடுப்போம்!
அகமிகும் ஆத்திரச் சீற்றங்களை,
நகநுனி மைவழி தணிப்போம்!
தகதிமிதோம்! தகதிமிதோம்!
அரசியல் மந்திரம் கற்போம்!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Comments
Post a Comment