க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் – ஆறு.செல்வனின் ஆய்வுரை 1/5
1/5
முனைவர் க.தமிழமல்லன் இயற்றிய
அண்ணல் பாவியம் :உவமைக் குவியல்! உணர்ச்சிப் படையல்!
எதையும் எழுதலாம் என்பவன் எழுத்தாளன்.
இதைத்தான் எழுதவேண்டும் என்பவன் படைப்பாளன். இதில் ஐயா தமிழமல்லன் அவர்கள்
இரண்டாவது வகை. சிந்துகின்ற வியர்வைத் துளியும், செதுக்குகின்ற
மைத்துளியும் செந்தமிழர் வாழ்வுக்கே என்னும் சிறப்புக்குச் சொந்தக்காரர்
ஐயா அவர்கள். உழலும்போது மட்டுமல்ல, உறங்கும்போதும் தமிழர் நலனையே கனவு
காண்பவர் அவர். காட்சிக்காகவோ, பேச்சுக்காகவோ, மேல்பூச்சாக
தொண்டாற்றுபவர். அல்லர். தன்னுடைய உடல், பொருள், உயிர் மட்டுமல்ல,
குடும்பத்தினரையும் தமிழுக்காய்த் தாரைவார்த்திருப்பவர். அவரின் மேன்மைப்
படைப்பான ‘அண்ணல்’ என்னும் இப்பாவியத்தைப் படித்துணர்ந்த சுவையை உங்களோடு
பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சொல்லடுக்கிப் பொருளடுக்கிச் சுவைகள் செய்து
துடிப்பெடுத்துப் பாடிடுவோர் எல்லாம் சுட்ட
கல்லடுக்கிப் பூச்சின்றிக் கட்ட டந்தான்
காணென்று கூறலொக்கும் எல்லாம் பாட்டா?
புல்லுகின்ற பல்கருத்தில் நல்ல வற்றைப்
புத்துணர்வால் பழம்பிழிந்த கொழுஞ்சா றேபோல்
தொல்லையின்றி யள்ளும்வண்ணம் தொடுப்போர் பாட்டே
தொல்லுலகில் நிலைத்திருக்கும் செழும்பாட் டாகும்.
என்பார் பாவலர்கோ அன்புநிலவன்.
நல்ல கருத்துகளை நறும்பாட்டில் புகுத்தி உள்ளம் கொள்ளையிடும் வண்ணம்
சொன்னால்அது உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். ஆம், இந்த ‘அண்ணல்’
பாவியமும் அந்த வரிசையிலேயே வந்து நிற்கிறது.
பாவலன் தன் கருத்துகளைச்
சொல்பவனாக மட்டும் இருக்கக் கூடாது, நிகழ்காலச் சிக்கல்களைப்
படம்பிடித்துக் காட்டி, அதற்குத் தீர்வைச் சொல்லும் ஆற்றல்
வாய்ந்தவனாகவும் இருக்கவேண்டும். அவனே சிறந்த பாவலன். அவனே சிறந்த
‘படை’ப்பாளன். அவனை இந்த நாடு மாலை போட்டு மகுடம் சூட்டும்..
பாரதி, பாவேந்தர், பாவலரேறு அப்படித்தான்
போற்றப்படுகிறார்கள். அவர்கள் அடியொற்றி வரும் ஐயா தமிழமல்லன் அவர்கள்,
இன்றைய தேவையறிந்து தமிழர்களின் கற்புநெறியையும், பண்பாட்டையும்
கருவாக்கிக் கதையை உருவாக்கி, அதன் மூலம் மூடநம்பிக்கையைச் சாடி, தமிழ்ப்பற்றை வலியுறுத்தி இந்தச் சிறப்புமிக்க பாவியத்தை வடித்திருக்கின்றார்.
வழக்கிற்கு உட்படுத்தப்பட்டுக், கண்ட
நடிகைகளும் கருத்து சொல்லுகின்ற அளவுக்கு அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட
தமிழச்சியின் கற்பைத் தன் பாடுபொருளாக்கி இந்தப் பாவியத்தைப்
படைத்திருக்கின்றார் ஐயா அவர்கள். கற்பை நிலைநிறுத்தப் போராடும் ஒரு
தமிழ்ப்பெண்ணை நடுமையாக வைத்து இன்று நாட்டில் புரையோடிக் கிடக்கும்
மூடத்தனத்தைச் சாடுவதோடு, தமிழர்களின் நெஞ்சில் மங்கிவிட்ட, மறைந்துவிட்ட தமிழ்ப்பற்றை, இனப்பற்றைச் சவுக்கடிகள் கொடுத்து மீண்டும் மிளிரவைக்கின்ற ஓர் ஆற்றல் மிக்க பாவியமாகத்தான் இதை என்னால் உணரமுடிகின்றது.
பாவியத்தின் மற்றொரு சிறப்பு, விரல் தொடும் இடமெல்லாம்; உவமை, விழிபடும் இடமெல்லாம் நயமை. எனவே படிப்போர்கள் மேம்போக்காகப் படிக்காமல் ஊன்றிப் படித்தால் ஒரு கம்பனின் படைப்பைச் சிறிய அளவில் படித்த இன்பத்தை உணரலாம்.
உவமைநயம்:
கதைத்தலைவி முல்லையை விரும்புகின்றான்
எதிர்த் தலைவன். முல்லையோ ஏற்கெனவே மணமானவள். இருந்தும் இழிகுணத்து
எதிர்த்தலைவன் அவளை எக்கணமும் மறக்கவில்லை. இதைச் சொல்லவரும் பாவலரின்
வரியைப் படித்து நான் வியந்து போனேன்.
‘உழவாளி நிலமகளை நினைத்தல் போலே
ஓயாமல் முல்லைப்பேர் நினைத்தான் மாறன்.’
உழவுத்தொழிலையே தன் வாழ்க்கையாகக் கொண்ட
உழவனுக்குத் தனக்கும், தன் குடும்பத்திற்கும் சோறு போடுகின்ற நிலம் எப்படி
இருக்கின்றதோ, என்ன ஆனதோ என்ற சிந்தனை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்
என்பது மிகத் தெளிவான உண்மை. இந்த உண்மையை நம் பாவலர் எந்த இடத்தில்
பயன்படுத்துகின்றார் பாருங்கள். இடைவிடாமல் எதிர்த்தலைவன், கதைத்தலைவியை
காதல் வயத்தால் சிந்தித்துக்கொண்டிருக்கின்றான் என்பதை இதைவிட எளிமையாக,
வலிமையாகச், சிறப்பாகச் சொல்லமுடியுமா?
கதைத்தலைவி முல்லை எதிர்த்தலைவன் மாறனின்
இழிகுணத்தைப் பற்றி அறிந்தாளில்லை. அவன் தன் கணவனின் நண்பன் என்பது
மட்டுமே அவள் அறிந்த உண்மை. எனவே அவன்மீது அவளுக்கு மரியாதை உண்டு. அவள்
அவனிடம்
வெள்ளை மனத்துடன் பழகுகின்றாள். இதையும் உவமையின்றிச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை பாவலருக்கு. உவமை, அதிலும் மிக எளிமையான உவமை.
‘படருகின்ற நன்முல்லை, கொம்பின் மேலே
பகுத்தறியா தேறுதல்போல் பாவை முல்லை,
இடருகின்ற முட்கொம்பைக் கவனிக் காமல்,
இயல்பாக மாறனுடன் பழக லானாள்.’
உண்மைதானே தொற்றிப் படருகின்ற கொடிக்குக்
கொம்பு தன்னைக் குத்திக் கிழிக்கின்ற முள்தாழையா? இல்லை அன்பை மதிக்கின்ற
மென்வாழையா என்பது புரியாதுதானே. இந்த உவமையை ஐயா சொல்லவேண்டிய இடத்தில்
பொருத்தமாகச் சொல்லியிருப்பது சுவை.
நான் நினைக்க, நினைக்க வியப்பை
உண்டாக்கியது மற்றோர் உவமை. இலக்கியங்களில் நேர்மறைக்கு நேர்மறையை உவமை
காட்டுவது, எதிர்மறைக்கு எதிர்மறையை உவமை காட்டுவது என்பது மரபு. ஆனால் ஐயா
அவர்கள் அந்நிலையை மாற்றி, மிகச் சுவையாக ஓர் உவமையைக் கையாளுகிறார்.
தகாத காதல் கொண்டு முல்லையின்
பின்சுற்றுகிறான் மாறன். இதை எளிமையாக, அழகாக விளக்க நினைக்கின்றார்
பாவலர். அதற்கு உவமைகளின் மூலம் விளக்கினால் நன்றாக இருக்குமென்று அவர்
உள்ளம் சொல்கிறது. வலிமையான உவமை வேண்டும். மறுக்கமுடியாத, மாற்று இருக்க
முடியாத உவமை வேண்டும்.
சிந்திக்கிறது அவர் மனம். உவமை பிடிபடுகிறது. என்ன உவமை பாருங்கள்! எத்தனை உவமை பாருங்கள்!
‘கடன்கேட்டார் செல்வரைத்தான் நாடல் போலும்
கதைகேட்பான் தாய்பின்னே சுற்றல் போலும்
நடம்பயில்வார் நாள்தோறும் ஆடல் போலும்
நரிமாறன் முல்லையைத்தான் தொல்லை செய்தான்.’
நாம் அன்றாட வாழ்க்கையில் காணுகின்ற
நடைமுறை நிகழ்வுகள்தான். இருந்தாலும் அவற்றை எதற்கு உவமைகளாக்கிக்
காட்டுகின்றார் பாருங்கள். இதுதான் அவரின் ஆற்றல்.
பாவலர் ஆறு.செல்வன்
Comments
Post a Comment