உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு!
சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத்,
துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க,
வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ,
அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும்,
பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து,
இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா!
குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா!
முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய்,
மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்!
திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு,
என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா?
வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும்,
என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும்,
“என்பாடு” இதுவல்ல என்று நீ சென்றால்,
உன்னோடு முடியாது! நீ மடிந்த பின்னாலும்,
அன்போடு நீ ஈன்ற பிள்ளைகளின் பிள்ளைகள்,
அவர்மூலம் உருவான உன்வழித் தோன்றல்கள்,
பண்பாடு இல்லாத பீழையர் செயலால்,
என்றாவ தொருநாளில் கூண்டோடு மடிவார்கள்,
அப்போது யார்வந்து காப்பார்கள் சொல்லடா?
உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பென்று,
உண்மையில் உள்நெஞ்சில் உறுதியாய்த் தோன்றினால்,
இப்பொழுதே சிந்தித்து, சிறுமைகளை நிந்தித்து,
உன்விரல் மை மூலம் மாற்றத்தை விதைத்திடு!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Comments
Post a Comment