க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
2/5
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:
வயல் வேலைக்குச் செல்பவள் முல்லை. காலை
விடிவதற்கு முன்பே வேலைக்குச் சென்று விடுகிறாள். இதையும் பாவலர்
விட்டுவைக்கவில்லை தன் உவமைத்திறத்தால். பாருங்கள்,
‘காய்க்குலையில் பழவண்ணம் வாரா முன்னம்
கனிகொறித்துச் சுவைபார்க்கும் அணிலைப் போல’
விடிவதற்கு முன்பேயே வேலைக்கு வந்துவிட்டாள் முல்லை என்கிறார் பாவலர்.
ஒரு காட்சியில், முல்லையையும் மாறனையும்
ஐயப்பட்டுக் காவலர்கள் பிடித்துவிடுகிறார்கள். முல்லைக்கும், மாறனுக்கும்
தப்பான உறவிருப்பதாக முடிவுசெய்கிறார்கள். முல்லையோ எவ்வளவோ எடுத்துக்
கூறியும் நம்ப மறுக்கும் அவர்கள் அவளை ஒரு விலைமகள் என்றே முடிவு
செய்கின்றனர், பேசுகின்றனர். அந்த உரையாடலில் வந்து விழும் உவமைகளை என்னால் எடுத்துக் கூறாமல் இருக்க முடியவில்லை. அதிலே ஓர் இடத்தில் காவலன் ஒருவன் முல்லையை
விடிந்தவுடன் விலைபோக விளைந்திருக்கும்
காய்கறி என்கிறான். மரம்,செடி, கொடிகளில் காய்,கறிகள் விளைவது இயற்கை.
அவற்றை அந்த மரமோ, செடியோ, கொடியோ சுவைப்பதில்லை, புசிப்பதில்லை.
மக்கள்தாம் பறித்துச், சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலபேர் விளைவித்து விற்பனையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட
காய்கறிகள் தாங்கள் விலைபோக வேண்டும் என்பதற்காகவே இரவு முழுக்க தங்களை
ஊட்டமிக்கவைகளாக மாற்றிக்கொண்டு, விடிந்ததும் பச்சைப் பசேலென்று சந்தைக்கு
வருகின்றனவாம்
தாங்கள் நல்ல விலைக்குப்
போகவேண்டுமென்று. அதைப், பணத்திற்காகத் தங்கள் உடலை விற்கும் பரத்தையர்க்கு
ஒப்புவமையாகக் காட்டுகின்றார் பாவலர். பரத்தையர்கள் பகல் முழுவதும் நன்கு
உண்டு, உறங்கி, உடலைத் துாய்மை செய்து, மாலை நேரத்தில் மணத்தைப்
பூசிக்கொண்டு தெருவுக்கு வருவார்களாம் ஆண்களிடம் விலைபோக. அத்தகைய பெண்ணாக
முல்லையைக் கொச்சைப் படுத்துகிறான் அந்தக் காவலப் பாவி.
‘விடிகின்ற அதிகாலை விலையைச் சொல்ல
விளைகின்ற காய்கறியாய் ஆனாய் போலும்’
காய்கறியை விலைமகளுக்கு ஒப்பிடும் கற்பனை நல்ல சுவைமிகுந்தது.
இந்த நூலில் நாம் காணுகின்ற மற்றொரு சிறப்பு, கையாளப்படுகின்ற உவமைகள் பெரும்பாலும் தற்காலப் பயன்பாட்டுப் பொருட்களை வைத்தே உருவாக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இருசக்கரக் கன்னெய் வண்டி, கணிப்பொறி, குழல்விளக்கு, சொடுக்கி, வருமான வரி, இப்படியாக இன்னும்….
ஒரு காட்சியில் கதைத்தலைவி முல்லை
அதிர்ச்சியுற்று மயக்கமாகி விடுகிறாள். ஒரு பெண் மயக்கமாகி விழுந்து
கிடக்கும் காட்சியைப் பெரும்பாலும் புலவர் பெருமக்கள் துவண்டுவிட்ட கொடி,
சாய்ந்துவிட்ட சிலை என்றுதான் உவமைப் படுத்துவார்கள். ஆனால் நம் பாவலர் தான் ஒரு புதுமை விரும்பி என்பதை இந்நூலில் நிறுவுகிறார். அவர் என்ன கூறுகிறார் பாருங்கள்:
‘கன்னெய்தான் தீர்ந்துவிட்ட வண்டி யைப்போல்
கவின்முல்லை இயலாமற் கிடந்தாள் வீழ்ந்து.’
இன்றைய இயல்பு வாழ்க்கையில், இருசக்கர
வண்டியில்லாதவர்களுக்கு இந்த உலகமே சுற்றாது. அத்தகைய தேவையாகி விட்டது.
ஒருநாள் வண்டி பழுதாகி விட்டாலும் நாம் இருகால் இழந்த முடமாகி விடுகிறோம்.
அப்படி வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட இருசக்கர வண்டிக்கு உயிரே கன்னெய்தான்.
கன்னெய் இல்லா விட்டால் அது போகுமிடம் திண்ணைதான். அப்படிக் கன்னெய்
இல்லாது கவிழ்ந்து போன வண்டியை கதைத்தலைவி அதிர்ச்சியுற்று மயக்கமான
நிலைக்கு ஒப்பிட்டுப் பாவலர் எழுதிய வரிகள் புதுமையல்லவா?
மற்றொரு காட்சியில், அண்ணல் வருகிறார்
என்ற செய்தி கூடியிருந்த மக்களிடையே பரவுகிறது. மக்களின் நெஞ்சில்
மகிழ்ச்சி கொப்பளிக்கிறது. இந்த மாதிரிச் சூழலுக்கு இலக்கியங்களில் எவ்வளவோ
உவமைகள் கூறப்பட்டிருக்கின்றன. பால் பொங்குவதாக, தேனாறு பாய்வதாக, இன்ப
மழை பொழிவதாக, நெஞ்சம் கூத்தாடுவதாக.. ஆனால், ஐயா அவர்களின் மனத்தில் இவை
எதுவும் வரவில்லை, இவை யாவும் அவருக்கு நிறைவைத் தரவில்லை. ஆனால், இவற்றை
விடவும் சிறப்பான, சிலிர்ப்பான உவமை ஒன்று அவர் நெஞ்சில் தோன்றுகிறது. அது
உவமை மட்டுமல்ல, உண்மையுங் கூட. என்ன அது…
‘வருமான வரியில்லை இனிமேல் என்றால்
வரையற்ற மகிழ்வடையும் ஊழி யர்போல்’
இதைவிட எளிமையான, தெளிவான உவமை வேறு உண்டென்றால் சொல்லுங்கள்.
அடுத்து இன்னொரு இடத்தில், பரிதி
சாய்ந்து இரவை உறுதி செய்யும் மாலை நேரம். அந்த மாலை நேரத்தின் அழகைக் கூட
உவமை வழியாகத்தான் கூறுகிறார் பாவலர்.
‘பாலில்லாத் தேநீர்போல் பகலும் தோன்றும்’
எவ்வளவு எளிமை. சில பாவலர்கள் புரிகின்ற
பொருளைக்கூட உவமை கூறுகிறேன் என்று குழப்பிவிடுவார்கள். ஆனால் ஐயா அவர்கள்
கையாளும் உவமை, உருவகம் ஒவ்வொன்றும் நாம் அன்றாடம் சந்திக்கின்ற, காணுகின்ற
நிகழ்வாகவே இருக்கின்றது. ஆனால் அதைப் பயன்படுத்துகின்ற இடம்தான்
புதுமையானதாக இருக்கின்றது.
இதுபோன்ற சுவைகள் இந்த நூலில் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. விட்டுவிடப் போகின்றீர்கள். பார்த்துப் படியுங்கள்.
நையாண்டி:
கதையை ஒரேவகையான உணர்ச்சியுடன்
சொல்லிக்கொண்டு செல்லும்பொழுது படிப்போரின் நெஞ்சில் அலுப்புத்
தோன்றிவிடும். எனவேதான் நாடகம் மற்றும் திரைப்படக் கதையாசிரியர்கள்
இடையிடையே நகைச்சுவையை நயமாகப் புகுத்துவார்கள். அதே முறையைப் பாவலர் ஐயா
அவர்கள் இந்தப் பாவியத்திலும் கையாண்டிருக்கிறார். கலையில் மிகவும் கடினமான
கலை நகைச்சுவைக் கலை. இதை நாடகத் துறையில், திரைத்துறையில் உள்ளவர்கள்
நன்றாக அறிவார்கள். பார்த்தவுடன் சிரிப்பை வரவழைத்து விடலாம், ஆனால்
படித்தவுடன் சிரிப்பை வரவழைப்பது மிக,மிகக் கடினம்.
நானும் நாடகத்துறையில் பல ஆண்டுகள்
ஈடுபட்டுள்ளதால் எனக்கும் இந்த உண்மை தெரியும். அதிலும் பாடலில்
நகைச்சுவையைக் கொண்டு வருவது என்பது பாலையில் நீரெடுப்பது, பாறையில்
சாறெடுப்பது போன்றது. ஆனால் அதை ஒரு நூலிழை கூடப் பிசகாமல் சரியாக வடித்து
முடித்துள்ளார் பாவலர் ஐயா அவர்கள்.
தான் விரும்பியவளை அடைய முயல்கின்றான்
எதிர்த்தலைவன். அதில் வெற்றியடைய அவளுடைய கணவன் செம்மலைக் குறைகூறித் தன்
விருப்பத்தை வெளிப்படுத்துகிறான். இல்லற வாழ்விற்குப் பொருத்தமில்லாதவன்
கதைத்தலைவன் என்று கூறும் எதிர்த்தலைவன் கையாளும் உவமையைப் பாருங்கள்:
‘நாவில்லான் ஒலிவாங்கிப் பிடித்தென் செய்வான்?’
இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிப்பு
வந்துவிட்டது. உண்மைதானே. இன்றைய மேடைகளில் நாம் பெரும்பாலும் பார்க்கும்
அவலக் காட்சிதானே இது. நான்கு சொற்கள் நன்றாகப் பேசத் தெரியாதவர்கள் கூட
மேடையேற ஆசைப்பட்டு, வாய்ப்பு வாங்கிப்,பின்பு ஒலிவாங்கிமுன் வந்து பேந்தப்
பேந்த விழிக்கின்ற நகைச்சுவைக் காட்சிகளை நாம் கண்கூடாகக் காணுகிறோம்
அல்லவா? அதை எந்த இடத்தில் பயன்படுத்துகிறார் பாருங்கள்.
– ஆறு.செல்வன்
Comments
Post a Comment