திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்

அணிந்துரை

        அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார்.    இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள்.      அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல்.
        இந்த நூலில் ஐந்து கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரை அறம் பற்றியது. அதில் அறத்தை விளக்குவதற்குத் திருவள்ளுவர் வரை யறுத்த அறவியல் கோட்பாடுகள், பல்வேறு உள்நாட்டு, வெளி நாட்டுச் சட்டவியல் அறிஞர்களின் கருத்துகள், விளக்கங்கள், மேற்கோள்கள் தரப்பட்டுள்ளமை பாராட்டுக்கு உரியது. எஞ்சிய நான்கு கட்டுரைகளும் நான்கு குறட் பாக்கள் பற்றியன.
     இந்த நூலில் பல தனிச்சிறப்புகள் உள்ளன. அவை:
  1. பல் வேறு அறிஞர்களின் – குறிப்பாகத் திருக்குறள் சான்றோர்களின் கருத்துகள் அவர்களது படங்களோடு இடம் பெற்றுள்ளன.
  2. வாழ்க்கை நிகழ்வுகள், வரலாற்று நிகழ்வுகள் பலவும் நகைச்சுவைக்கு உரியனவாக அமைந்துள்ளன. இது நூலுக்கு ஏற்ற சிறப்பாகும்.
  3. ஒரு நூலுக்கு உரை காணும்போது 10க்கும் மேற்பட்ட நகைச்சுவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிந்தனைக் குறுங்கதைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
     நகைச்சுவைகள் அனைத்தும் ‘நகைச்சுவை நகைச் சுவைக்காக’ என்று    இல்லாமல், ‘நகைச்சுவைகள் சிந்தனைக்காக’ என்ற நோக்கிலேயே   முன்வைக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  1. நகைச்சுவை நிகழ்ச்சிகள் நாடகப் பாங்கில் அமைக்கப் பட்டுள்ளன.
  2.   தாம் சொல்லும் கருத்தாக்கத்திற்கு ஏற்றாற் போன்று, தம் கருத்தாக்கத்தை ஆங்காங்கு உரை வீச்சாகப் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள் வழங்கி யுள்ளார்கள்.
  3. ஒவ்வொரு பகுப்பிற்கும் – கருத்தாக்கத்திற்கும் எளிமை சேர்க்கும் நோக்கில் துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  4. தொடர்புடைய குறட் பாக்கள் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டு, அவையும் பொருள் விளக்கங்கள் பெற்றுப் பொலிகின்றன.
8 பல்வேறு துறைச் செய்திகள் ஆங்காங்கே  இடம்     பெற்றுள்ளன.
  1. வேண்டுவன இவை என்றும் வேண்டாதன இவை என்றும் ஆங்காங்கே வாழ்க்கை நெறிமுறைகள் சுட்டப்பட்டுள்ளன.
  2. இயற்கையில் காணும் உயிரினங்களின் செயற் பாடுகள் ஆங்காங்கே கருத்துகளோடு இணைத்துக் காட்டப்பட்டுள்ளன.    .
  3. ‘திருக்குறளை வாழ்வியல் ஆக்க வேண்டும்’ என்பது ஆங்காங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது.
  4. குறட் பாக்களை எப்படிப்  பிரித்துப்   படிக்க     வேண்டும் என்பதை விளக்கும் வகையில் சீர்களைப் பிரித்துச்   சொற்களாக்கி வழங்கப்பட்டுள்ளன. புணர்ச்சிக்கு இலக்காகும் எழுத்துகளைக் காட்டும் வகையினில் ஆங்காங்கே பகர அடைப்புக் குறிகள் இட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
  1. வெளிநாட்டுத் தலைவர்களின் திருக்குறள் பற்றிய கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளமை பாராட்டுக் குரியது.
  2. பொருள் கோள் விரிகளும் வழங்கப்பட்டுள்ளன.
  3. அவ்வவ் குறட் பாக்களுக்கு ஏற்ப மறுபக்கக் குறட்பாக்கள் என்றும் துணைநலக் குறட்பாக்கள் என்றும் வழங்கப்பட்டுள்ளன.
  4. மேற்கோள் பாடல்களும் அவற்றின் பொருள் உரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
  5. நகைச்சுவைகளில் – குறுங்கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்பவே குறட்பாக்களில் உள்ள சொற்களின் அடிப்படையில் பெயர்கள் அமைக்கப் பட்டுள்ளமை வரவேற்புக்குரியன.
  6. இந்த நூல் முழுவதையும் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்களே கணினி அச்சாக்கம் செய்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.
எளிய நடை – ஏற்றமிகு நடை – தனித்தமிழ் நடை – தனித்த நடை என்ற அளவில் இந்த நூலின் நடைப்போக்கு அமைந்துள்ளது.
                 சிந்தனைக்குள் உயர்ந்த
                   சிந்தனையாய்
                   சிந்திப்பார் சிந்தனைக்குள்
                   சிந்தனையாகிச்
                   சிந்தனையைத் தூண்டும்
                   சிந்தனையாய் வந்தணையும்
                   சிந்தனை நூல்
                   திருக்குறள்.
     {திருவள்ளுவர் என்னும் தெய்வ மாமுனிவர் — ப.397]
    என்னும் சிறப்பிற்குரிய திருக்குறளின் சில குறள்களை மேலும் சிந்திக்க வைத்த பெருமை பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்களுக்கு உண்டு.
   திருக்குறளை எனிமையாக்கும் முயற்சியில் இதற்குமுன்  எட்டுத் திருக்குறளை  நூல்களைப் பேராசிரியர் அவர்கள் வழங்கி யுள்ளார்கள். அவ் வரிசையில், இந்தத் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’  என்னும் நூல் ஒன்பதாவது நூலாக உருவாக்கம் பெற்றுள்ளது. அதற்காகத் தமிழ் நிதி, திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்களைப் பாராட்டுன்கிறேன்.
  இது போன்ற நூல்களைக் குறட் பாக்கள் அனைத்திற்கும் அவர்  உருவாக்கம் செய்தால், திருக்குறள் உலகம் பெருமகிழ்வு எய்தும்.  பெரும்பயன் அடையும். அவ்வாறே நூல்களை உருவாக்கம் செய்வார் என்று நம்புகிறேன்; செய்தல் வேண்டும்  என வேண்டு கிறேன். அவரை மனமாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

    
                                   அருள்திரு திருக்குறள் தூதர்
 திருக்குறள் தலைமைத் தூதர்
திருக்குறள் மாமேதை
 பேராசிரியர் முனைவர்  கு.மோகனராசு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்