திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை
அகரமுதல 168, மார்கழி 24, 2047 / சனவரி 08, 2017
கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய
திருத்தமிழ்ப்பாவை
பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு
தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப்
படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர்
வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.
நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.
சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக்
கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப் பாடிய கவிஞரின் ஆற்றல் நம் பாராட்டை வெல்வது.
`பண்டு முளைப்பது அரிசியே யானாலும்
விண்டு உமி போனால் விளையாதாம்’
எனும் ஔவை மொழி செவ்வை மொழி. இதனை நினைவூட்டுவார் போல் ‘யானோர் உமி. உள்ளே நீ அரிசி’
என்று கவிஞர் புனைந்துள்ளார்; தாம் அடக்கமுள்ளவர் என்பதும் மொழியைக்
காப்பவர் என்பதும் மிளிர்ந்து பொருள்தர இயற்றியுள்ளார். அந்தமாம்
இப்பாசுரம் – ஆதியாம் பாசுரம் ஆக அனைத்தும் பயின்று பூரித்தோம் முப்பதும்
தப்பாமே பயில்வோம். பயிலாவிடில் தப்பா(கு)மே !
புதுச்சொல்லாக்கங்கள்,செம்பக்தி,
பீலிப்புள்(மயில்) முதலானவை இன்றைய தமிழுக்கு வலிவுசேர்ப்பவை. மகுடத்
தமிழணங்கை – மங்காத சொல்லாட்சி வாடாத சொற்றொடர் நினைந்து, புனைந்து கற்பனை
வனைந்து போற்றிக் கவிஞர் வேணு. குணசேகரன் தரும் இந்நூல் மரபின் மீள்நோக்கமும் புதுமையும் சேர்ந்த செல்வம். புலர் பொழுதில் தமிழை வாழ்த்து என்கிறார் `பாசுரப் பாவலர்’. தமிழால் முடியும். இந்நூல் பயின்றால் பழம்பண்பாடு வரலாறும் படியும் புதுக்காலை விடியும்!
Comments
Post a Comment