Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்

அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்

45. மடி யொழித்தல்

  1. மடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.
மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும்.
  1. மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.
மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும்.
  1. மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.
மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது.
  1. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.
மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்.
  1. மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.
மடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர்.
  1. மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;
மடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
  1. காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;
மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தல்;
  1. இளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;
மேலும் காலை உணவும் இரவு உணவும் பாதி வயிறு நிரம்பும்படி உண்ணுதல்;
  1. இரவினல் யாமத் தென்று முறங்குக;
மேலும் நள்ளிரவில் நான்கு மணி நேரம் கண்டிப்பாக உறங்குதல்;
  1. பயனுள சிலசொற் பார்த்துப் பேசுக. மேலும் பயனுள்ள சொற்களைக் கவனத்துடன் பேசுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue