Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல் : வெ. அரங்கராசன்


  திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

111. புணர்ச்சி மகிழ்தல்

தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த
இன்பத்தை, எடுத்துக் கூறுதல். 

(01-10 தலைவன் சொல்லியவை)
  1. கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும்,
      ஒண்தொடி கண்ணே உள.
      கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து,
     தொடுஇன்பம் இவளிடமே உண்டு.
  1. பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை
      தன்நோய்க்குத், தானே மருந்து.
      நோய்க்கு மருந்து வேறு; இவள்தரும்
      நோய்க்கு மருந்து இவளே.
  1. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின், இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு….?
      விரும்பும் மனைவியின் கூடலினும்,
      திருமால் உலகுஇன்பம் இனிதோ…..?
  1. நீங்கின் தெறூஉம்; குறுகும்கால் தண்என்னும்;
      தீ,யாண்டுப் பெற்றாள் இவள்….?
      நீங்கினால் சுடவும், நெருங்கினால்
       குளிரவும், செய்யும்தீ இவளே…..!
  1. வேட்ட பொழுதின், அவைஅவை போலுமே,
      தோ(டு)ஆர் கதுப்பினாள் தோள்.
      விரும்பும் பொழுது, விரும்புபொருள்
       பெறுதல் போன்றது, இவள்இன்பம்.
  1. உறுதோ(று), உயிர்தளிர்ப்பத் தீண்டலால், பேதைக்(கு)
      அமிழ்தின் இயன்றன தோள்.
      கூடும் போதுஎலாம் உயிர்தளிர்ப்பதால்,
      இவள்உடல் அமிழ்தால் ஆனதோ….!
  1. தம்இல் இருந்து, தமதுபாத்(து) உண்(டு)அற்(று)ஆல்,
      அம்மா…! அரிவை முயக்கு.
      இவள்இன்பம் சொந்த வீட்டிலிருந்து
       பகுத்து உண்ணுதல் போன்றது.
  1. வீழும் இருவர்க்(கு) இனிதே, வளிஇடை
      போழப் படாஅ முயக்கு.
      காற்றும் இடைபுகாத் தழுவலே,
        விரும்பும் இருவர்க்கும் இனிது.
  1. ஊடல், உணர்தல், புணர்தல், இவை,காமம்
      கூடியார் பெற்ற பயன்.
      ஊடல், ஊடல் ஓடல்,
      கூடல், காதலர் பெறுபயன்கள்.
  1. அறிதோ(று) அறியாமை கண்(டு)அற்(று)ஆல், காமம்,
      செறிதோறும் சேயிழை மாட்டு.
அறியும்தோறும் அறியாமை தோன்றல்போல்,
சேரும்தோறும் இவளிடம் இன்பம்.

பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்