Skip to main content

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 3 & 4



அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017


திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4


 மூன்றாம் பாசுரம்
தமிழின் உடலும் உயிரும்
ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத்
தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து;
தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச்
செய்தவுயிர்;
மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்!
நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்!
ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது
வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்;
ஆங்காலம்
தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்!
நான்காம் பாசுரம்
சங்கம் வளர்த்த மொழி
வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர்
வெல்வார் செருக்களத்து வேற்றுமண்
வேந்தர்களை;
சொல்வார் அவர்வென்றி தூய புலவோர்,தாம்
இல்லார் எனினும் இனியதமிழ் மாதனத்தார்;
நல்ல மதுரைக்கோன் நட்டமுச் சங்கமதில்
வல்லார் வளர்த்தமுது வண்டமிழை வாழ்த்தாமல்
பொல்லா உறக்கம் புகழாமோ மெல்லியலே!
மெல்லினும் மெல்லியலாள் முத்தமிழே,
எம்பாவாய்!

– கவிஞர் வேணு குணசேகரன்

கவிஞர் வேணு குணசேகரன்
கவிஞர் வேணு குணசேகரன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்