வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி


தாயின் கருவறையில்
தான்படித்த செந்தமிழைக்
கோயில் கருவறைக்குள்
கொண்டுசெல்ல முடியாதா?

பொன்னியில் குளித்த
புனிதத் திருமொழியைச்
சன்னதியில் பாடினால்
சாமிக்கா தீட்டுவரும்?

தேவாரம் பிரபந்தம்
திருவாசகம் அருட்பா
நாவாரப் பாடினால்
நாதன் செவி கேளாதா?

தமிழறியும் பெருமாளும்
தமிழ்க் கடவுள் முருகனும்
அமுதத் தமிழ்கேட்டால்
ஆசிதர மறுப்பாரா?

சொற்றமிழால் பாடென்று
சுந்தரனை வேண்டிநின்ற
நெற்றிக்கண் ஈசனது
நேயர் விருப்பம் எது?

ஒதும் மந்திரங்கள்
உண்டெந்தன் தாய்மொழியில்;
வேதம் தமிழிலுண்டு!
வேற்றுமொழி எதற்கிடையில்?
 – கவிஞாயிறு தாராபாரதி