திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்
‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’
– புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி
ஆய்வுரை
இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை
அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து
எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க
வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற
தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட
திருக்குறள் உலகப் பொதுநூலாக அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த
நூல் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஈரடிக்குள் உலகத்தை அடக்கியது திருக்குறள். அது போல ஐந்து தலைப்புக்களுக்குள் திருக்குறளை அடக்கியது இந்த நூல்.
திருக்குறளுக்கு எளிய உரை, பதவுரை, தெளிவுரை, பொருளுரை, விளக்க உரை எனப்
பல்வேறு உரைகள் வந்துவிட்டன. நகைச்சுவை விளக்க உரை என ஓர் உரையை அழகாக விளக்கமாக வழங்கியுள்ளார் பேராசிரியர் வெ. அரங்கராசன்.
திருக்குறள் விளக்கத்திற்காக உலகப்
பேரறிஞர்கள் காட்டியுள்ள மேற்கோள் உரைகளை எல்லாம் பேராசிரியர் வெ.
அரங்கராசன் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளார். பிளாட்டோ,
அரிட்டாட்டில், பிளாகிடன், கெல்சன், ஃபிராங்கிலின், சியார்சு எர்பர்ட்டு,
இயான் பென்னி குக்கு என உலக அறிஞர்களின் கருத்துகளைக் காட்டியுள்ளார்.
புத்தர், வள்ளலார், காந்தியடிகள், உ.வே.சாமிநாதர், தொடங்கி இந்தியப் பேரறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் காட்டவும் தயங்க வில்லை. திருக்குறள் கருத்துகளுக்கு வலிமை சேர்ப்பதற்காக நாலடியார், பழமொழி நானூறு ஆகிய நூல்களையும் பன்னாட்டுப் பழமொழிகளையும் துணை சேர்த்துள்ளார்.
திருக்குறளின் ஒரு குறள் கூறும் கருத்தை விளக்குவதற்குப் பல நகைச்சுவைக் கதைகளையும் விளக்கத்தையும் வழங்கியுள்ளார் வெ. அரங்கராசன். இந்த முறையிலிருந்தே இவர் ஒரு பேராசிரியர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வகுப்பறையில்
பல விளக்கங்களையும் கதைகளையும் கூறித் திருக்குறளைப் புரிய வைப்பதைப் போல்
திருக்குறள் கருத்துகளை வாசகர்களுக்கு உணர்த்தியுள்ளார் வெ. அரங்கராசன்.
பணி நிறைவு பெற்றபின் இலக்கியப் பணி புரியும் பேராசிரியர்களில் முதல்வர்
என்னும் நிலையைப் பெற்றவர் வெ.அரங்கராசன். அவர் எழுதியுள்ள அத்தனை
நூல்களும் பணி நிறைவுக்குப் பின்னர் எழுதியவை என்பது எண்ணிப் பார்க்கத்
தக்கது.
எளிமை, இனிமை, பொறுமை என்னும் பண்புகளின் இருப்பிடமாக விளங்கும் இவர், தமிழ் இலக்கிய அமைப்புகளில் அவ்வப்போது தோன்றினாலும், திருக்குறள் அமைப்புகளில் தவறாமல் தோன்றுவார். திருக்குறளை வாழ்வியல் நூலாக நாம் கருதுகிறோம். திருக்குறளை வாழ்வாகக் கருதுபவர் பேராசிரியர் வெ.அரங்கராசன். அதனால்தான் திருக்குறளில் மூழ்கி முத்து எடுத்துக்கொண்டே இருக்கிறார். எட்டு முத்துகளை எடுத்து மாலையாக்கி நமக்குத் தந்த இவரது ஒன்பதாம் முத்து இந்தத் திருக்குறள் முழக்கம்.
திருவள்ளுவர் எழுதிய
ஒரே நூல் திருக்குறள். அந்த ஒரே நூலால் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம்
புகுந்துவிட்டார். பேராசிரியர் வெ.அரங்கராசன் எழுதும் அத்தனை நூல்களுக்கும்
ஒரே பொருள் திருக்குறள் மட்டுமே. இந்த ஒற்றைப் பொருளின் உள்ளே உலகச் செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கி உலகச் சிந்தனைகளை உலவவிட்டு வருகிறார்.
ஒரே கல்லூரியில் பணியாற்றி ஒரே
பொருண்மையில் நூல் படைத்து வரும் ஒரே மனிதர் என்னும் தகுதியைப் பெற்றுள்ள
வெ.அரங்கராசன் விரைவில் நூறு என்னும் எண்ணிக்கையை எட்டுவார் என்னும்
நம்பிக்கை ஒளி இவரது ஓயாத உழைப்பில் மின்னுகிறது.
மரபு மாறாக் கவிதைகள், மனம் கவரும் சொற்பொழிவுகள், தெளிவான ஆய்வு நூல்கள்,கிள்ளிக் கிளர்ச்சியூட்டும் நகைச்சுவை என்னும் பன்முகம் தாங்கிய ஒரு முகனாக உலவுகிறார் வெ. அரங்கராசன். இவரது ஒரு முக ஆற்றலால் எதிர்காலச் சமுதாயம் எழுச்சி பெறும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை.
ஐயன் ஏரியில் [ஐயனேரியில்] பிறந்ததால்
பேராசிரியர் வெ.அரங்கராசனை விட்டு அகலாமல் இடம் பிடித்து இருக்கிறார் ஐயன்
திருவள்ளுவர். சென்னை மாநகரில் குடியேறித் திருக்குறள் சிந்தனைகளை
விதைத்து வரும் வெ.அரங்கராசனின் தோட்டத்தில் ஆய்வு நீர்
பாய்ச்சப்படுவதால், வரும் நாளில் அறிவுப் பூ மலரும்; அது அனைத்து
உள்ளங்களையும் பூ மாலையாய் இணைக்கும் என நம்பலாம்.
அறிவு இல்லாமையை வறுமை என்று
திருவள்ளுவர் கூறி யுள்ளார். அதைத் தாண்டி வெ.அரங்கராசன் அறிவு உண்மை வளமை
என்னும் தொடரைக் கூறி அறிவு உடைமையின் பெருமையை உணர்த்தியுள்ளார். இதைப்
போன்று எல்லாக் குறள்களுக்கும் இத்தகைய கூடுதல் விளக்கத்தை இந்த நூல் முழுவதும் காண முடிகிறது. இந்த விளக்கங்கள் அனைத்தும் பேராசிரியர் வெ. அரங்கராசனின் அறிவு உண்மைக்குக் கட்டியம் கூறுகின்றன.
உலகத்தார் உண்டு என்று சொல்லுகின்ற ஒன்றை
இல்லை என்று சொல்லும் மனம் கொண்டவனைப் பேயாகக் கருத வேண்டும் என்று
திருவள்ளுவர் கூறியிருக்கின்றார். இந்தக் கருத்தை விளக்குவதற்காகக்
கொக்குக் குழம்பு வைத்துப் பரிமாறியுள்ளார் பேராசிரியர் வெ. அரங்கராசன்.
கொக்கிற்கு இரண்டு கால்கள் என்று தெரிந்த பண்ணையாரைக் கொக்கிற்கு ஒரே
கால்தான் எனக் குழப்பிய சமையல்காரனை நமக்குக் காட்டி அவன் நின்று
கொண்டிருக்கும் கொக்கிற்கு ஒரே கால்தான் என்று சாதிப்பதைக் காட்டியுள்ளார்.
இந்தக் கதை நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்றாலும்
கொஞ்சம் நெருடல் ஏற்படுகிறது. கொக்கைச் சுடுவதும் அதைக் குழம்பு வைப்பதும்
திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளும் செயல்களா? என்னும் கேள்வி எழத்தான் செய்
கிறது. இருந்தாலும் கதைக்காகத்தானே என்று சமாளித்துக் கொள் ளாம்.
பூமனத்தான், செங்கரும்பன், அருமைநாயகம்,
பேரறத்தான், பண்பரசன், செல்வமலை, ஒழுக்கமணி, பண்புமலை, அன்புமலை, மதிமலை,
இரவல்மணி, செந்தண்மொழியார், பெருஞ்செல்வன், ஈகைப்பண்பன், மதிஎழில்,
அன்பிற்கியாள், மதிமுகில், பண்புத் தலையன், பேரன்புச்செல்வன், பொய்யாமொழி,
பிழையப்பன், மழையப்பன், கலைவண்ணன், அறநெஞ்சன், பொன்வேந்தன், அருள்மொழி,
மாரிவளன், வில்லன், மதிமணி, துட்டுமணி, பட்டுமணி, குட்டுமணி, அறிவுமலை,
அறிவுமணி, நல்லப்பன், வல்லப்பன், இனியமணி, அறிவுச்சுடர், கன்ணுமணி,
அறமுதல்வர், பாரி, மாரி, கண்ணையா, நடைச்செல்வன், அரியன், பெரியன்,
நஞ்சினான், துஞ்சினான், அறிவுக்கொம்பன், வம்பன் — இவை எல்லாம் என்ன என்று
கேட்கின்றீர்களா?
இவை எல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்கள். இந்தப் பெயர்களை எல்லாம் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்
பேராசிரியர் வெ. அரங்கராசன். இப் பெயர்களில் மிகப் பெரும்பான்மையானவற்றை
திருக்குறளில் வரும் சொற்களின் அடிப்படையிலேயே அமைத்துள்ளர் பேராசிரியர்
வெ.அரங்கராசன் என்பது நோக்கத் தக்கதும் பாராட்டுக்கு உரியதும் ஆகும்.
இவற்றில் சில பெயர்களைத்தவிர மீதம் உள்ள பெயர்களைக் குழந்தைகளுக்குப்
பெயர்கள் வைக்கும்போது நாம் நினைவில் வைத்துக்கொண்டு பயன்படுத்தக் கூடிய
வகையில் உள்ளன. இத்தனை பெயர்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்றால்,
ஏறத்தாழ இவற்றில் ஐம்பது விழுக்காட்டு எண்ணிக்கையில் கதைகளையும் இந்த
நூலில் தந்துள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.
இந்த நூல் ஓர் அறிவுக் களஞ்சியம் என்பது
மெய்ப்படுகிறது. இதில் இனிய அறிவுச் செருகலாக உ.வே,சாமிநாதர் பதிப்பித்த
நூல்களின் பட்டியலைத் தந்துள்ளார் வெ.அரங்கராசன். உ.வே. சாமிநாதர் நூறு
நூல்களைப் பதிப்பித்துள்ளார் என்பதை அறிந்த மிரட்சி தீர்வதற்குள் மேலும் பல
மிரட்சிகளைத் தந்துள்ளார் வெ. அரங்கராசன்.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய இயான் பென்னி குக்கு பற்றிய
விவரங்களைப் படிக்கும் போது உண்மையிலேயே மெய் சிலிர்கின்றது. நம் நாட்டில்
நமக்காக அணை கட்டுவதற்காக இங்கிலாந்தில் அவருக்குச் சொந்தமான அனைத்துச்
சொத்துகளையும் விற்றார் பென்னி குக் என்னும் செய்தியும் இதனைத்
திரட்டித் தந்த வெ.அரங்கராசனும்தான் இந்தச் சிலிர்ப்புக்குக் காரணம்.
நூலை இப்படித்தான் எழுத வேண்டும் என்னும் வரையறையைத் தாண்டி, இப்படியும் நூல் படைக்கலாம் என்னும் புதுமையை இந்த நூல் முழுவதும் புகுத்தியுள்ளார் வெ.அரங்கராசன்.
திருக்குறள் கருத்துகளை நகைச்சுவை
வழியாகச் சொல்ல முயன்றிருக்கின்றார் என்னும் எண்ணத்தில் இந்த நூலைப்
படிக்கத் தொடங்கினால், திருக்குறள் கருத்துகளையும் தாண்டி நகைச்சுவைகளையும்
தாண்டி, உலகப் பரப்பில் நம்மை உலவவிடும் புதுமையைக் காண முடிகின்றது.
ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்
என்பார்கள். எனவே தான் பல இதழ்களில் கருத்துப் படங்கள் இடம் பெறுவதைக் காண
முடிகிறது. இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு விளக்கமாக நகைச்சுவைப்
படங்கள் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. கல்கியின் புதினங்கள் மிக அழகிய
வண்ணப் படங்களுடன் வெளி வருவதைக் காண்கிறோம். அந்த வரிசையில் வெ.
அரங்கராசனின் இந்தத் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்‘ என்னும் இந்த நூலில் உள்ள படங்கள் அழகையும் விளக்கத்தையும் வழங்குகின்றன.
கல்வி என்பது அறிவின் தொடக்கம்.
கற்றபின் சிந்தனை என்பது அறிவின் வளர்ச்சி. சிந்தித்தபின் செயல்பாடு என்பது
அறிவின் முதிர்ச்சி. மூன்றாம் நிலையாகிய முதிர்ச்சியை இந்த நூல் முழுவதும்
காண முடிகிறது.
குறள், பொருள், விளக்கம், கதை, கவிதை,
பழமொழி, அறிவுரை, கோட்பாடு எனப் பல திறப்பட்ட விளக்கங்கள் வாயிலாகத்
திருக்குறளை மக்களிடையே எடுத்துச் செல்லும் பெரும்பணியை இந்த நூல்
வாயிலாகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் பேராசிரியர் வெ.அரங்கராசன்.
பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்
பதிவாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனம், தரமணி,
சென்னை–600113
Comments
Post a Comment