மெய்யறம்
இல்வாழ்வியல்
42(2.12).வெண்மை யொழித்தல்
- வெண்மை யறிவினை விடுத்த தன்மை;
வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை;
- ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்;
மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்;
- ஈயவேண் டியவிடத் தீயா திவறல்;
மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்;
- குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்;
மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்;
- கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்;
மேலும் தாம் படிக்காத நூல்களைப் படித்தவர் போலக் காட்டுதல்;
- அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்;
மேலும் மனத்தில் வைத்துக் காக்க வேண்டிய இரகசியத்தை வெளியிட்டுத் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்ளுதல்;
- செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்;
மேலும் ஒருவனுக்கு நன்மை தருவனவற்றைப் பிறர் எடுத்துக் கூறினாலும் செய்யத் தவறுதல்;
- உலகின ருளதென்ப திலதென மறுத்தல்.
மேலும் உலகில் ‘அருள்’ (இறைவன்) என்று ஒன்று இல்லை என்று மறுத்தல் ஆகியவை ஆகும்.
- இன்மையு ளின்மை வெண்மை யொன்றே.
இழிவானவற்றுள் இழிவானது அறிவில்லாமையே ஆகும்.
- ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக.
மேன்மை பொருந்திய நூல்களின் துணையுடன் அறிவின்மையை நீக்க வேண்டும்.
– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment