திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
03. காமத்துப் பால்
14. களவு இயல்
- நாணுத் துறவு உரைத்தல்
காதலர் தம்தம் காதல்
மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்
(01-07 தலைவன் சொல்லியவை)
1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,
மடல்அல்ல(து) இல்லை வலி.
“காதல் வெல்ல, மடல்குதிரை
ஏறுதல்தான் மிகநல்ல வழி”.
- நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும்,
நாணினை நீக்கி நிறுத்து.
“காதல்துயர் பொறாத உடல், உயிர்
மடல்குதிரை ஏறத் துணியும்”.
- நாணொடு நல்ஆண்மை, பண்(டு)உடையேன்; இன்(று)உடையேன்
காம்உற்றார் ஏறும் மடல்.
“அன்று, வெட்கம், வீரம் இருந்தன.
இன்றோ, மடல்ஏறும் நிலையில்”.
- காமக் கடும்புனல் உய்க்குமே, நாணொடு
நல்ஆண்மை என்னும் புணை.
“வெட்கம், வீரம்எனும் தோணியைக்,
காமவெள்ளம் இழுத்துச் செல்லும்”.
- “தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு
மாலை உழக்கும் துயர்”.
“மடல்ஏறும் துயரும், மாலைப்
பொழுதின் துயரும், என்காதலியால்”.
- “மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;
படல்ஒல்லாப் பேதைக்(கு)என் கண்.”
“காதலி நினைப்பால், நள்ளிரவிலும்,
மடல்மேல் ஏறுதலை நினைப்பேன்”.
- கடல்அன்ன காமம் உழந்தும், மடல்ஏறாப்
பெண்ணின் பெரும்தக்க(து), இல்.
“கடல்போல் காமம் நிறைந்தும்,
மடல்ஏறாப் பெண்மையே பெருமை”.
(08-10 தலைவி சொல்லியவை)
- நிறைஅரியர், மன்அளியர் என்னாது, காமம்,
மறைஇறந்து மன்று படும்.
“மனஉறுதியையும் மீறிக், காமம், .
ஊரார் அறிய வெளிப்படும்”.
- அறி(கு)இலார் எல்லாரும் என்றே,என் காமம்,
மறுகின் மறுகும் மருண்டு.
“அறியார் எல்லாரும்”என, என்காமம்
தெருஎல்லாம் சுற்றித் திரியும்”.
- யாம்கண்ணின் காண நகுப, அறி(வு)இல்லார்,
யாம்பட்ட தாம்படா ஆறு.
“யாம்படும் துன்பத்தைப் படாத
அறிவுஇலார்தான், நேரில் சிரிக்கிறார்”.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment