வாழ்ந்து காட்ட வேண்டும்! – அம்பாளடியாள்
வாழ்ந்து காட்ட வேண்டும்!
வலிமையுள்ள மனிதனாகவாழ்ந்து காட்ட வேண்டும் !
எளிமையான வாழ்வுக்கே
இடமளிக்க வேண்டும்!
தனிமையிலும் இனிமை காண
தன்னடக்கம் வேண்டும் !
தரணியெல்லாம் போற்றும் வகை
தயவு நெஞ்சில் வேண்டும்!
கலியுகத்தின் போக்கை மாற்ற
கருணை தம்முள் வேண்டும் !
கடவுள் என்றும் கொண்டாட
கடமை உணர்தல் வேண்டும் !
பழியுணர்வை போக்க வல்ல
பாசம் இங்கே வேண்டும் !
பகைவரையும் மன்னிக்கும்
பக்குவமும் வேண்டும் !
மனித குலம் உயிரினத்தை
மதித்து வாழ வேண்டும்!
மரணம் வரும் என்ற போதும்
மனத்தில் உறுதி வேண்டும் !
எவர் கொடுமை செய்தாலும்
எதிர்த்து நிற்க வேண்டும் !
எதிரிக்கும் வாழ்வளிக்கும்
இரக்கக் குணம் வேண்டும் !
கருவினிலே சுயநலத்தைக்
கலைத்து விட வேண்டும் !
கடவுள் பக்தி நேசமுடன்
கருத்துரைக்க வேண்டும் !
பொதுநலமாய்ச் சிந்திக்கும்
பொறுப்பு மிக வேண்டும் !
பொன்போன்ற மனம் வாழ
பொறுமை காத்தல் வேண்டும் !
– கவிஞர் அம்பாளடியாள்
Comments
Post a Comment