Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்


அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

 

திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

113.  காதல் சிறப்பு உரைத்தல்

தகுதலைவனும், தலைவியும், தம்தம்
மிகுகாதல் சிறப்பை உரைத்தல்.    

(01-05 தலைவன் சொல்லியவை)

  1. பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி
           வால்எயி(று)  ஊறிய நீர்.
       “பணிவு மொழியாளின் வாய்ஊறல்,
         பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.”
  1. உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன,
      மடந்தையொ(டு) எம்இடை நட்பு.
     “உடம்புக்கும், உயிர்க்கும் இடைநிற்கும்
        உறவே, எனக்கும் அவளுக்கும்”
  1. “கருமணியின் பாவாய்! நீ போதாய்;யாம் வீழும்
      திருநுதற்(கு), இல்லை இடம்”.
     “கருவிழிப் பாவையே!நீ போய்விடு;
         காதலிக்கு உரிய இடம்அது”.
  1. “வாழ்தல் உயிர்க்(கு)அன்னள் ஆய்இழை; சாதல்,
      அதற்(கு)அன்னள் நீங்கும் இடத்து.
      “உடன்இருக்கும் போது, உயிர்போல்வாள்;
         பிரிவில், உயிர்பிரிதல் போல்வாள்”.
  1. “உள்ளுவன் மன்யான், மறப்பின்; மறப்(பு)அறியேன்,
      ஒள்அமர்க் கண்ணாள் குணம்.
“போராடும் கண்கள் உடையாளை,
         மறந்தால் அல்லவா, நினைப்பதற்கு….?”
        (06-10 தலைவி சொல்லியவை)
  1. கண்உள்ளின் போகார்; இமைப்பின் பருவரார்;
      நுண்ணியர், எம் காத லவர்.
     “கண்ணுள் இருப்பார்; இமைப்பினும்
        துன்புறார்; எம்காதலர், மிகுநுட்பர்”.
  1. “கண்உள்ளார் காத லவர்ஆகக், கண்ணும்
      எழுதேம், கரப்பாக்(கு) அறிந்து”.
   “மறைவார்”என அஞ்சியே, கண்களுக்குக்
        கருமை தீட்டவும் மாட்டோம்”
  1. “நெஞ்சத்தார் காத லவர்ஆக, வெய்(து)உண்டல்
      அஞ்சுதும், வேபாக்(கு) அறிந்து.
      “நெஞ்சுக்குள்ளே காதலர்; “வெந்துபோவார்”
         என்று, சூடாக உண்ணமாட்டோம்”.
  1. “இமைப்பின், கரப்பாக்(கு) அறிவல்: அனைத்திற்கே,
      எதிலார் என்னும்இவ் ஊர்.
      “இமைத்தால், “மறைவார்”என, இமையேன்;
        “அன்புஇலார்” என, அவர்மேல் பழி”.
  1. “உவந்(து)உறைவர் உள்ளத்(து)உள் என்றும்; இகந்(து)உறைவர்,
      ஏதிலார், என்னும்இவ் ஊர்.
“காதலர், உள்ளத்துள் உள்ளார்”
        “பிரிந்தார்”என ஊரார் பழிப்பார்.
 பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்