கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6
திருத்தமிழ்ப்பாவை
பாசுரங்கள் 5& 6
ஐந்தாம் பாசுரம்தமிழ்மொழி மூலமறியா இறைபோல !
தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா
வானுணரா, வையம் உணரா, தமிழவளை
ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள்
என்றும்,
ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத்
தன்மையளாய்த்,
தோன்றறியா ஞானியாய்த் தோன்றும்
இறையொப்ப,
ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப்,
பன்மொழிகள்
ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின்
கோன்மை இசைத்திடவா கோதையே,
எம்பாவாய் !
ஆறாம் பாசுரம்
தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘
ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ;
நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;
மகரியெழில் முத்துக் குழையணிந்த மானே !
திகிரி மணிவிழி தெள்ளத் திறவாய் !
பகரும் எழுத்தின் கிழத்தியவள் செய்தாள்,
வகைவகையாய்ப் புகழ்நூல்கள்; ஊழி வருமுன்
மகுடத் தமிழணங்கை முற்றோதி உய்ய
நகைமுகளே ! நீராடி வாராயோ, எம்பாவாய் !
– கவிஞர் வேணு குணசேகரன்
Comments
Post a Comment