மெய்யறம்
இல்வாழ்வியல்
43. நெடுநீ ரொழித்தல்
421.நெடுநீர் கால நீள விடுதல்;
நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்;
- ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல்.
மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும்.
- நெடுநீர் குறைபல தருமியல் புடையது.
கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது.
- நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி.
கால தாமதம் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும்.
- நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும்.
மிகுந்த கால தாமதம் அந்தச் செயலையே பயனற்றதாகச் செய்யும்.
- நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக;
கால தாமதம் என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று ஆழமாக எண்ணுதல்;
- நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக;
மேலும் கால தாமதத்தால் வரும் தீமைகளை எண்ணிப்பார்த்தல்;
- எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல்.
மேலும் ஒரு செயலை எந்த சமயத்தில் செய்து முடிக்க வேண்டுமோ அந்த சமயத்தில் செய்து முடித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
- உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல்.
வரும் வேலை சிறந்தது என்று ஏற்கனவே வந்த வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது.
- உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக.
ஏற்கனவே வந்த வேலையைச் செய்து முடித்தபின் வரப்போகும் வேலை குறித்து எண்ணுதல் வேண்டும்.
– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment