கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! – சிவ.சூரிய நாராயணன்
கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்!
கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த
பாடல் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார்
ஏடுதனில் உள்ளம்மை ஈதென்ன விந்தையென்றே
ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை
கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை
வாடும் களித்தே குணசே கரன்தன்னைப்
கூடிக் களித்தே குணசே கரன்தன்னைப்
பாடிடச் சொன்னாயே பாட்டேலோர் எம்பாவாய் !
அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை
மின்னும் பிறையானை விண்ணின் நதியானை
முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில்
கன்னற் கிணையாக்க் கள்ளின் சுவையாகத்
தன்னிகர் இல்லாத தன்மைத்தாய்த் தந்தாரே
மன்னும் உலகிற்கே மாணிக்க வாசகர்
என்றாலும் போதாமல் இன்னும் கவிகேட்டாய்
என்நண்பன் தன்னைத்தான் இன்றேலோர் எம்பாவாய் !
உற்றம் உறவெல்லாம் உன்னோடு தானென்று
பெற்றங்கள் மேய்த்தானைப் பற்றித்தான் பாடல்கள்
வற்றாத மற்றாரும் என்றைக்கும் இன்புறவே
கற்றாரும் மற்றாரும் என்றைக்கும் இன்புறவே
அற்றைக்கே தந்தாளே ஆண்டாள் மறந்தாயோ
கற்றைக் குழல்முடியாய் கன்னித் தமிழுன்னைப்
பற்றித்தான் பாடல்கள் போதெல்லாம் செய்யென்று
சற்றுத்தான் கேட்டாயோ தாயேலோர் எம்பாவாய் !
வங்கித் தொழிலென்னும் வேலை தனைவிட்டார்
தங்கத் தமிழுன்னைத் தான்பாடி நிற்கின்றார்
பொங்கும் உணர்வோடு புத்தம் புதிதாக
மங்காத மாக்கவிதை மண்ணிலிவர் செய்கின்றார்
இங்கிவரைக் காப்பதுவே இன்றுமுதல் உன்கடனாம்
தங்குதடை இல்லாமல் தாரணியில் சீருடனே
எங்கெங்கு சென்றாலும் ஏற்றங்கள் தந்திடுக
சங்கத் தமிழன் தனக்கேலோர் எம்பாவாய் !
கவிஞர் சிவ.சூரிய நாராயணன்
பொதுமேலாளர், இந்தியன் வங்கி, சென்னை
Comments
Post a Comment