Posts

Showing posts from January, 2017

கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்

Image
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      29 சனவரி 2017       கருத்திற்காக.. (கவிஞாயிறு தாராபாரதி 7  & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9  & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம் இல்லை! சிறுங்கற்கள் சேர்ந்தெழுந்த சிகரம் போலே சிந்தனைகள் சேருமெனின் தெரியும் வெற்றி! குறுஞ்செயல்கள் நமையாங்கே கொண்டு செல்லும்! கொண்டசெயல் வேலையல்ல வேள்வி என்றார்! (10) – சந்தர் சுப்பிரமணியன் கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா! – தாராபாரதி

Image
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      29 சனவரி 2017       கருத்திற்காக.. கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா! ‘வழிபாடு தமிழிலா? வரலாமா? – என்று மொழிபேதம் செய்து முட்டுக் கட்டை யிடுவார்! ஒதும்மந் திரத்தில் ஊனமா நம்மொழிக்கு? வேதம்என்ப தென்ன? வெளிச்ச மனம்தானே! திருக்கோயில் மணிஓங்கி தமிழ் பேசாதா? தேவாரத்தமிழ்  இறைவன் செவி ஏறாதா? தாழ்திறவா மணிக்கதவும் தமிழ்கேட்டுத் திறந்ததே! வாய்திறவாத் தமிழனே வழியறியா மயக்கமென்ன? உண்மையில்நீ அஃறிணையா? ஒப்பனையால் உயர்திணையா? கண்ணிமைகடந்து கருமணி களவு போகிறதே! உள்ள எழுச்சியின்றி உறங்கும் தமிழனே பள்ளியறை பாசறையா? பாய்சுருட்டி வா! கருவறையைத் தமிழ்தொட்டால் தீட்டாம்? வாவா கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா!  – கவிஞாயிறு தாராபாரதி

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்

Image
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      29 சனவரி 2017       கருத்திற்காக.. [வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும். மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர். மடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர். மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக; மடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்; காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்; மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், ப...