நடிப்பை நம்பி ஏமாறாதே வீணாகாதே! – பட்டாபு பத்மநாபன்
நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு!
(எண்சீர் விருத்தம்)
விளக்கொளியைத் தேடிவரும் விட்டில் பூச்சி
விழியிருந்தும் விளக்கொளியில் வீழ்ந்து மாயும்
பளபளக்கும் விளக்கொளியில் படத்திற் காக
பலவாறு நடிக்கின்ற நடிகர் பண்பை
விளக்கிநின்றால் வேதனையே மிஞ்சும் தம்பி
விவரமாகச் சொல்வதென்றால் வேடம்! தம்பி
அளந்திடுவார் வாய்கிழிய அன்பர் என்பார்
அடுக்கிடுவார் பணந்தன்னை அறியா வண்ணம்
கொடுக்கின்ற கதைமாந்தர் தன்மைக் கேற்ப
கும்மாளம் அடித்திடுவார் கொஞ்சிப் பேசி
நடிக்கின்றார் நாமெல்லாம் வியந்து பார்ப்போம்
நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு
குடித்திடுவார் கூத்தடிப்பார் வாய்ப்பு வந்தால்
கூடவரும் நடிகையையும் குளிரச் செய்வார்
அடுத்தவரின் கண்களுக்குத் தெய்வ மாக
அம்சமாகத் தோன்றிடுவார் அதுதான் பொய்யே
கணக்கினிலே ஒருதொகையைக் காட்டி நிற்பார்
கருப்பாகப் பெரும்பணத்தைச் சுருட்டி வைப்பார்
பிணக்கேதும் வந்துவிட்டால் படமெ டுப்பார்
பிச்சைவாங்கும் நிலைதன்னை அடையச் செய்வார்
பணத்தினிலே புரண்டிடுவார் படமெ டுப்பார்
பணத்தில்தான் புரண்டிடுவார் சொந்தக் காசை
கணக்காக வைத்திருப்பார் தெரிந்து கொள்வாய்
கற்பனையில் மிதக்காதே உண்மை ஈதே
நடிகர்கள் எப்போதும் நடிகர் தாமே
நடிப்பென்றும் உண்மையாக நடப்பதில்லை
இடித்துரைத்துத் திருத்துகின்ற எம்மைப் போன்றோர்
எடுத்துரைக்கும் சொற்களைத்தான் ஏற்றுக் கொள்வாய்
படிப்பதனால் நிலைஉயரும் பண்பும் கூடும்
பகற்கனவு காணுகின்ற நிலையும் மாறும்
மிடுக்கான வாழ்வுதனை வாழ்ந்து காட்டும்
மேலோனாய் வாழுவதே மேன்மை தம்பி!
Comments
Post a Comment