Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை


arusolcurai_attai+arangarasan

01.அறத்துப் பால்

03.துறவற இயல்

அதிகாரம் 030. வாய்மை    


தீமை இல்லாதவற்றைச் சொல்லலும்,
பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.

  1. வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,
     தீமை இலாத சொலல்.

         எச்சிறு அளவிலேனும், தீமை
         இல்லாதன சொல்லலே வாய்மை.

  1. பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
     நன்மை பயக்கும் எனின்.

     யார்க்கும் குற்றம்இலா நன்மையான
         பொய்யும், வாய்மையின் இடத்தது.

  1. தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,
   தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

         மனம்அறிந்து பொய்ப்பானை, அவனது
         மனச்சான்றே சுட்டு வருத்தும்.

  1. உள்ளத்தால் பொய்யா(து) ஒழுகின், உலகத்தார்
   உள்ளத்துள் எல்லாம் உளன்.

    உள்ளத்தாலும் பொய்யாது உள்ளவன்,
         உயர்ந்தார் உள்ளங்களில் உள்ளவன்.

  1. மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
    தானம்செய் வாரின் தலை.

    ஆழ்மனத்திலிருந்து வாய்மை கூறுவார்,
         தானம்,தவம் செய்வாரின் மேலோர்..


  1. பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை,
     எல்லா அறமும் தரும்.

பொய்பேசாமை புகழ்ஆம்; பொய்யை
         எண்ணாமை அறப்பயன்களைத் தரும்.

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்;பிற
   செய்யாமை செய்யாமை நன்று.

         வாய்மையை வாய்மையாகவே பின்பற்றுதல்,
         அறம்ஆகும்; பொய்த்தல் பொய்ம்மை.

  1. புறம்தூய்மை, நீரான் அமையும்; அகம்தூய்மை,
   வாய்மையான் காணப் படும்.

         உடல்தூய்மை நீரால் அமையும்;
         உளத்தூய்மை வாய்மையால் ஆராயப்படும்.

  1. எல்லா விளக்கும், விளக்(கு)அல்ல; சான்றோர்க்குப்,
     பொய்யா விளக்கே விளக்கு.

மனஇருளை மாற்றும், “பொய்யாமை
         விளக்கே”, மெய்யான விளக்கு.

  1. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்(து)ஒன்றும்,
     வாய்மையின் நல்ல பிற.

                   யாமே ஆராய்ந்தவற்றுள் வாய்மையைக்
                     காட்டிலும் நல்அறம், வே[று]இல்லை.


-பேராசிரியர் வெ. அரங்கராசன்
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்