வகுப்புரிமை நாள் (14.8.1950) சிந்தனை…. இழிவுக்குரியதல்ல இட ஒதுக்கீடு!
அகில இந்திய பா.ச.க. தலைவர்
திரு.அமித்சா கலந்துகொண்ட மதுரை மாநாடு முதன்மை வாய்ந்தது என்ற பீடிகையோடு
‘தி இந்து’ (தமிழ்) ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை (12.8.2015)
நயன்மைக்கும்(நியாயத்துக்கும்), சமூகநீதிக்கும் எதிரான வித்துகளை
உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.
எந்த இட ஒதுக்கீட்டின் பெயரால் சமூகநீதியை நிலைநாட்ட முயல்கிறோமோ அதே இட
ஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது. “சாதி ஒழிப்பைப்பற்றி
வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம் தொடக்கப்
பள்ளிகளிலேயே உன் சாதி என்ன? என்று பகிரங்கமாகக் கேட்டு வடுவை மேலும்
கிளறிக் காயத்துக்குப் புத்துயிர் கொடுக்கிறது” என்ற குற்றப்பத்திரிகை
படிக்கிறது கட்டுரை.
எடுத்த எடுப்பிலேயே தடுமாற்றத்தைக் காண முடிகிறது கட்டுரையில்.
“அரசமைப்பு சாதி ஒழிப்பைப்பற்றி வாய்
கிழியப் பேசுகிறது” என்று கூறப்பட்டுள்ளதே – இந்தியாவின் அரசமைப்புச்
சட்டம் சாதி ஒழிப்பைப்பற்றி எந்த இடத்தில் சொல்லி இருக்கிறது என்பதையும்
எடுத்துக்காட்டியிருக்க வேண்டாவா?
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17 ஆவது பிரிவு கூறுவதுதான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் தம்
வாழ்நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்கூட
(திசம்பர் 1973) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும்
தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்பதற்கு மாற்றாகச் சாதி ஒழிக்கப்படுகிறது
என்று திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று தீர்மானத்தையே
நிறைவேற்றினார். 1957 இல் இதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு
பகுதியைக்கூட எரிக்கும் போராட்டத்தை நடத்தியதுண்டு.
இட ஒதுக்கீட்டில் சாதி அடிப்படை
என்கிறபோது தாண்டிக் குதிப்பவர்கள் அடிப்படையிலேயே அரசமைப்புச் சட்டத்தில்
சாதிக்குப் பாதுகாப்பு இருப்பதுபற்றி மூச்சு விடுவதில்லை என்பதைக்
கவனிக்கவேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் ஆர்.எசு.எசு. அமைப்பின் தமிழக முகம் என்று
கட்டுரையாளரால் முகவரி கொடுக்கப்பட்டுள்ள திரு.குருமூர்த்தியே அந்த மதுரை
மாநாட்டில் சாதிக்கு வக்காலத்து வாங்கித்தானே பேசியிருக்கிறார்?
ஆர்.எசு.எசு. முகமான அவர் ஆர்.எசு.எசு.இன் குருநாதரான கோல்வால்கரின்
கருத்தைத்தான் எதிரொலிக்கிறார்.
“புத்த மதம் சாதி அமைப்பு முறையைத் தகர்த்து பலவீனப்படுத்தியதால்தான்
முகம்மதியர்கள் மிகச் சுலபமாக வென்று விட்டார்கள்” என்று கோல்வால்கர்
கூறியுள்ளாரே!
சாதி ஒருபுறம் இருக்கட்டும்; தீண்டாமையே சேமகர மானது என்று மறைந்த
சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி கூறவில்லையா? காந்தியார் அவரைச்
சந்தித்து எவ்வளவோ கேட்டுக்கொண்டும் சங்கராச்சாரியார்
ஏற்றுக்கொள்ளவில்லையே.
சாதிக்கு மூலமாக இருக்கக்கூடிய ஊற்றுகளையும் பத்திரமாகக்
காப்பாற்றிக்கொண்டு, அவற்றின்மீது ஒரு துளித் தூசுகூட விழாமல்
பார்த்துக்கொண்டு, எந்த சாதியின் காரணமாகக் கல்வி வாய்ப்பு
மறுக்கப்பட்டதோ, அந்த சாதியையே ஏணியாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளித்தால்,
சாதியைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு
கேட்கலாமா? என்று கேட்பதற்குக் காரணம், சமூக அநீதிமீது முரட்டுத்தனமான
அபிமானத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சாதியும் – தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும் என்பதிலே அக்கறை இருந்தால், அதன் மூலஆற்றலான மதத்தின் வேருக்கல்லவா சென்றிருக்கவேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட
ஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் (15-4) கொண்டு வரப்படுவதற்கு முதன்மைக்
காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். அதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு
வரப்பட்டபோது சாதி அடிப்படையில் அது இருக்கக்கூடாது – பொருளாதார
அடிப்படையில்தான் இருக்கவேண்டும் என்ற திருத்தத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட
வாக்கெடுப்பில், பொருளாதாரத்திற்கு ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்குகளும்,
எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
திரு.குருமூர்த்திக்கு நண்பராக
இருக்கக்கூடிய ஒருவர் அழைத்தார் என்பதற்காக ஒரு மாநாடு என்பது
வேடிக்கையானது. யாராவது சிக்கமாட்டார்களா என்ற ஏக்கம் புரிகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சில குறிப்பிட்ட
பிரிவினர்களை ஒன்றிணைத்து தேவேந்திர குலத்தவர் என்று அறிவித்துவிடவேண்டும்;
இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம் என்ற வேண்டுகோள் தனியாள்களால்
முன்வைக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தவிர்க்கப்பட்டு,
தேவேந்திரர்குலம் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டால், இவர்களைப் பிடித்த
இழிவு அக்கணமே அழிந்து ஒழிந்துவிடுமா? வளர்ச்சி தலைதூக்கி நிற்குமா?
தாழ்த்தப்பட்டவர்களை அரிசனங்கள் என்று
சொன்னதால், அவர்கள் மீதான தீண்டாமை – இழிவு ஒழிந்து போய்விட்டதா? பெருமாள்
போய் – பெத்த பெருமாள் ஆனதுதானே மிச்சம்!
ஒரு பொருளை எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த
இடத்தில்தானே தேடவேண்டும் என்பார் தந்தை பெரியார். சாதியும்,
தீண்டாமையும் சமயம் சார்ந்தது என்பதைத் தெரிந்திருந்தும், அவற்றிலிருந்து
வெளியேற கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், மருந்தில் குறிப்பிட்ட அளவு
நஞ்சு சேர்ப்பதுபோல, அம்மை நோயைத் தடுக்க அம்மைக் கிருமிகளைப்
பயன்படுத்துவதுபோல சாதியைப் பயன்படுத்தினால், சமூக அறிவியல்படி அது எப்படி
தவறாகும்?
இட ஒதுக்கீடு வேண்டா; தேவேந்திரகுலம் என்று சொல்லி விட்டால், ஆண்டாண்டு
காலம் ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கல்வியில் முன்னுக்கு
வந்துவிடுவார்களா? சாதி இழிவுதான் நீங்கிவிடுமா? இட ஒதுக்கீடு
இருந்ததால்தான் கல்வியில், வேலை வாய்ப்பில் அவர்கள் முன்னேறாமல்
போய்விட்டார்களா?
தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது (29.5.2009).
அதன் பலன் என்ன?
அதன் பலன் என்ன?
இந்த இட ஒதுக்கீடு கிடைப்பதற்குமுன் அருந்ததியர் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடங்கள் 13. 2008-2009 இல் பெற்ற இடங்கள் 29.
மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபின் 2009-2010 இல் கிடைக்கப் பெற்ற இடங்கள் 56.
அதேபோலப் பொறியியல் கல்லூரிகளில் 2007-2008 இல் பெற்ற இடங்கள் 744. இட
ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009-2010 ஆம் ஆண்டில் பெற்ற இடங்கள் 1165.
இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபின் மருத்துவக் கல்லூரியில் 93 விழுக்காடு மிகுந்துள்ளது.
இந்த வளர்ச்சிக் கூடாது என்பதுதான் மதுரை மாநாட்டின் நோக்கமா? ஒடுக்கப்பட்ட
மக்களின் முதுகெலும்பை முறிக்க ஒடுக்கப்பட்டவர்களையே கருவியாக்கும்
சூழ்ச்சியல்லவா இதன் பின்னணியில் நெளிகிறது.
இதில் என்ன கொடுமையென்றால் மனுதர்மத்தை எடுத்துக் காட்டியதுதான்.
“கோவிலுக்குள் போக முடியாதவர், பசுவைத் தெய்வமாக வணங்காதவர், மாட்டிறைச்சி
உண்பவர் தன் இனத்தில் இறப்பவரின் உடலைத் தாமே அடக்கம் செய்பவர், ஒருவரைப்
பார்த்தாலோ, தொட்டாலோ தீட்டு என்று கருதப்படுபவர் ஆகியோரே தீண்டத்தகாத
சாதியினர் என்கிறார் மனு. ஆனால், எங்கள் சமூகம் இவற்றில் எந்தக்
கூறுகளிலும் இடம்பெறாத சமூகம்” என்று பெருமைப்பட்டுப் பேசியுள்ளார்
மாநாட்டு ஏற்பாட்டாளரான தோழர்.
இதன் பொருள் என்ன?
மாட்டுக் கறி உண்பவர் உள்பட – அவர் கூறும் நிலையில் உள்ளவர்கள்
தீண்டத்தகாதவர் என்று மனு கூறுவதை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்? இது
ஆர்.எசு.எசு.இன் பச்சையான குரல் அல்லவா!
மற்றவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும், நாங்கள் தேவேந்திரர் என்று மார்தட்டுவது – நெருப்புக்கோழி மனப்பான்மையல்லவா!
அண்ணல் அம்பேத்கர் இந்த ஏணிப்படி சாதி அமைப்பைத்தான் (Graded Inequality)
சூழ்ச்சியைத்தான் அம்பலப்படுத்தினார். இந்தச் சூழ்ச்சிக்கு ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த 2015 ஆம் ஆண்டிலும் பலியானது எவ்வளவுப்
பெரிய கொடுமை!
பா.ச.க.வின் அகில இந்தியத் தலைவர் இதனை வரவேற்கிறார் – பாராட்டுகிறார் என்பதை எளிதாகவே புரிந்துகொள்ளலாம்.
ஆர்.எசு.எசு. – பா.ச.க. வின் இந்துத்துவா கோட்பாடு என்பது சாதியைக் கட்டிக் காப்பதுதானே!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சிந்தனையை உடையதுதானே?
மண்டல் குழுவின் பரிந்துரையின்படி மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் தலைமையமைச்சராக இருந்த போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது (7.8.1990) அதுவரை வெளியிலிருந்து அவ்வாட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பா.ச.க. தன் ஆதரவை விலக்கிக்கொண்டு சமூக நீதிக் கொள்கையை உடைய ஆட்சியைக் கவிழ்த்ததா – இல்லையா?
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சிந்தனையை உடையதுதானே?
மண்டல் குழுவின் பரிந்துரையின்படி மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் தலைமையமைச்சராக இருந்த போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது (7.8.1990) அதுவரை வெளியிலிருந்து அவ்வாட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பா.ச.க. தன் ஆதரவை விலக்கிக்கொண்டு சமூக நீதிக் கொள்கையை உடைய ஆட்சியைக் கவிழ்த்ததா – இல்லையா?
பா.ச.க.வின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான சி.பி.தாக்கூர் 16 ஆவது
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே இட ஒதுக்கீடு தேவையில்லை; நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து முடிவெடுப்போம்! (செய்தி 28.4.2014) என்று
அறிவித்தாரே!
பா.ச.க. தலைவர் திரு.அமித்சா – மாநாட்டைக் கூட்டியவரின் வேண்டுகோளை
வரவேற்று இருக்கிறார்; தலைமையமைச்சருடன் பேசி ஆவன செய்வதாகக் கூறியுள்ளாரே
– இது சரியானதுதானா? மனத்துக்குள் இந்துத்துவா அலைகள் வீசினாலும், இது
சாத்தியமானதுதானா? அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தப் போகிறாரா?
அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள Justice Social என்று தொடங்குகிறதே – அதனைத் தூக்கி எறிவார்களா? முனைவர் அம்பேத்கருக்கு ஒன்றும் தெரியாது – தங்கராசுக்குத்தான் தெரியும் என்று விளக்கம் சொல்லத் தயாராகிவிட்டார்களா?
அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள Justice Social என்று தொடங்குகிறதே – அதனைத் தூக்கி எறிவார்களா? முனைவர் அம்பேத்கருக்கு ஒன்றும் தெரியாது – தங்கராசுக்குத்தான் தெரியும் என்று விளக்கம் சொல்லத் தயாராகிவிட்டார்களா?
ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் கை வைத்துப் பார்க்கட்டும் – என்னாகு மென்று யாருக்குத்தான் தெரியாது?
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் – ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளர்களா? இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் யார்?
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்
வரவிருக்கிற இந்தக் காலகட்டத்தில், சமூகநீதியின் வளமான தமிழ் மண் தக்கப்
பாடத்தை உரியவர்களுக்கு அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
12.8.2015 தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு 23.4.2015 இதே
தமிழ் இந்து ஏட்டில் இட ஒதுக்கீடு கோட்டாபற்றியது மட்டுமல்ல என்ற தலைப்பில்
வெளிவந்துள்ள ஒரு கட்டு ரையில் பதில் இருக்கிறது – அது இதோ:
சமூகநீதிக்கான
நடவடிக்கை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான், மேல் சாதிகளைச்
சேர்ந்த இளைஞர்கள் காலணிகளுக்குப் பூச்சு போடுவது
நாடிக்குழலை(ஃச்டெதாசுகோப்பை) அணிந்து தெருக்களைக் கூட்டுவது போன்ற
போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
* * *
இட ஒதுக்கீட்டால் சாதி வேற்றுமைகள் போகவில்லையே, எதற்கு இன்னும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு?
என்னும் கேள்விக்கு விடை தரும்போது இவ்வளவு கொடுத்தும் போதவில்லையே எனவே, மேலும் தேவைப்படுகிறது என்பதையே மறுமொழியாக அளிக்கவேண்டும். இராணுவக் கொள் முதலில் கையூட்டும்(இலஞ்சமும்), ஊழலும் இருக்கிறது என்பதற்காக இராணுவத்தையே கலைத்து விட முடியாது இல்லையா?
என்னும் கேள்விக்கு விடை தரும்போது இவ்வளவு கொடுத்தும் போதவில்லையே எனவே, மேலும் தேவைப்படுகிறது என்பதையே மறுமொழியாக அளிக்கவேண்டும். இராணுவக் கொள் முதலில் கையூட்டும்(இலஞ்சமும்), ஊழலும் இருக்கிறது என்பதற்காக இராணுவத்தையே கலைத்து விட முடியாது இல்லையா?
– இந்தக் கருத்துகளை ஆய்ந்து எழுதியவர் தில்லிப் பல்கலைக் கழகச் சமூகவியல்
பேராசிரியர் சதீசுதேசு பாண்டே; அந்தக் கட்டுரை வெளிவந்ததும் இதே தமிழ்
இந்து ஏட்டில்தான் 23.4.2015 (பக்கம் 8).
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
Comments
Post a Comment