திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

arangarasan_thirukkural_arusolurai_attai
01.அறத்துப் பால்                  
02.இல்லற இயல்                
அதிகாரம் 013. அடக்கம் உடைமை

   ஐந்து புலன்களையும் அடக்கி,
   முந்து நல்வழியில் நடத்தல்.

  1. அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,
     ஆர்இருள் உய்த்து விடும்.

       அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;
       அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.

  1. காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,
     அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.

       உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,
       உயரிய பொருளாய்க் காக்க.

  1. செறி(வு)அறிந்து, சீர்மை பயக்கும், அறி(வு)அறிந்(து),
     ஆற்றின் அடங்கப் பெறின்.

       அறிவால் சிந்திக்க வருகின்ற
       நிறைவான அடக்கமே, சிறப்பு.

  1. நிலையில் திரியா(து), அடங்கியான் தோற்றம்,
     மலையினும் மாணப் பெரிது.

       நிலைதிரியாது, அடங்கியான் உயர்வு,
       மலையைக் காட்டிலும் உயர்வு.

  1. எல்லார்க்கும், நன்(று)ஆம் பணிதல்; அவர்உள்ளும்,
     செல்வர்க்கே செல்வம் தகைத்து.

       பணிதல், எல்லார்க்குமே நல்லதுதான்;
       செல்வர்க்கோ, மற்றும்ஓர் செல்வம்.

  1. ஒருமையுள், ஆமைபோல் ஐந்(து)அடக்கல் ஆற்றின்,
     எழுமையும், ஏமாப்(பு) உடைத்து.

       ஆமைபோல், ஐந்து புலன்களை
       அடக்கினால், எப்பிறப்பிலும் பாதுகாப்பே.

  1. யா,காவார் ஆயினும், நா,காக்க; காவாக்கால்,
     சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

       நாஅடக்கம் இல்லான், சொல்குற்றத்திற்[கு]
       ஆளாவான்; துன்பத்தையும் ஆள்வான்.

  1. ஒன்றானும் தீச்சொல், பொருள்பயன் உண்டாயின்,
     நன்(று)ஆகா(து) ஆகி விடும்.

       ஒரேஒரு தீச்சொல்கூட, நல்லதையும்,
       கெட்டதாய் மாற்றும்; கெடுக்கும்.

  1. தீயினால் சுட்டபுண், உள்ஆறும்; ஆறாதே,
     நாவினால் சுட்ட வடு.

       தீயினால் சுட்டபுண், உள்ஆறும்;
       நாவினால் சுட்டபுண், ஆறாது.

  1. கதம்காத்துக், கற்(று),அடங்கல் ஆற்றுவான் செவ்வி,
  அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

        சினம்நீக்கிக், கற்று, அடங்கியானை
       அடைய, அறமே வழிபார்க்கும்.
 – பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்