நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்
நான் அயல்நாடுகளில்
தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல
நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில்.
நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில்
அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப்
பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி
செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய
மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும்
கப்பலில் ஏற்றி, அந்த நாட்டுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டன. அனுப்பும் முன்
இங்கேயே ஓரளவு, பொருத்திப் பார்த்து, எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப்
பார்த்துவிட்டோம். அதற்காகத்தான் நான் அங்கு பல மாதங்களாக எனது பணியைச்
செய்துவருகின்றேன். அந்த நாட்டில் போய்ச் சேர்ந்தபின், அங்கே முழுமையாகப்
பொருத்திப் பார்த்ததில், எல்லாம் நன்றாகத் தான் இருந்தன; இயக்கத்திலும்
குற்றமில்லை; உற்பத்தி பண்ணப்படும் உருக்குத் தகடுகளுக்கும் ஒரு குறையும்
இல்லை. ஆயினும் ஒரு பிறழ்வு (deviation), நான்கு வரிசைகளாக உள்ள
உற்பத்தி-எந்திரங்களின் அமைப்பு, வரைபடத்தில் உள்ளமாதிரி இல்லை. இடம், வலம்
மாறியிருந்தன. (எப்படி இப்பிழை ஏற்பட்டது என இங்கே விளக்கினால், மிக
நீளும்.).
இந்தக் குறை பற்றி, என்னிடம்
வாடிக்கையாளர் காரணம் கேட்டனர். நான் எதனால் இந்தக் குறையை என்னால்
கண்டுபிடிக்கமுடியாமல் போனது என விளக்கம் அளித்தேன் (மொழிக் குழப்பம்,
உள்நாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள வேற்றுமைகள் என்ற இன்ன பிற
காரணங்கள்). அதனால் எனது வேலை தப்பியது; நான் வேலை பார்க்கும் வெளிநாட்டு
நிறுவனத்தின் மானமும் தப்பியது.
ஆயினும், சில வாரங்கள் இது பற்றிய
உசாவல்கள், கூட்டங்கள், இரு நாட்டுக்குமிடையே பொறியாளர்களும், மேலாளர்களும்
போகவரவுமாக ஒரே அமளியாக இருந்து, ஓயத் தொடங்கிய நேரம் அது.
திரும்பவும் தொடக்கத்திற்குச் செல்வோம்.
எனது அறையில் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா. அந்த அறை மிகவும்
நீளமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும். அறையை அடைத்துக் கொண்டு ஒரு
நீண்ட மேசை. அதன் இருபுறமும் பத்து, பத்து நாற்காலிகள். நான் தலையிடத்தில்
அமர்ந்து, அடுத்த கப்பலில் ஏற்றி அனுப்ப ஆயத்தமாக இருக்கும்
எந்திரங்களுக்குச் சான்றிதழ்களைச் சரி பார்த்துக்கொண்டும், கையொப்பமிட்டுக்
கொண்டும் இருக்கிறேன். மேசை நிறைய கட்டுக் கட்டாக தரக்கட்டுப்பாட்டு
ஆவணங்கள். நேரம் ஏறத்தாழ காலை 11 மணி. இன்னொருமுறை தேனீர் குடிக்கலாமா எனச்
சிந்தித்தவாறு வேலையில் மூழ்கியிருந்தேன்.
வாசலில் ஒருவர் வருவது போலத் தெரிந்தது.
தலையைத் தூக்கி, யார் எனப் பார்க்கிறேன். நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவின் தலைவர் (அவர் கீழே 80 பொறியாளர்கள் இருக்கிறார்கள்) தயங்கியவாறு
நிற்கக் காண்கிறேன். ‘வாருங்கள், வாருங்கள், ஏன் நிற்கின்றீர்கள், உள்ளே
வாருங்கள்’ என அவர் மொழியில் கூறுகின்றேன்.
‘இல்லை, உற்பத்திப் பிரிவின் மேலாளர்கள் வந்துள்ளனர்’.
‘வரட்டுமே, இங்கு தான் நிறைய நாற்காலிகள்
உளவே, அனைவரையும் வரச் சொல்லுங்கள்’ எனக் கூறியவாறு, எனது மனம் வேகமாகச்
சிந்திக்கிறது. இன்னும் இந்த வேலை முடிய சில வாரங்கள் உள்ளனவே; ஏதாவது
பிரிவு விழா எனது அறையிலேயே நடத்த வந்திருக்கிறார்களா,என்ன! ஏன், இந்த
அவசரம்!’ என எண்ணிக்கொண்டே, அவரையே பார்க்கின்றேன்.
‘எங்கள் ஆலையின் தலைமை மேலாளரும் வந்துள்ளார், மேலும் அனைவருக்கும் இங்கே அமர இடமும் இல்லை’ என்கின்றார்.
இவ்வளவு நேரம் அமர்ந்தவாறு பேசிக்
கொண்டிருந்த நான், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தேன். உலகப் புகழ்
பெற்ற அந்த ஆலையில் ஏறத்தாழ 5000 ஊழியர்கள். அதன் தலைமை மேலாளரை இந்த
ஒப்பந்தம் பற்றிப் பேச முதன்முதலில் கூட்டம் நடந்தபோதுதான்
சந்தித்திருக்கிறேன். அதுவும் ஓராண்டுக் காலம் ஆனது. அதன் பின்னர்
எங்கேயாவது வழியில்தான் பார்த்து, ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிப்பது
உண்டு. அவருக்கும் எனக்கும் வேறு தொடர்பு கிடையாது. எனவே, பதறிப் போய்,
எனது இருக்கையிலிருந்து எழுந்தவன், வாசலுக்கு விரைகின்றேன். இதற்குள், எனது
அறையில் கிட்டத்தட்ட 10 அல்லது 12 பேர் வந்து, நாற்காலியில் அமராமல், அதன்
பின்னால் அறையின் சுவர்கள் ஓரமாக நிற்கின்றனர். அவர்களை இடிக்காமல்,
வாசலுக்குச் செல்கின்றேன். வாசலில் நின்றவர்கள் வழிவிடுகின்றார்கள். அங்கே,
தாழ்வாரத்தில் வெறும் தலைகளாகத்தான் தெரிகின்றன . 40 பேரா, 50 பேரா,
சொல்லமுடியவில்லை, உற்றுப் பார்த்தால் சிலர் அறிமுகம் ஆனவர்கள்; வேறு பலர்
பற்பல பிரிவுகளின் பொறுப்பாளர்கள். சிலரை நன்றாக அறிவேன். பலரைப் பார்த்தது
உண்டு ஆனால் பழக்கம் இல்லை. எனக்குத் தலை சுற்றியது. என்ன ஆயிற்று?
எனக்குப் பயமானது.
தரக்கட்டுப்பாட்டின் தலைவர் எனக்கு நன்கு
அறிமுகம் ஆனவர். இனிய நண்பரும் கூட. பலமுறை நான் வெளி
உற்பத்திச்சாலைகளுக்கு செல்லும்போது, சில சமயம் என்னுடன் பயணம் செய்வார்.
அவர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பேசத் தொடங்கினார். ஆங்கிலமும் அவர்
மொழியும் மாறி மாறிப் பேசினார்.
‘திருவேலன் ஐயா, நாம் ஒருவரை ஒருவர் நன்கு
அறிவோம். உற்பத்தி ஆகும் எந்திரங்களை நாங்களும் நீங்களும் சேர்ந்துதான்
சரிபார்ப்போம். ஆனால், இம்முறை ஒரு பிறழ்வு நடந்து விட்டது. ஆனாலும்,
இதனால் இறுதியான உற்பத்திப் பொருளுக்கு எந்தக் குறையும் கிடையாது. இதை
உங்கள், எங்கள் வாடிக்கையாளரும் ஏற்றுக்கொண்டனர். போதாதற்கு, நாங்கள்
எங்கள் உத்தரவாதத்தை இரட்டிப்பாகத் தருகின்றோம் என உறுதி செய்து, நமது
வாடிக்கையாளரும் மிகவும் களிப்பாக உள்ளனர். இந்த நிலை ஏற்பட்டதற்கு,
முழுக்க முழுக்க நாங்களே காரணம். தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.
ஆயினும், ஆயினும், (அவர் நாத் தழுதழுக்கத் தொடர்கின்றார்) திருவேலன்
ஐயாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்த இந்நிகழ்வு காரணமாகி விட்டது.
இதற்கு, இந்த உற்பத்திச்சாலையில் இருக்கும் அனைவர் சார்பாக, அனைத்துப்
பிரிவுத் தலைவர்களும், எங்களின் தலைமை மேலதிகாரியும் தங்களிடம் வருத்தம்
தெரிவிக்கவும், மன்னிப்பு வேண்டவும் இங்கு வந்திருக்கிறோம்’ என்று அவர்
கூறக் கூற, எனது கண்களில் கண்ணீர் நிரம்பியது. யாருடைய உருவமும் எனது
பார்வையில் தெரியவில்லை. என்னால் கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல்,
பேச்சும் வராமல், ஒவ்வொருவரையும் கையைக் குலுக்கியவாறு விடை கொடுத்தேன்.
இதை எழுதும்போது, அந்தக் காட்சி என் மனக்கண்ணில் வருகின்றது. எனது கண்களும்
திரும்பவும் கலங்குகின்றன. உலகத்திலேயே எந்தநாட்டில் இது நடக்கும்!
அடுத்த நிகழ்வுக்கு, அப்படியே மேற்குப் பக்கமாகச் செல்வோம்.
ஐரோப்பாவின் வடக்குப் பக்கம் இருக்கும் பனிஅடர்ந்த நாடு அது. நான்
இருக்கும் நிறுவனம் ஒரு தென் அமெரிக்க நாட்டின் நீர்-மின்நிலையத்திற்கு
எந்திரங்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. நான் அந்த நாட்டுக்காக, எனது
நிறுவனம் சார்பாக தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராக அங்கு பணி செய்கின்றேன்.
நான் தங்கியிருக்கும் விடுதியில் வசதிகள்
இருந்தாலும், நீண்ட நேரம் அமர்ந்து எனது அறிக்கைகளை எழுதவோ, பெரிய
வரைபடங்களை விரித்து ஆராயவோ வசதியாக இல்லை. அப்போது கணினிகள் கிடையா. எனவே,
அலுவலக நேரத்திற்குப்பிறகும், வேறு யாரும் இல்லாவிட்டாலும், நான்
தொடர்ந்து எனது இருக்கையிலேயே இருக்கவும், காலத் தாழ்வாக விடுதிக்குத்
திரும்பவும் எனக்கு சிறப்பு இசைவு இருந்தது.
ஒரு நாள் இப்படித்தான் எனது
இருக்கையிலேயே அமர்ந்து எனது எழுத்துப் பணியைச் செய்துகொண்டிருந்தேன்.
அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்; நான் மட்டும் தனியாக எனது வேலையில்
மும்முரமாக இருக்கிறேன். அங்கு 10 அல்லது 11 மணிக்குத்தான் இருட்டத்
தொடங்கும். அதனால், எனக்கு விடுதிக்கு நடந்துசெல்வதில் பயம் இல்லை.
திடீர் என ‘அலோ’ எனக் குரல் கேட்டது. தலை
நிமிர்த்து பார்க்கின்றேன். சீரிய உடை அணிந்த ஒருவர் என்னைப் பார்த்துப்
புன்னகைத்தவாறே எனது மேசைக்கு அடியில் உள்ள குப்பைக் கூடையை எடுக்க
முயல்கின்றார். உடனே நான் சற்றே நகர்ந்து அவர் கூடையை எடுக்க ஏதுவாக
அமர்கின்றேன். ‘வேலை அதிகமோ’ எனப் புன்னகையுடன் வினவியவாறே, காலி செய்த
கூடையை எனது மேசை அருகில் வைத்து விட்டு, அடுத்த குப்பைக்கூடையை நோக்கிச்
செல்கின்றார்.
நான் அவரை இப்போதுதான் நன்கு
கவனிக்கின்றேன். அகவை கிட்டத்தட்ட 40 இருக்கலாம். மிக நேர்த்தியான உடை.
கழுத்தில் அலங்காரச் சுருக்கு. மேற்கத்தியப் படங்களில் வரும் ஒரு
கதைத்தலைவன் போன்ற தோற்றம். ‘அடடா, என்ன இது!. இவ்வளவு நேர்த்தியாக உடை
அணிந்து, குப்பை அள்ளும் வேலை பார்க்கின்றாரே’ என வியந்து போனேன். இவருக்கு
என்ன சம்பளம் கொடுப்பார்களோ என்றும் மயங்கினேன்.
அடுத்த நாள் காலை, அலுவலகத்தில்
எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்குங்கால், நான் எனது
வேலைக்கு ஒருங்கிணைப்பாளராகப் பணி புரியும் மேலாளரைப் பார்க்கப் போனேன்.
முந்தைய மாலைப்பொழுது நான் பார்த்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
‘உங்கள் நிறுவனத்தில் குப்பை எடுப்போர்கூட இப்படி உள்ளாரே ‘ என வியந்து
சொன்னேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் மேலும் விவரங்களைக்
கேட்டார். சிறிது சிந்தனை செய்துவிட்டுச் சொன்னார். ‘நீங்கள் கண்டது எங்கள்
நிறுவனத்தில் ஓர் இயக்குநராக இருப்பவர். அவர்தம் துணைவியார், இங்கு
பகுதிநேரப் பணியாளராகச் சில மணி நேரம் வேலை செய்கின்றார். இயக்குநர் தனது
வேலையை முடித்திருக்கக் கூடும். மனைவியின் வேலையில் பங்கு கொண்டால்,
இருவரும் ஒன்றாக விரைந்து வீடு திரும்பலாம் என்ற எண்ணத்தில் அவர் தனது
மனைவியின் வேலையைச் செய்திருப்பார் போல’ என விளக்கினார். எனது வியப்பு
பன்மடங்கானது. இயக்குநர் மனைவி தனது கணவர் அலுவலகத்திலேயே
தூய்மைப்படுத்தும் பணியைச் செய்வதிலேயோ, அந்தக் கணவர் தனது மனைவிக்காக
குப்பைப் பெட்டியைக் காலி செய்வதிலேயோ உயர்வுதாழ்வு அவர்களும்
பார்க்கவில்லை; உடன்பணி புரிவோரும் கருதவில்லை. உழைப்பின் பெருமை என்று நாம் படிக்கிறோமே, அதை அங்கு கண்ணால் கண்டு வியப்பில் மூழ்கினேன்.
(பின் குறிப்பு: முதல் நிகழ்வு நடந்த
இடம் சப்பான் எனப்படும் நிப்போன் நாட்டில்; நிறுவனம்: இட்டாச்சி கப்பல்
மற்றும் பொறியியற்சாலை, ஓசாகா. நிகழ்ந்த ஆண்டு: 1984. இரண்டாம் நிகழ்வு,
நார்வே நாடு, நிறுவனம்: கவெர்னர். நிகழ்ந்த ஆண்டு: 1980. பழங்கதைதான்!)
– பொறி. இலக்குவனார் திருவேலன்
தியாகராசர் பொறியியற்கல்லூரி, மதுரை
மேனாள் மாணாக்கர்(நுழைவு 1959) பொன்விழா மலர்
பக்கம் 140-143
மேனாள் மாணாக்கர்(நுழைவு 1959) பொன்விழா மலர்
பக்கம் 140-143
Comments
Post a Comment