உழைப்பு உயர்வுக்கு அழைப்பு – வெ. அரங்கராசன்
உழைப்பு ஊக்கத்தின் விழிப்பு….
உழைப்பு பிறப்பின் ஓர்உறுப்பு….
உழைப்பு சமுதாயப் பொறுப்பு….
உழைப்பு இல்லாப் பிறப்பு, இறப்பு….
உழைப்பு இன்றி இல்லை உயர்வு….
உழைப்பு தருமே உடல்நலக் காப்பு….
உழைப்பு ஒப்பிலா எதிர்காலச் சேமிப்பு….
உழைப்பு இன்றேல், எல்லாரிடமும் பல்இளிப்பு….
உடன்வந்து உட்கார்ந்து கொள்ளும் அவமதிப்பு….
உழையார்க்கு உண்ணும் உரிமையும் பறிப்பு….
உலகமும் அளிக்காது மன்னிப்பு; மறப்பு….
உழைப்பு இல்லாத இருப்பு, தப்பு….
உழைப்பு நிறைந்தால் நிறையாது கொழுப்பு….
உழையார் உடலில் நோயின் படையெடுப்பு….
உழைப்பு மலர்ந்தால் பற்பல படைப்பு….
உனக்காக இறுதிவரை உழைக்கும் செருப்பு….
உணர்த்திடும் அதுஉனக்கோர் நல்ல படிப்பு….
உழைப்பை நோக்கி உள்ளத்தைத் திருப்பு….
உதயமாகும் விருப்பு; உடன்பல சிறப்பு….
ஊற்றெடுக்கும் வியர்வையில் இல்லை உப்பு….
உண்மையில் அதுதான் உவப்பு; இனிப்பு….
களைப்பைக் களையும் மருந்து, உழைப்பு…
வளைத்துப் போட்டால் நடக்கும் பிழைப்பு….
உழைப்பார் வீட்டில் எரியும் அடுப்பு….
உண்டபின் வயிற்றில் உண்டாகும் செரிப்பு….
வாழ்க்கை முழுதும் வாழும் சிரிப்பு….
உழைப்புக்கு உறவாகும் உலகப் பரப்பு….
இடைவிடா உழைப்பால் வாழ்வை நிரப்பு….
கிடைக்கும் சிகரத்தின் வாயில் திறப்பு….
கனவை நனவாக்கும் கடின உழைப்பு….
அதனால் வாக்கையில் வரும்ஒரு பிடிப்பு…..
“முடியும்.. முடியும்” என்ற நினைப்பு….
எதையும் முடித்திடும் இதயத் துடிப்பு….
உழைப்போடு உண்மை கலந்த சந்திப்பு….
நிகழ்ந்தால் இன்பத்தின் விரிப்பு; பூரிப்பு….
வெறுப்பு பழிப்பு பரபரப்பு பரிதவிப்பு….
எப்போதும் அண்டாத களிப்பு, உழைப்பு….
உழைப்பால் உருவாகும் ஒப்பிலாச் சுறுசுறுப்பு….
வாழ்க்கை முழுதும் வாழ்வாகும் விறுவிறுப்பு….
ஊக்கம் உழைப்புக்கு ஆக்கத் துணைஇருப்பு….
சாதனைப் படகுக்கு உழைப்பு, துடுப்பு….
சோதனை நெரிப்பு சுற்றிலும் வளைப்பு….
என்றாலும் தோன்றாது நெஞ்சில் மலைப்பு….
சிதையாத தன்னம் பிக்கைச் சேர்ப்பு….
விதையாகும் விடாமுயற்சி ஏற்பு; ஆர்ப்பு….
இவையே உழைப்புக்கு உரமூட்டும் இணைப்பு….
மகிழ்வூட்டும் அணைப்பு; மாறாப் பிணைப்பு….
உழைப்புஓர் வியப்பு; சோம்பலுக்கு நெருப்பு….
பெருமையும் புகழும் நடத்தும் அணிவகுப்பு….
தழைத்தோங் கும்,மனச் செழிப்பு; பணமுடிப்பு….
உழைப்புக்கு எங்கும் இல்லை ஓர்ஒப்பு.
திருக்குறள் தேனீ
பேராசிரியர் வெ. அரங்கராசன்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி — 628 502
கைப்பேசி: 98409 47998
பேராசிரியர் வெ. அரங்கராசன்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி — 628 502
கைப்பேசி: 98409 47998
Comments
Post a Comment