எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்
அகரமுதல 177, மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017
எல்லாம் கொடுக்கும் தமிழ்!
என்னயில்லை நம்தமிழில் ஏன்கையை ஏந்தவேண்டும்
இன்னும் உணரா திருக்கின்றாய் — நன்முறையில்
பொல்லாத தாழ்வுமனம் போக்கியுள்ளே ஆய்ந்துபார்
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
எள்ளல் புரிகின்றாய் ஏகடியம் பேசுகின்றாய்
உள்ள துணரா துளறுகின்றாய் — உள்நுழைந்து
கல்லாமல் தாழ்த்துகிறாய் காண்கதொல் காப்பியத்தை
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
எந்த மொழியிலுமே இல்லா இலக்கணமாம்
நந்தமிழில் மட்டுமுள்ள நற்பொருளாம் — செந்தமிழர்
நல்லொழுக்க வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டியிங்கே
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
ஐந்தாய் நிலம்பகுத்தே ஆன்ற திணைதுறையைப்
பெய்து கருஉரியைச் சேர்த்தகத்தில் — கொய்திட்ட
வெல்மறத்தை நல்புறத்தில் வைத்தார்! நிலப்பண்பை
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
எட்டுத் தொகையில் எழில்பத்துப் பாட்டினில்
கொட்டிக் கருத்தைக் கொடுத்துள்ளார் — அட்டியின்றி
நல்பதினென் கீழ்க்கணக்கில் நல்லறத்தை சொல்லியதால்
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
காப்பியங்கள் பேரைந்தும் காணும் சிறுவைந்தும்
கோப்பாக வாழ்வியலைக் கொண்டிருக்கும் — தோப்பினிலே
நல்ல கனிகளினை நாம்பெறுதல் போல்உலகிற்(கு)
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
எந்தக் குறிப்பையும் ஏற்றளிக்கும் கூகுல்போல்
முந்திநிற்கும் சங்க இலக்கியங்கள் — சிந்தனையில்
வெல்ல முடியாத வெற்பிமையம் போல்நின்றே
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
நங்கையிடம் தூதாய் நரியைப் பரியாக்கி
மங்கைக் குயிர்கொடுத்த பாசுரங்கள் — பொங்குவைகை
நல்கரைக்கு மண்சுமக்க நாதனையே ஈர்த்தமொழி
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
சீர்த்தகுரல் கைக்கிளையும் சீர்துத்தம் ஏழோடும்
ஆர்த்தசுரம் பன்னிரண்டும் ஆழ்பண்கள் – நூற்றோடும்
வல்ல துளைநரம்பில் வாசிக்க வாய்த்தயிசை
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
வானத்தில் ஊர்தியினை வாரிதியில் கப்பலினை
ஞானத்தில் உள்அணுவை நன்கியக்கி — வானமதில்
நல்கதிரை பூமிசுற்றும் நற்செய்தி விஞ்ஞானம்
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
எப்படிநாம் வாழவேண்டும் என்றுரைத்தும் ஆட்சியினை
எப்படிநாம் செய்யவேண்டும் என்றுரைத்தும் — காட்சியாக
சொல்லியலாக் காதலினைச் சொல்லும் திருகுறள்போல்
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
ஆட்சியிலே கல்வியிலே அங்காடிப் பேச்சினிலே
சூட்டும் குழந்தைப் பெயரினிலே — நாட்டிடுவோம்
வெல்லத் தமிழ்மொழியை வேறென்ன வேண்டிய
எல்லாம் கொடுக்கும் தமிழ் !
சிறகு, சூன் 11, 2016
Comments
Post a Comment