கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி)
கவிஞாயிறு தாராபாரதி 17 & 18
கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மைகாணாமல் போனதுபார்! கழிவே எங்கும்!
அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை
அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும்
பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும்
பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர
உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு!
ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17)
விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின்
விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்!
மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட
மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?
கண்ணதனை இமையுரசக் காயம் உண்டோ?
கண்ணீரால் கொப்பளிக்கும் கன்னம் உண்டோ?
பெண்ணுளத்தின் ஊடலதைப் புரிய வைக்கப்
பெருங்கவிஞன் சொன்னதிவை! புதுமை அன்றோ? (18)
– சந்தர் சுப்பிரமணியன்
கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்
(தொடரும்)
Comments
Post a Comment