கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18
பதினேழாம் பாசுரம்
தமிழர் வீரக் குலத்தவர்
தாழாது வாழ்ந்த தமிழ்க்குடி மாண்மறத்தால்
வீழாத கூர்வேல், வாள் வெங்களத்து ஊடார்த்து
வேழம், பரி, பகைவர் வீழ்த்திப் பொருதுயர்ந்தார்;
ஏழை எனினுமொரு கோழையல்லா ஆண்குலத்தார்,
வாழாக் குழவியினை வாள்கீறி மண்புதைத்தார் ;
ஆழி கடந்துநிலம் ஆணை செல,வென்றார்;
பாழாய் உறங்குதியே! பாரோர்க் கிவையுணர்த்தக்
கீழ்வான் சிவக்குமுனம் கீர்த்திசொல் எம்பாவாய்!
பதினெட்டாம் பாசுரம்
நெஞ்சம் அஞ்சாத தமிழ்ப்பெண்டிர்
சிறுகைவேல் ஈந்தே செருமண் புகுத்தி,
உறுபோர் மகன்முதுகில் உற்றான்சொல் கேட்டே
அறுத்தெறிவேன் மார்பையென ஆர்த்தாள்; உவந்தாள்,
மறத்தமிழ்ப் பெண்ணொருத்தி; முன்வந்த வேங்கை
முறத்தைக்கை யேந்தித் துரத்தினளோர் நங்கை;
திறத்தை உணர்த்தித் தமிழ்மகளிர் நெஞ்சம்
புறத்தாளும் பான்மையிலே புத்தெழுச்சி காண
மறப்பாலைத் தாய்தருவாள் வாழ்த்திடவா, எம்பாவாய் !
Comments
Post a Comment