Skip to main content

தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்

தமிழ்த்தாய் வணக்கம் 1-5


நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு
வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப்
பலகாலந் தொட்டுப் பருவங் குலையா
திலகுதமிழ்த் தாயே இனிது

என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென
நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று
முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர்
இதழ்வாழும் தாயே இனிது

உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி
இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க
ஆதித் தமிழே அழியாத தத்துவமே
சோதிப் பொருளே துதி.

காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ்
சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத்
தெய்வ அருளும் திருவும் இலங்குமணிப்
பைந்தமிழே வாழ்த்துமென் பாட்டு

பொங்கல் படைத்துப் புதுமகிழ்ச்சி வெள்ளத்தில்
எங்கும் தமிழர் இனிதிருக்கத்-தங்கத்தாய்ச்
செந்தமிழே கன்னித் திருவேஉன் சீர்பரப்பிச்
சிந்தை மகிழ்வோம் சிரித்து!

-பாவலர் நாரா. நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்