Skip to main content

கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்




கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு)

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி.   ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன்.
  கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் மேலாளராகப் பணியாற்றினாலும், தமிழின்மேல் தீராக்காதலும் வேட்கையும் கொண்டவர்.. சென்னையில் உள்ள பல்வேறு தமிழ் மன்றங்கள் நடத்தும் கவியரங்கங்களில் பங்கேற்றும், சில கவியரங்கங்களில் தலைமை தாங்கியும் வருகிறார். கவிதை, கதை, கட்டுரை, நயவுரை போன்ற பல்வேறுபட்ட  படைப்புகளை அவர் தொடர்ந்து படைத்து வந்தாலும், கவிதையே அவரது தலைப்பிள்ளை. இவர், மரபுக் கவிதைகளிலும்  புதுக் கவிதைகளிலும்  இணையான சிறப்பான தடம்பதித்துள்ளவர்.
.
 இவரது கவிப்புலமைக்குத் திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம் தான் நடத்திய கவிதைப்போட்டிகளில் வென்றமைக்காக, இரு வருடங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வழங்கியுள்ளது. இதுவரை ‘கண்ணதாசன் கவிநயம்’  எனக் கட்டுரை நூல் ஒன்றையும், பல்வேறு யாப்புகளில் வேறு வேறு கோணங்களில் 6 கவிதைத்தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் அவரது பனித்துளிக்குள் ஒரு பயணம் என்ற கவிதைத்தொகுப்பு நூல், ‘கவிதை உறவு’ அமைப்பு வழங்கும், 2016 ஆம் ஆண்டுக்கான, இரண்டாவது சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றுள்ளது.  பல மாத/வார இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
   இதழ்ப்பணியிலும் ஈடுபட்டு, ‘இலக்கியவேல்’ என்னும் இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு மேல் வெளியிட்டு வருகிறார்.  படைப்பாளர்கள் பலரை அறிமுகப்படுத்துவதுடன்  விருதாளர்களையும் ஆன்றோர்களையும் தமிழ்நலத்தலைவர்களையும் சந்தித்து அவர்களின்  நேர்காணலுரைகளைச் சிறப்பாக வெளியிட்டு வருகிறார்.
  இவரது படைப்புகள் அகரமுதல இதழிலும் அவ்வப்பொழுது வந்து கொண்டுள்ளன.
   வானுவம்பேட்டையிலுள்ள திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தில் வைகாசி 13, 2042 / 26.05.2012 அன்று  நடைபெற்ற தாராபாரதி 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இக்கவிமலைரைப் படைத்துள்ளார்.
   கவிமலரின் 23ஆவது நிறைவுமலர் இது.
எழுத்துக்குள் வேள்வித்தீ ஏற்றி வைத்தே
எளியோரின் ஏற்றத்துக் கிலக்கை வைத்தார்!
பழமைக்குள் புதுமைதனைப் பகுத்து வைக்கப்
பாட்டுக்குள் காட்டுத்தீப் பதுக்கி வைத்தார்!
விழுதுக்குள் புதுக்கருத்தை விளைய வைத்து
விளைவாகும் ஞானத்தை விருந்தாய் வைத்தார்!
முழத்துக்குள் இவ்வுலகை முடக்கும் தாரா
மொழிகின்ற கவியென்றும் வாழ்க! வாழ்க! (23)
(நிறைவு)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue