திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20


பத்தொன்பதாம் பாசுரம்
 தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க
அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க,
முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் ,
வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம்
பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே !
நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல்
வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் !
கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும்
கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய்,
எம்பாவாய் !

இருபதாம் பாசுரம்
 துறைதோறும் உயர்ந்திருந்த தமிழர்
கலமொதுங்கத் தூண்விளக்கு, கோட்டங்கள், வேந்தன்
நிலமெழும்பும் மாமனை, கல்லணை, கோவில்
தலமிளிரும் ஆற்றல் பொறியியல் மேன்மை;
வலமிடம் ஏகுங்கோள் ஈர்க்கும் கதிரின்
நிலைநேரிற் சென்றளந்தாற் போன்ற திறமை;
உலகின் இசைவளர்த்த ஓங்கு தமிழ்ப்பண்;
கலைகள், உயர்கணிதம், நோய்தீர்க்கும் ஞானம்,
தலைமைநிலை கண்டார் தமிழரேகாண், எம்பாவாய் !
 (தொடரும்)
கவிஞர் வேணு குணசேகரன்
கவிஞர் வேணு குணசேகரன்