திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்





திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி


திருக்குறள் அறுசொல் உரை

3.காமத்துப் பால்

 15.கற்பு இயல்

  120. தனிப்படர் மிகுதி


பிரிந்து  தனித்து  இருக்கும்
   தலைவியிடம்  படரும்  மிகுதுயர்

(01-10 தலைவி சொல்லியவை)                   
  1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே
      காமத்துக் காழ்இல் கனி.
காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல்,
விதைகள் இல்லாச் சுவைப்பழம்.

  1. வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு
      வீழ்வார் அளிக்கும் அளி.
காதலியர்க்குக் காதலர் காட்டும்
பேர்அன்பு, வாழ்வார்க்கு வான்மழைபோல்.

  1. வீழுநர் வீழப் படுவார்க்(கு) அமையுமே,
     “வாழுநம்” என்னும் செருக்கு.
காதலரால் காதலிக்கப்படுநர்க்கே
“வாழ்கிறோம்” என்னும் பெருமிதம் ஆம்.

  1. வீழப் படுவார் கெழீஇஇலர், தாம்வீழ்வார்,
      வீழப் படாஅர் எனின்.
இல்லறத்தார், ஒருவரை ஒருவர்
விரும்பாவிடின், உறவு இல்லாரே.

  1. நாம்காதல் கொண்டார், நமக்(கு)எவன் செய்பவோ?
      தாம்காதல் கொள்ளாக் கடை.
காதல் கொள்ளாத காதலர்,
என்ன இன்பத்தைச் செய்திடுவார்?

  1. ஒருதலையான் இன்னாது, காமம்;காப் போல,
      இருதலை யானும் இனிது.
காவடித் தண்டின் சமச்சுமைபோல்,
இருபக்கக் காதல்தான் பேர்இன்பம்.

  1. பருவரலும், பைதலும், காணான்கொல்? காமன்
      ஒருவர்கண் நின்(று)ஒழுகு வான்.
ஒருவரிடமே இயங்கும் மன்மதன்,
காதல் நோயை அறியானோ?

  1. வீழ்வாரின் இன்சொல் பெறாஅ(து), உலகத்து,
      வாழ்வாரின் வன்கணார் இல்.
காதலர்தம் இன்சொல்லைப் பெறாதார்,
ஞாலத்தில் பெரும்கொடியார் ஆவார்.

  1. நசைஇயார், நல்கார் எனினும், அவர்மாட்(டு)
      இசையும், இனிய செவிக்கு.
காதலர் அன்புஇலார் ஆயினும்,
அவர்புகழ் கேட்டல், இனிமைதான்.

  1. உறாஅர்க்(கு) உறுநோய் உரைப்பாய்; கடலைச்
      செறாஅஅய்; வாழிய! நெஞ்சு.
நெஞ்சே! பிரிந்தார்க்கு என்துயரைச்
சொல்லு; கடலைச் சினவாதே.

பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue