Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்

 

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் 


திருக்குறள் அறுசொல் உரை
  1. காமத்துப் பால்
 15.கற்பு இயல் 
  1. பசப்புஉறு பருவரல்

பிரிந்த தலைவி, தன்உடலின்
நிறமாற்றம் கண்டும், வருந்துதல்.

(01-10 தலைவி சொல்லியவை)        
  1. நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன்
      பண்புயார்க்(கு) உரைக்கோ பிற?
பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை
படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்?

  1. அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என்
      மேனிமேல் ஊரும் பசப்பு.
காதலர் தந்தார் என்னும்
தகுதியால், உடல்முழுதும் நிறமாற்றம்.

  1. சாயலும், நாணும், அவர்கொண்டார்; கைம்மா(று)ஆ
      நோயும், பசலையும், தந்து.
      அழகும், நாணமும் பறித்தார்;
துயரும், பசலையும் கொடுத்தார்.
.
  1. உள்ளுவன் மன்யான்; உரைப்ப(து) அவர்திறம்ஆல்;
      கள்ளம் பிறவோ பசப்பு?
அவரையே, நினைப்பேன்; பேசுவேன்;
எனினும், கள்ளப்பசலை என்மேல்.

  1. உவக்காண், எம் காதலர் செல்வார்; இவக்காண்,என்
      மேனி பசப்(பு)ஊர் வது.
பார்அங்கே, காதலர் போகிறார்;
பார்இங்கே, மேனியில் பசலை.

  1. விளக்(கு)அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
      முயக்(கு)அற்றம் பார்க்கும் பசப்பு.
விளக்கு அணைவதை இருளும்,
பிரிவைப் பசலையும், எதிர்பார்க்கும்.

  1. புல்லிக் கிடந்தேன்; புடைபெயர்ந்தேன்; அவ்அளவில்,
      அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
தழுவல்விட்டு நகர்ந்தேன்; உடனே,
தழுவிக் கொண்டதே பசலை.

  1. “பசந்தாள் இவள்”என்பது அல்லால், “இவளைத்
      துறந்தார் அவர்”என்பார் இல்.

“பசலையாள்” என்றுஎனைப் பழிப்பார்;
“பிரிந்தார்”என, அவரைப் பழியார்.

  1. பசக்கமன் பட்டாங்(கு)என் மேனி, நயப்பித்தார்,
      நல்நிலையர் ஆவர் எனின்.
காதலர் நல்நிலையில் இருப்பார்எனில்,
மேனியில் பசலை ஏறட்டும்.

  1. பசப்(பு)எனப் பேர்பெறுதல் நன்றே, நயப்பித்தார்,
      நல்காமை தூற்றார் எனின்.
பிரிந்தாரைப் பழியார் என்றால்,
“பசலையள்” என்றும் பேர்பெறலாம்.
 
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்