Skip to main content

கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை


கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை

தலைப்பு-கல்லாடம், இ.சூசை :thalaippu_kalladam
புலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே! வணக்கம்.
பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம்
சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம்.
வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது.
கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே! எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம்.
கல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று.
நேயர்களே!
நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது
நன்றி மறப்பது நன்றன்று
செய்ந்நன்றி மறக்கலாமா? வள்ளுவம் எச்சரிக்கும்.
வள்ளுவம் எச்சரித்ததைக் கல்லாடம் வழிமொழிகிறது.
நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல்
என்னும் குன்றா வாய்மை” என்பது கல்லாடம்.
எது அழியாத உண்மை? உதவி செய்தவருக்கு மறுஉதவி செய்யாததே தவறு. அவருக்குத் தீங்கு செய்யலாமா? ‘பிழைத்தோர்’ என்கிறார். அவருக்கு உய்வு இல்லை என்பது அழியாத உண்மை ‘குன்றாவாய்மை’ என்கிறது கல்லாடம்.
நேயர்களே! நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். ஏன்?
1. உணவு, செல்வம்
2. பன்முக அறிவு
3. நிறைந்த உள்ளம்
4. நாட்டு நடப்புகள் அறியும் தன்மை
இவற்றைத் தருவது கல்வி மட்டுமே!
அளக்க என்று அமையாப் பரப்பின தானும்
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறைமுகத்தொடு பயிலுத லானும்
நிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் கற்க
என்பது கல்லாடம் 12 ஆம் பாடல் வரி.
100 அகத்துறைகளை நூறு நேரிசை ஆசிரியப்பாக்களில் வடிக்கும் கல்லாடம் ஓர் அறிவுத்துறை நூல் ஆகும்.
வள்ளுவம் ஒரு செவ்வியல்நூல் என்கிறோம்.
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறி, பொருள்இது என்ற வள்ளுவன்’’

என்பது (பாடல்-14)
சமயம் சார்ந்த, சைவம் தோய்ந்த கல்லாடம்.
மதுரைச் சொக்கநாதன் பெருமைகளைச் சொல்லுக்குள் திணித்து இனிமை தரும் கல்லாடம்.
வள்ளுவம் உலகியல் நூல் – சமயச்சார்பற்ற நூல்
பதினோராம் நூற்றாண்டில் வள்ளுவத்தை உயர்த்திப் பிடித்த நூல் கல்லாடம்.
உவமைகளில் மெய்யியல் கூறுவது கல்லாடத்தின் சிறப்புகளில் ஒன்று.
கல்லாதவர் உள்ளம் போல் புள்ளிய குழலும் என்பது உவமை.
கூந்தல் கருமை எதைப் போல
அறிவில்லாதவர் உள்ளம் இருண்டு கிடப்பதைப் போன்ற கருமை
காதலியின் கூந்தலை உவமிக்கும் போதும் அறிவுரை கூறும் கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கடினம்தான்.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
என்பது கற்றலில் கேட்டலே நன்று. நம் வானொலி உரைகள் கருத்தாழத்துடன் சான்றோன் ஆக்கும்.
சான்றோர் கூட்டத்தின் பேச்சினைக் கேட்டால் அறிவு விரிவடையும். பெருங்கூட்டத்தின் பேச்சும் ஆராய்ந்து உரைப்பட வேண்டும்.
“பேச்சினைக் கேட்டு ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.
நல்லறிவுடன் சான்றோர் ஆதல் வேண்டும்.”
பெருந்திரள் கண்ணுள் பேச்சுநின்று ஓர்ந்து
வாய்ச்சொல் கேட்ட நல்மதியரும் பெரியர் (பாடல்-16)
உடன்போக்கு நிகழ்ந்தபோது துயருற்ற செவிலிக்குக் கண்டோர்
கூற்றில் இந்த வாழ்வியல் சிந்தனை கூறப்படுகிறது.
அமுதம் ஊற்றெழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ் எனும் கடல்என்பது (பாடல்-18)
நேயர்களே! தமிழ்ச்சொல் கேட்டாலே நெஞ்சம் களிக்கும் நம் மழலைகளுக்குத் தமிழ்ப்பெயர்ச் சூட்டி, தமிழில் அழைத்தால் நெஞ்சம்குளிரும், அமுதம் ஊற்றெடுக்கும், கல்லாடர் வழியில் தமிழ்க்கடலில் மூழ்கிக் களிபேருவகை முத்தெடுக்க தமிழில் பெயர் சூட்டுவோம்! கடைகளில், தெருவில், மழலைக்குத், தமிழ் இனிக்கும்.
ஈன்ற செங்கவி எனத்தோன்றி, நனிபரந்து
பாரிடை இன்பம், நீள் இடை பயக்கும்
பெருநீர்வையைஎன்பது கல்லாடம்
சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி என்ற கம்பன்
வரிகளைக் கல்லாடம் நினைவூட்டுகிறது
திங்களும், புயலும், பரிதியும் அமைந்த
மலைவரும் காட்சிக்குரிய
மலையிலிருந்து ஓடிவரும் வையையும், இலக்கியமும் ஒப்பிடப்படுகின்றன. ஞாயிறு போற்றுதும் முதலான சிலம்பின் வரிகளை இவண் நினைக்க முடிகிறது.
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என
தேக்கிய தேனுடன் இறால்மதி கிடைக்கும்
‘தேன் நிறைந்த தேன்கூடு அருள் நிறைந்த கல்வியர்’
கற்றவன் யார்? இரக்கம், அருள் நிறைந்து இருந்தால்தான் கற்றவன், அருள் இல்லாதவன் கற்றவனே இல்லை.
கல்லாடம் சொல்கிறது.
இடும்மை நிரப்பினர்க்கு ஈதல்
துன்பத்தில், துயரத்தில் மூழ்கிக்கிடப்பவருக்கு ஈகை செய்ய வேண்டும் என்பதும் கல்லாடம்.
உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க
மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள்வாக்கால்
அன்பின் ஐந்தினைஎன்று அறுபது சூத்திரம்
கடல் அமுது எடுத்து கரையில் வைத்துபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி, மற்றவர்க்குத்
தெளிதர கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
தொல்காப்பியம் பொருளதிகாரம் மறைந்து கிடந்தபோது இறையனார் களவியல் 60 நூற்பா எழுந்த வரலாற்றினைக் கல்லாடம் கூறுகிறது.
 கல்லாடம் மெய்யியல் நூல். கல்லாடம் வரலாற்றுப் பதிவு நூல்; கல்லாடம் அகநூல்; சைவப் பேழை, வாழ்வியல் வழிகாட்டி நூல்; கல்லாடர் வழி நிற்போம்!
இ. சூசை,
இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் கல்லூரி, திருச்சி-620002.
திருச்சிராப்பள்ளி வானொலி உரை  16.10.2046 / 2.11.2015
இ.சூசை :i.susai-thamizhsusai



Comments

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்