Skip to main content

நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை


இலக்குவனார் மறைமலை 70 : maraimalai70

சொந்தக் கதை 01

எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம்
அறுபது  அகலுது  வருவது எழுபது
எண்களில்  மட்டுமே இந்த மற்றம்
எனக்குள் எந்த மாற்றமும் இலையே!
பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை;
இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால்
உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன?
வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்!
கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும்
மேலும் மேலும் மேன்மையும் தேடிய
அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில்
கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே
தமிழின் உரிமை மீட்கும் பணியில்
தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை
கற்ற கல்வி  பெற்ற பதவி
உற்ற செல்வம் உயர்ந்திடும் பொழுதில்
கொண்ட கொள்கை  மாறா உறுதியும்
வண்டமிழ் நலன் காத்திடும்  பொறுப்பும்
இலக்குவப் பெரியோர் துலக்கமாய்ச் செய்தார்
அலக்கண் உற்றார் கலக்கம் செற்றார்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மேவினோம் எம்வழி என்னும் தறுகண்
சங்கப் புலவர் ஏற்றதைப் போன்றே
இலக்குவப் பெருந்தகை இயல்பாய்க் கொண்டார்!
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் பணியிடம்!
கெஞ்சிப் பணிவதும் அஞ்சிக் குனிவதும்
நரிகளின் இயல்பு; அரிமாப் புலவர்
இலக்குவர்க்(கு) அஞ்சுவர் தமிழின் பகைவர்
மறைமலை யடிகளின் தமிழியல் நோக்கும்
பெரியார் வகுத்த  திராவிடப் போக்கும்
தம்மிரு கண்களாய்ப் போற்றினார் இலக்குவர்.
அன்னவர் மைந்தனாய்  அவனியில் வந்தவன்
பின்னொரு மாற்றும் எண்ணிடுவானோ?
புகுமுக வகுப்புப் பயிலும் போதே
அறிவியல் தமிழை வளர்த்திடும் நோக்கம்
அரும்பியதென்பால்;அறிவியல்  பட்டம்
விரும்பியே சேர்ந்தேன் பயிலும் பொழுதே
தென்மொழி குறள்நெறி செந்தமிழ்ச் செல்வியில்
அறிவியல் கட்டுரை ஆக்கி மகிழ்ந்தேன்;
பட்டம் பெற்று வெளியே வருமுன்
இந்தி எதிர்ப்பில் சிறைக்குச் சென்ற
தந்தை பணிக்குத் துணை நின்றிட
மெய்ப்புத் திருத்தவும் செய்தி தொகுக்கவும்
குறள்நெறி இதழின் பொறுப்பும் ஏற்றேன்;
ஏழு திங்கள்  அவர்வழி இயங்கினேன்;
இலக்குவர் நடத்திய இன்றமிழ்க் :குறள்நெறி”
நாளிதழ் விற்றது நான்காயிரமாம்
வாங்கி விற்கும் முகவர் கூறினர்
விற்ற பணத்தை விழுங்கிய செயலால்
முகவர் செய்த மோசடிச் செயலால்
பொருள்மிக இழந்தோம்; புறக்கணிப்புண்டோம்
முறையாய் அவரெலாம் பணமளித் திருந்தால்
குறள்நெறி நாளிதழ் இன்றைய வேளையில்
பொன்விழாக் கண்டு பொலிவடைந்திருக்கும்!
‘மே’யில் தொடங்கிய மேன்மை நாளிதழ்
திசம்பர்த் திங்களில் கசங்கிப் போனதே!
அன்றைய வேளையில் அல்லலும் துன்பமும்
கன்றிய உள்ளமும் வெம்பச் செய்ததே
எங்கள் உள்ளத்தை  எவரே அறிவார்
யாம்  உணர்ந்த  கசப்பின் கடுப்பை?
இலக்குவர் நாளிதழ் தொடங்கினார் என்றதும்
இதற்குப் போட்டியாய் அதுவா என்றே
ஒருசிலர் வினவினர் உட்பொருள் வைத்தே!
தமிழகம் முழுவதும் முன்பணம் கட்டி
முகவர் முன்வந்த செய்தி சிலரை
முகம்சுளிக்கச் செய்ததறியோம்!
தகுந்த வழிகளில்  இதழை முடக்க
மிகுந்த முயற்சி மேற்கொண்டமையே
முகவர் கொண்ட பகைப்போக்(கு) என்பதை
அறிந்து கொள்ள ஆண்டுகள் சென்றன!
சனவரி முதல் ஏப்பிரல் வரைக்கும்
நான்கு திங்கள் நல்ல வேளையாய்
மாண்புடன் கழிந்தன திடுமெனக் கிடைத்த
கல்லூரிப் பயிற்றாசிரியர் பதவியில்!
சிவகாசி நகர்க் கல்லூரி ஒன்று
உவப்புடன் வழங்கிய விடுமுறைப் பணியால்
பயிற்சி பெற்றேன் பணமும் பெற்றேன்!
‘அய்யா நாடார் சானகி அம்மாள்
கல்லூரி’ வாழ்வில் முதன்முதல் பதவியை
வழங்கிய நன்றி மறவேன் என்றும்
                                   (தொடரும்..)
இலக்குவனார் மறைமலை
முத்திரை-கூட்டம் : muthirai_kuuttam


அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 

Comments

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்