எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்
குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும்
- ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன்
எண்ணிய விளையும் இனிது முடித்திலர்
துன்பக் கடலில் தோயப் புகுந்தனர்
அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர்
- செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர்
பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும்
இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம்
அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை
- “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர்
எவ்வித வியப்பும் எய்திலர் எவரும்
சென்றன பலநாள் கண்டில ளவனைப்
பலநாட் டங்கிய பான்மை நோக்கி,
- எழிலின் அரசி எய்தினள் துயரம்;
கன்றினைப் பிரிந்து கலங்குதல் போலக்
காதலன்வருகை காணாக் காதலி
உள்ளம் புழுங்கினள்; ஒருநொடி அவனைப்
- பிரிதற் கியலாப் பெற்றிய ளாங்கே
நாணம் மிக்கு நாத்தடு மாறிச்
“சென்றஆ டலனேன் இன்னும் வந்திலன்?
உழைத்தற் கஞ்சி ஒடியொளிந் தனனோ?
- பொருளுடன் விடுத்திரோ? மருளுற் றதனைக்
கள்வர் கூடிக் காதிட் டனரோ
மாற்றர் திரண்டு வழிமறித் தனரோ?
கள்வரும் காணின் நல்லவ ராகுவர்
- மாற்றல ரோவெனின் மனனுறத் துதிப்பர்
நாடிக் கொணர்மின் நயப்புட னவனை”
என்று வேண்டினள்; நன்று நன்று
நாளை வருவன்; நலித லெதற்கு”
- என்று மொழிந்தனர் இதயம் வருந்தினள்.
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment