தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தமிழீழக் கவிஞர்
புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு
அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!
நள்ளிரவின் கீதத்தை
நடுப்பகலின் கோபத்தை
காட்டுக்குள் இருக்கும் வேங்கையை
கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத்
தீ மூட்டிய கவியரசே!
இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்!
தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி
அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே!
அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்…
உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட
என்னால் முடியாது..
என் எழுதி(பேனா) முனையோ
வன்னிப்பரப்பின் புழுதியில்
மேடு பள்ளம் எல்லாம் சென்று
நிதானம் இழந்து நடுக்கத்துடன் நிற்கிறது!
தமிழரின் பாட்டுக்கு உரம் ஏற்றித்
தேரோட்டிய புலி வீரனே
நீ வெந்தனலா..? வீசும் புயலா..?
ஆம் உன் கவிக்கு நிகர் ஏது..?
வையகப்பரப்பெங்கும் உன் கவி ஏராளம்
அதை கேட்ட செவிகள் என்ன தவம் செய்தனவோ!
தொட்டுத் தழுவிய உன் பெற்றவரும்
தாயக உறவுகளும்
இணைந்து பாடும் வாழ்த்து
எட்டுகிறதா உன் காதுகளுக்கு..?
முப்படையும்,பிற்படையும்,
வால்பிடித்தபடையும் எப்படையும் வந்த போது
வெற்றி சமர் ஆடிய வேங்கைகளுக்கு
நீ அளித்த கவி விருந்து
எம் நாவில் இந் நாளும்!
பண்பாடோடு கலைதனை பார்போற்ற கோலோச்சி
தாயே நிகரான எங்கள் தாயகத்தைக்
காதல் செய்து கவிபாடிய
முதுமையின் முத்தே! புதுவை ஐயாவே!
உனக்குத் திரையா..?
நீ வருவாய் என வழி பார்த்து
விழி நிரம்பி நிற்கின்றோம்
வந்து வீறாப்பாய் மிடுக்கோடு
கவி மாலை சூடு…
ஆம் பெரியவரே..
உருக்குலைந்து, உனை இழந்து
துடுக்கிழந்து, துயர் சுமந்து
குருடாகி, முடமாகி
சாவு மணி ஒரு பக்கம்,
சத்துணவு ஒரு பக்கம்,
யாருமற்ற ஏதிலியாய்
நீ இருக்கும் திசை அறியாமல்
மூச்சடங்கி முனங்குகிறோம்..
என்றும் நீ வாழ்க…உன் கவி வாழ்க..!
உன்னோடு கூடுகட்டி வாழ்ந்திருந்த
குருவிக்கூட்டம் நாங்கள்
இன்று உனை வாழ்த்துகிறோம்
ஏற்றுக்கொள்..
பெரியவரே உங்களை என் கவியால்
(நீ/உன்) எனச் சொற்களை அள்ளி வீசி விட்டேன்
மன்னிக்க மண்டியிட்டு வேண்டுகிறேன் !
தாயக மண்வாசனை நிரம்பிய
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் கவியரசே!!
உங்கள் அன்பின்
நீர்வை இளவல் ஈழம் இரஞ்சன்
கவிஞர்
ReplyDeleteபுதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!