Skip to main content

மழையே ! – க.தமிழமல்லன்


மழையே ! – க.தமிழமல்லன்

rain01

ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ!

மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால்
மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை!
மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய்,
மயக்கிடும் திருடன் புகுவது போலே!
மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட,
மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய்,
ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட,
மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை,
குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்!
நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே?
மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர்
என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்?
பேருந் தில்லை, சிற்றுந் தில்லை!
யாரும் பணத்தை எடுத்திட வழியிலை !
கன்னெய் இல்லை, கவலையைச் சொல்ல,
மின்னும் செல்லிடப் பேசியும் இல்லை !
எல்லாம், மழையே உன்னால் ஒழிந்தன!
செல்வச் செழிப்பாய்ச் சேமிப் பிருந்தும்,
இல்லா தவராய் எங்களைச் செய்தாய்!
இல்லை என்றே ஏங்கிட வைத்தாய்!
அழைப்பில் லாமல் அயலான் போல்நீ?
இழைத்தாய் துன்பம், எப்போ தொழிவாய்?
பிணம்பு தைப்ப தற்கும் இடந்தான் எங்கே?
பிணம்எரிப் பதற்கும் எங்கே போவது ?
பாலம் உடைத்த பாழும் மழையே,
ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ!
ஓய்ந்து போய்விடு! ஒழிந்திடு! வெயில்தான்,
காய்ந்திட வழிவிடு! மாய்ந்திடு உடனே!

முனைவர் க.தமிழமல்லன்
9791629979
thamizhamallan03


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue