Skip to main content

நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்

mazhainilathil_vazhiyadaippu

அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே!

நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்!
பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்!
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காகக் கீழ் இறங்கினேன்!
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே…
என்னை அழைத்து விட்டு…!
வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்….
சுரண்டி அவள் மேனியெல்லாம்
பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்!
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர நலம் கொள்வாள்!
அனைத்தும்  மறுதலித்து,
கடல் சேரவே வழி செய்தாய்!
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்!
வளம் கொழித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்!
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்;
தொழிற்சாலைகள் கட்டினாய்;
கற்காரைக் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டுத் துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சு விடத்  திணறுகிறாள்….
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள்தானே குளமும் குட்டையும்!
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்துக்
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய்த் தங்கி வாழ்வு தருவேனே!
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணைத் துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே!
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டைச் சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாகத் தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்;
வெள்ளப்பெருக்கு என்கிறாய்;
மக்கள் அவதி என்கிறாய்;
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்!
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாகக் குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்…….
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்….!
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்………
இனியாவது நீ திருந்துவாயா?
உனக்காக நான் வந்தால்!
மாவீரன் மணிகண்டன்
maaveeranmanikandan



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்