Skip to main content

கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை இ


கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை

அட்டை - சொல்லோவியம் : attai-solloviyam

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்

கி.பாரதிதாசன்
(கி.பாரதிதாசன்)
  மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் ‘சொல்லோவியம்‘ என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப் பாவலர் அழகாக இந்த நூலெங்கும் எதிரொலிக்கச் செய்துள்ளார்.
  கடந்த கால நிகழ்வுகள் கனன்று எழுவதையும், கைப்பற்றியவனின் அன்புச்செய்கைகள் அவளுக்குக் கற்கண்டாய் இனிப்பதையும் இந்த நூலில் பெண்ணாக உணர்வுதாங்கிப் பாவலர் பாரதிதாசன் வடித்துள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிற்றூர் மக்களின் சொல்லாட்சியையும், கற்பனையையும் கற்று மகிழ்ந்தேன். கடல்கடந்து சென்றாலும் தமிழர்களின் மரபார்ந்த வாழ்க்கையைப் பாரதிதாசனால் மறக்கமுடியவில்லை என்பதை இந்த நூல் காட்டுகின்றது.
  மக்களின் பேச்சுவடிவச் சொற்கள், இலக்கியத் தரம் கொண்ட சொற்களாகப் பாவலரால் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளமை நூலின் தனிச்சிறப்பு என்று குறிப்பிடலாம். நகரச் சாயலோ, நாகரிக வாழ்க்கையோ தென்படாமல் முற்றும் சிற்றூர் மக்களின் செழிப்பான வாழ்வு இந்த நூலில் நினைவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளிறக்கும் காலையிலே
கண்மயங்க வைத்தவனே!
உள்ளிருக்கும் உணர்வுகளை
உடையாகத் தைத்தவனே!
என்பது சொல்லோவியத்தின் ஒரு சுவைமிகுந்த பகுதியாகும். கள்ளுக்கும் காதலுக்குமான தொடர்பை முதலில் நினைவூட்டியவர் திருவள்ளுவனார் ஆவார். ‘உண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இல்’ என்னும் குறளில் வள்ளுவனார் பார்வையின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுவார். அதுபோல் நம் பாரதிதாசனும் தலைவியின் உள்ள உணர்வை இந்தப் பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மதுரைவீரன் சாமிபோல்
மார்பழகு கொண்டவனே!
குதிரைபோல எனைத்தூக்கிக்
கூத்தாடி நின்றவனே!
என்று பாரதிதாசன் தலைவனின் அழகையும், அவனின் செயலையும் சிற்றூர்ப்புற ஓவியமாக்கி நம் மனக்கண்ணில் நிறுத்துகின்றார்.
கத்தாழைக் காட்டுக்குள்
கணக்காக நின்றவனே!
சொத்தாக என்னழகைச்
சொந்தமிடும் தென்னவனே!
இந்தப் பாட்டில் கத்தாழை மலிந்துகிடக்கும் காடு, தனிமைச் சந்திப்புக்கு ஏற்ற இடம் என்பதையும், அங்கு நாளும் சந்திப்பு நிகழ்ந்ததால் அது அடுத்தகட்ட மணவாழ்க்கைக்கு நகர்த்தியதையும் பெண்மைபூத்த உள்ளத்தோடு பாடியுள்ள பாவலரின் உள்ளுணர்வு போற்றத்தக்கது.
மஞ்சளிலே உனைச்சேர்த்து
மார்பினிலே பூசுகின்றேன்!
நெஞ்சினிலே உனைநிறைத்து
நிலையிழந்து பேசுகின்றேன் (சொல்லோவியம் 35)
என்று எளிய சொற்களை எடுத்து உணர்வையும் காட்சியையும் இயைத்து அழகிய படைப்பாளராகப் பாரதிதாசன் இந்தப் பாடலில் வெளிப்பட்டு நிற்கின்றார்.
பண்பாளா! உனைப்பாடப்
பண்கோடி வேண்டுமடா!
கண்ணாளா! உனைக்காணக்
கண்கோடி வேண்டுமடா!
  தலைவனுடன் பழகிய பழக்கத்தையும், அவனின் மேம்பட்ட பண்புநலன்களையும் பாடுவதற்கு இயலாத கையற்ற நிலையையும், தலைவனின் கண்டார் மயக்கும் அழகையும் கவினார்ந்த நிலையினையும் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும் என்று ஏங்கும் அபலைப் பெண்ணின் ஆசை உணர்வுகளை இந்தச் சொல்லோவியம் தாங்கி நிற்கின்றது.
பாவலர் கி. பாரதிதாசனுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்:
 குறும்பாக்களில் உங்கள் கற்பனையும் திறமையும் குறுகிவிட வேண்டா. பாவியம் புனைந்து தமிழன்னைக்குப் படையல் செய்யுங்கள். புரட்சிக்கவிஞர் பிறந்த மண்ணிலும், அவர் பண்ணிலும் தமிழ்த்தேன் குடித்த தாங்கள் கனிச்சாறு கொண்டு ஒரு காப்பிய விருந்து வையுங்கள் என்று கனிவுடன் வேண்டுகின்றேன்.
முனைவர் மு.இளங்கோவன்
மு.இளங்கோவன் : mu-elangovan-ilangovan


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue