வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

vadasol enbahu-padmanaban
  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார்.
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்-சொல்- எச்ச-1)
இயற்சொல்
அவற்றுள்
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்தொடு வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே (தொல்-சொல்- எச்ச-2)
தொல்காப்பியப் பாயிரம், தமிழ்மொழி வழங்கும் நிலப்பகுதியாக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை உள்ள நிலப்பகுதியைக் கூறுகிறது. இயற்சொல் தமிழக முழுமைக்கும் பொருள் வேறுபாடு இன்றி ஒரே பொருளைத் தருவது. இலக்கியத்தமிழ் எனவும் உரைநடைத் தமிழ் எனவும் இது அமைகிறது. இதைச் செஞ்சொல் என்பார் தெய்வச்சிலையார்..
திரிசொல்
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொல் கிளவி (தொல்-சொல்- எச்ச-3)
ஒரு பொருள்; குறித்துவரும் பலசொல்லும் பலபொருள் குறித்துவரும் ஒருசொல்லும் எனத் திரிசொல் இரண்டு வகைப்படும். உரிச்சொல்லுக்கும் இந்தப் பண்பு உண்டு. உரிச்சொல், ஒருசொல் பல பொருள்கட்கு உரிமையாகும்., பல சொல் ஒரு பொருட்கு உரிமையாகும்., இப்பண்பு உரிச்சொல்லுக்குத் தன்மையானமையும். திரிசொல்லுக்கு இடத்தானமையும்.
திசைச்சொல்
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல்-சொல்- எச்ச-4)
செந்தமிழ் நாட்டில் உள்ள பன்னிரு பகுதிகளில் தத்தம் பகுதியில் வழங்கும் பொருளை உணர்த்தி ஏனைப் பகுதிகளுக்குப் புதுமையாய்த் தோன்றும் சொற்கள். ஆனால் இவை தத்தம் பகுதிக்கு இயற்சொல்லாக அமைவன.
செந்தமிழ் நிலம் எது என வரையறுக்கும் இளம்பபூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், முதலான உரையாசிரியர்கள் வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருதூரின் மேற்கும் எனத் தமிழகத்தின் நான்கு எல்லைகளை வரையறை செய்கின்றனர். இவ்வெல்லைகளுக்கு உட்பட்ட தமிழகத்தில் வழங்குவது செந்தமிழ் என்றும் இவ்வெல்லைகளுக்குப் புறத்தே தமிழகத்தை ஒட்டி அமைந்துள்ள பன்னிரண்டு நாடுகளில் வழங்குவது கொடுந்தமிழ் என்றும் சேனாவரையர் வரையறை கூறுகிறார்.
இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன எனப் பொதுங்கர்நாடு, தென்பாண்டிநாடு, ஒளிநாடு, குட்டநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, குடநாடு ஆகிய நாடுகளைக் குறிப்பிடுகின்றனர். மலைநாட்டை நச்சர் மலாட நாடு என்று கூறுகிறார்.
திசைச்சொல் பற்றி நன்னூல்
திசைச்சொல்லைப் பற்றிக் கூறும் நன்னூல்
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம்குறிப் பினவே திசைச்சொல் என்ப (நன் 273)
என்கிறது. இச்சூத்திரத்திற்குப் பொருள்கூறும் சங்கரநமச்சிவாயர், “செந்தமிழ் நிலத்தைச்சேர;ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தின் கண்ணும் பதினெண் மொழியுள் தமிழும் மேற்கூறிய வடசொற்குக் காரணமாகிய ஆரியமும் ஒழிந்த பதினாறு மொழியும் வழங்கும் பதினாறு நிலத்தின் கண்ணும் உள்ளோர் தம் குறிப்பின்வாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி அத்திசைகளின் அஞ்செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச்சொல் என்று கூறுவர் புலவர்”; என்று கூறுகிறார். மேலும் அவர்“செந்தமிழ் என்றமையாற் கொடுந்தமிழ் என்பதூஉம் கற்றோரையும் மற்றோரையும் தழீஇத் தம்குறிப்பினவெனப் பொதுமையிற் கூறினமையின் இத்திசைச்சொற்கள் அந்நிலத்தோர்க்கு இயற்சொல்லாய்ச் செந்தமிழோர்க்கு அவ்வாறு குறிக்கப்படாத திரிசொல்லாய் நிற்கு மென்பதூஉம் பெற்றாம்” என்கிறார். கொடுந்தமிழ் வழங்கும் பன்னிரு நிலம் எவை என்பதைக் காட்டும் பின்வரும் வெண்பாவையும் எடுத்துக்கூறுகிறார்.
தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி,
பன்றி யருவா அதன்வடக்கு – நன்றாய,
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்,
ஏதமில் பன்னிருநாட் டென்….
என்பது வெண்பா.
எல்லைகளின் வரையறை
இளம்பபூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர்கள் எந்த அடிப்படையும் சான்றும் இல்லாமல், செந்தமிழ் வழங்கும் தமிழக எல்லையை வரையறுத்துள்ளனர்; அதற்கான குறிப்பு எங்கும் காணப்படவில்லை. இவ்வுரையாசிரியர்கள் காலங்களில் இந்நிலப்பகுதிகள் இருந்தனவா என்பதற்கான அடிப்படைச் சான்றும் இல்லை. வழிவழியாக வந்த செவிவழிச் செய்தியின் அடிப்படையிலேயே இந்நில வெல்லைகளை இவ்வுரையாசிரியர்கள் உரைத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது.
தெய்வச்சிலையாரின் தெளிவு
இயற்சொல் வழங்கும் செந்தமிழ் நாட்டு எல்லைகளாக வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருதூரின் மேற்கும் எனச் சுட்டும் இளம்பபூரணர் முதலான உரையாசிரியர்களின் கூற்றை மறுக்கும் தெய்வச்சிலையார் “செந்தமிழ் நாடாவது:- வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவவூரின் கிழக்கும் மருதூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர; இலக்கணம் காணாமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவவூரின் மேற்காகிய கொடுங்கோரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:–
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளு நாடி
என்றமையானும் தமிழ்கூறு நல்லுலகமென விசேடித்தமையானும் கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப. அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்லாவன:– சோறு, கூழ்- இவை அந்நிலத்துட்பட்ட எல்லா நாட்டினும் ஒக்க வியறலின் இயற்சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும்.” என்கிறார்,
தெய்வச்சிலையார். தொல்காப்பியர் காலத்தில் நிலவிய தமிழ் வழங்கும் பகுதிகளின் எல்லைளைத் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சான்றுகளைத் தெளிவாக்குகிறார்.
  தொல்காப்பியத்திற்குப் பாயிரம் இயற்றிய தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார் தமிழ் வழங்கும் பகுதியாக வடக்கே வேங்கடத்தையும் தெற்கே குமரியையும் குறிக்கிறார். கிழக்கெல்லையையும் மேற்கெல்லையையும் அவர் கூறாததற்குக் காரணம் அவற்றின் எல்லைகளாகக் கடல் விளங்கிமையே யாம். கிழக்கே இன்றைய வங்காள விரிகுடாவாகிய குணகடலும் மேற்கே அரபிக்கடலாகிய குடகடலும் எல்லைகளாகத் திகழ்ந்தமையைத் தெய்வச்சிலையார் சுட்டுகிறார். செந்தமிழ் எனத் தமிழ்மொழிக்குத் தொல்காப்பியர் கொடுத்த செம்மை என்ற பண்படையைத் தமக்கு வேண்டியவாறு எடுத்துக் கொண்டு கொடுந்தமிழ் என்ற ஒரு தமிழைக் கூறிச் சேனாவரையர் மற்றும் சங்கர நமச்சிவாயர் அதற்கேற்ப உரை வகுத்து விட்டனர்.
திசைச்சொல்லுக்கான உண்மை விளக்கம்
தொல்காப்பியர் காலத் தமிழகம் முப்பெரும் வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட முப்பெரும் பகுதிகளாக விளங்கியது. இம்மூன்று பெருநிலப்பகுதிகளும் மேலும் பல சிறுநிலப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டன. மூவேந்தரின் ஆட்சிக்குக் கீழ்க் கட்டுப்பட்டு அந்நிலப் பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பகுத்து ஆட்சி செய்த சிற்றரசர்களும் விளங்கினர். இவையே தொல்காப்பியர் காலத்திய செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளாக இருந்திருக்கின்றன. இங்கெல்லாம் வழங்கப்பட்ட தமிழ் மொழி செய்யுள் தமிழாகவும் உரைநடைத் தமிழாகவும் பேச்சுத் தமிழாகவும் விளங்கியுள்ளது. செய்யுள் தமிழும் உரைநடைத் தமிழும் தமிழகம் முழுவதற்கும் ஒரே வகையாக அமைந்திடப் பேச்சுத் தமிழில் சொற்களின் வடிவம் அவ்வப்போது மாறியும் சிதைந்து போக நேருகிறது. இன்றைய கன்னியாகுமரித் தமிழன் பேசுகின்ற தமிழுக்கும் சென்னைத் தமிழன் பேசுகின்ற தமிழுக்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. இவை அந்தந்த வட்டார வழக்கு அல்லது கிளைமொழி (Regional dialect) என இன்றைய மொழியியலாளர் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலப் பேச்சுத் தமிழுக்கும் இதே நிலைதான். இந்தப் பேச்சுத்தமிழின் சொற்கள்தாம் திசைச் சொற்கள். திசைச்சொற்களில் சில நாளடைவில் அந்தந்தப் பகுதியின் இலக்கியச் சொற்களாக மாறியிருக்கலாம். இவையே தொல்காப்பியர் கூறும் திசைச்சொற்களாகும். இச்சொற்கள் சங்கஇலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. இச்சொற்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தை நோக்கத் திசைச் சொற்களாகவும் அந்தந்தப் பகுதியை நோக்க இயற்சொற்களாகவும் அமைவது இயல்பு. தொல்காப்பியத்தை வரலாற்று நோக்கில் அணுகிய என் பேராசிரியர; க. வெள்ளைவாரணனாரின் கருத்து இங்கே குறிக்கத் தக்கது.
“ ‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும்’ என்ற தொடர்க்குச் ‘செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதியவாகிய பன்னிரு நிலங்களினும்’ எனப்பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறு கொள்ளாது ‘செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்’ எனப் பழைய உரையாசிரியர்கள் பொருள் கொண்டு செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகக் கூறுப. ‘தென்பாண்டி குட்டம் எனத் தொடங்கும் பழைய வெண்பாவிலும் ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ எனக் கூறப்படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற்கொண்டவை யென்பது நன்கு விளங்கும். எனவே இப்பன்னிரண்டின் வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந்தமிழ் நாடுகளாமென்றும் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக.” (தொல்காப்பியம்-வரலாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1978 ப-ம் 72). எனவே செந்தமிழ் என்பது பண்புத் தொகையாகத் தொல்காப்பியரால் கையாளப்பபட்ட சொல். அதற்கு எதிராகக் கொடுந்தமிழ் என்பதொன்றைத் தொல்காப்பியர் குறிக்க வில்லை என்பதும் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பது செந்தமிழ் வழங்கிய தமிழகத்தின் பன்னிரு பகுதிகளே என்பதும் தெளிவு.
வடசொல் எது?
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே(தொல்-சொல் -எச்ச-5)
என்பது வடசொல்லைத் தமிழ்ப்படுத்தற்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவாகும். வடசொல்லைத் தமிழ்ச் செய்யுளுக்கு ஆக்கிக் கொள்ளும் போது வடவெழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிக்கேற்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழ்ப் படுத்தக் கூறிய வழிமுறையாகும்.
தொல்காப்பியர் கால மொழிச் சூழல்
தமிழகத்தில் தொல்காப்பியர் கால மொழிச் சூழலை ஆய்வு செய்தால் தொல்காப்பியர் சுட்டும் வடசொல் எதுவென விளங்கும். தொல்காப்பியர் காலத்தில் செம்மொழித் தகுதிபெற்ற ஆனால் இன்றைக்கு வழக்கு வீழ்ந்து விட்ட பாலி, பிராகருதம், கிரேக்கம், இலத்தீன், ஈப்ரு முதலான மொழிகளின் சில சொற்கள் மக்கள் வழக்கில் இருந்துள்ளன. புத்தர் தனது கொள்கைகளைப் பாலிமொழியில்தான் எழுதினார். அவை தமிழகத்திற்கு வந்த போது பாலி மொழியும் தமிழகத்திற்கு வந்துள்ளது. வழிநூலுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியர், முதனூலைத் தொகுத்தும் வகுத்தும் தொகை வகை செய்தும் படைக்கலாம் என்பதோடு மொழிபெயர்ப்பும் செய்யலாம் என்கிறார்.. எனவே தொல்காப்பியர் காலத்திலேயே ஒரு நூலை ஒருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் செயல் நடந்துள்ளது. இன்ன மொழியிலிருந்து இன்னமொழிக்கு எனக் குறிப்பிட்டுக் கூறாமல் பொதுவாக மொழிபெயர்ப்புபற்றித் தொல்காப்பியர் கூறுவதால் சமக்கிருதம் உட்பட பிற மொழி நூல்களும் தொல்காப்பியர் காலத்தில் இருந்துள்ளன என்பது புலனாகிறது
பண்டைத் தமிழர் மேலைநாடுகளுக்குக் கடல்மேற்செலவு மேற்கொண்ட காரணத்தாலும் மேலைநாட்டினர் பண்டைத் தமிழகத்திற்கு வாணிபத்தின் பொருட்டு வந்தமையானும் அவர்களின் மொழியும் வந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் கரும்பு மணிலா முதலான உணவுப் பயிர்கள் மேல்நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த போது அவற்றின் பெயர்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன. எல்லாத் தடைகளையும் மீறி வளரும் ஒருமொழி கால ஓட்டத்திற்கேற்ப தனது சொற்களைப் பிறமொழிகளுக்குக் கொடுத்தும் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டும் வளர்கிறது. இந்தவகையில்தான் தமிழ்மொழி தன்னையும் வளர்த்துக் கொண்டு பிற மொழிகளையும் குறிப்பாக ஏனைய திராவிட மொழிகளையும் வளர்க்க உதவியுள்ளது.
தமிழ்மொழியின் வளர்ச்சியில், அதன் தனித்துவத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்ட தொல்காப்பியர், பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து கலப்பதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவற்றை ஏற்ற வகையில் தமிழ்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே அவரது கொள்கை. அவர் காலத்தில் தமிழில் அன்றைய சூழலில் வெறும் சமக்கிருதச் சொற்கள் மட்டும் இடம்பெறவில்லை. செம்மொழித் தகுதி பெற்ற ஆனால் வழக்குவீழ்ந்து விட்ட சில மொழிகளின் சொற்களும் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களைக் காப்பாற்றிய பெருமை தமிழுக்கு உண்டு. எனவே தொல்காப்பியர், வடசொல் எனக்குறிப்பிட்டது தமிழ்மொழியைத் தவிர அவர் காலத்தில் வழங்கிய சமற்கிருதம் உட்பட்ட ஏனைய பிறமொழிகளையும்தாம். தான்கற்ற மொழிக்குத் தனது தாய் மொழிக்கு இலக்கணம் வகுக்க நினைத்த தொல்காப்பியர் தமிழ்மொழியின் அனைத்துக் கூறுகளையும் ஆய்வுசெய்தே இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால் இளம்பபூரணர், சேனாவைரையர் முதலான உரையாசிரியர்கள் இன்று சமக்கிருதம் என்றழைக்கப் படுவதும் சங்கக்காலத்தில் ஆரியமொழி என்றழைக்கப்பட்டதுமான சமக்கிருதத்தை மட்டுமே தொல்காப்பியர் வடமொழி என அழைத்தார் என்பது ஏற்புடையது ஆகாது. இன்னும் கூறப்புகின் வடமொழியின் மீது தனக்கிருந்த பற்றின் காரணமாக சேனாவரையர், நீர் என்ற சொல்லையே வடமொழி என்று கூறுவது எஞ்ஞான்றும் ஏற்புடையது அன்று. கடிசொல் இல்லை காலத்துப் படினே என்பதை ஏற்றுக்கொண்ட தொல்காப்பியர் தான் வகுத்ததே வாய்க்கால் என எண்ணவில்லை. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே என்றுரைக்கும் தொல்காப்பியர், தான் எழுதிய இலக்கணம் மட்டுமே முடிந்த முடிபான இலக்கணம் அன்று; அவ்வப்போது மொழியில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் புதிய இலக்கணக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். இத்தகு பரந்த நோக்கம் கொண்ட ஓர் இலக்கண ஆசான் வடசொல் என்ற சொல்லால் வெறும் சமற்கிருதத்தை மட்டுமே சுட்டியிருக்கிறார; என்பதும் சமற்கிருதத்தை மட்டும் மொழிப்படுத்தும் போது தமிழ்வழிப் படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரையாசிரியர்கள் கருதியிருப்பதும் கூறியிருப்பதும் பொருத்தமாகா.
துணைநின்ற நூல்கள்:
1.தொல்காப்பியம்-சொல்லதிகாரம் -சேனாவரையம்
2.தொல்காப்பியம்-சொல்லதிகாரம் -இளம்பபூரணம்
3.தொல்காப்பியம்-சொல்லதிகாரம் -நச்சினார்க்கினியம்
4.தொல்காப்பியம்-சொல்லதிகாரம் -தெய்வச்சிலையம்
5.க.வெள்ளைவாரணன்,தொல்காப்பியம்-வரலாறு,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
6.நன்னூல்- விருத்தி(சங்கரநமச்சிவாயர்)
– முனைவர் ப.பத்மநாபன்
செயலர், செம்மொழித் தமிழாய்வுப்பேரவை, புதுச்சேரி


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்