Skip to main content

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 3: மறைமலை இலக்குவனார்


 
olichuuzhalamaivu+Maraimalai
பாடல் பெற்ற பல்வேறு ஒலிகள்
அருவி ஒலி
இயற்கையொலிகளில் அருவி ஒலியை மிகப் பெரிதும் சங்கச் சான்றோர் போற்றியுள்ளமைக்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன.
‘பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப’18 எனவும்‘அருவி விடரகத்து இயம்பும் நாட’19 எனவும் அதன் ஆரவாரத்தையும்“ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்”20 எனவும் ‘ஒல்லென விழிதரு மருவி’21எனவும் அதன் ஒலிச்சிறப்பையும் பதிவுசெய்துள்ளனர். ‘இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவி’22என்று அருவியின் ஓசையை ஓர் இசைக்கருவியோசையாகவே அவர்தம் செவிகள் நுகர்ந்துள்ளன.’வயங்குவெள் அருவி இன்இசை இமிழ்இயம் கடுப்ப’23ஒலித்ததாக அவர்கள் கருதினர். ‘துன்னரும் நெடுவரைத் ததும்பி அருவி தண்ணென் முழவின் இமிழிசை காட்டும்’24என்றும் ‘பெருவரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி’25என்றும் அருவி ஒலியை முழவு ஒலியாகவே அவர்கள் சுவைத்தனர்.முழவு ஒலியாக மட்டுமின்றி முரசு ஒலியாகவும்26: பறை இசையாகவும்27 அவர்கள் கருதிப் போற்றிவந்துள்ளமையை அறிகிறோம். ,முழவு,முரசு,பறை ஆகிய இசைக்கருவிகள் பழந்தமிழரால் பெரிதும் போற்றப்பட்டன என்பதற்கும் இத்தகு ஒப்புமைகள் சான்றாக விளங்குகின்றன.
இடிமுழக்கம்:
,இடிமுழக்கம்- நள்ளிரவில் ஏற்படும்போது- அஞ்சத்தக்க பெருமுழக்கமாகக் கருதப்பட்டது.28.இடிமுழக்கம் முரசுமுழக்கத்திற்கு ஒப்புமையாகக் கூறப்பட்டது.29 புலியின் உறுமல் இடிமுழக்கம் போன்றிருந்ததாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.30.இடியின் கடுமை பாம்புகளுக்கு ஊறு விளைக்கும் என்னும் நம்பிக்கையும் சங்ககாலத்தில் இருந்தது.31இடிமுழக்கத்தைக் கடுங்குரல் எனப் புலவர்கள் பாடியது உண்மையேயெனினும்32 இக் கடுங்குரலையும் ‘இன் இசை’என்றும் போற்றியுள்ளமை33 குறிப்பிடத்தக்கது.
சங்கச் சான்றோர் தம்மைச் சூழ ஒலித்த அனைத்து ஒலிவகைகளையும் தமது பாடல்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர்.சங்கப் பாக்களைப் பயிலும் மாணவர் ஒருவர் எத்தகைய ஆழ்ந்த ஆய்வுமின்றியே, தேர் முழக்கம்34,,கடல்முழக்கம்35, புலி உரறும் ஓசை36,பெண்யானையின் துயரக் குரல்37களிற்றின் முழக்கம்38,பறவை ஆரவாரம்39,ஊர் ஆரவாரம்40, தும்பியின் இன்னிசை41,குயிலின் கூவல்42,கூகையின் அச்சம் தரும் குரல்43 எனப் பல்வேறு ஒலிவகைகளைப் பற்றிய சுவைமிகு குறிப்புகளைக் காணமுடியும்.இவற்றைத் தொகுத்துக் கூறமுற்பட்டால் கட்டுரைப் பணி கலைக் களஞ்சியப் பணியாக விரிவடையும்.எனினும் அத்தகைய விரிவான ஆய்வுக்கு ஒரு தூண்டுகோலாக விளங்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.தமது பாடலுக்கேற்ப ஒலிச்சூழலை அமைத்துக்கொள்வது மட்டுமின்றி, (இக்கால இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும்) நடப்பியல் நெறியும் மனிதநேயமும் .ஒருங்கிணைந்த நெறியில் தமது பாடுநெறியைச் சங்கச் சான்றோர் அமைத்துக் கொண்டுள்ளமைக்கு இரு சான்றுகளை இனிக் காணலாம்.

ஒலி நிறைந்த வாழ்க்கைமுறை
முற்றிலும் நகர்மயமாகவும் பொறிமயமாகவும் அமைந்துவிட்ட இக்காலவாழ்க்கைமுறையில் வைகறைத் துயிலெழுந்தது முதல் இரவு கண்ணயரச் செல்லும் வரை பல்வேறு ஒலிகளை-நாம் விரும்பாவிடினும்-
செவிமடுத்தே ஆகவேண்டும்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதே நிலைதான் இருந்ததாக மதுரைக்காஞ்சி உரைக்கிறது.நாளங்காடிச்சூழலும் அல்லங்காடிச்சூழலும் இரவு பகல் வேறுபாடின்றிப் பரபரப்பாக வாழ்ந்த வாழ்க்கைமுறையை ஏற்படுத்தியுள்ளன.
பரணரின் அகநானூற்றுப் பாடலொன்றில் தலைவி கூற்றாக,இரவு முதல் வைகறை வரை உறக்கமில்லாத ஒலிமிக்க வாழ்க்கைச்சூழல் நிலவியதாகக் காட்டப்படுகிறது.44.
ஒயாத விழாக்கோலம் பூண்டிருத்தலே அக்காலத்தில் நகர்களுக்குரிய பண்பென்பதால் நகர் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும்;அப்படித்தப்பித் தவறி “விழாக்கள் இல்லையெனினும் நகர் ஒலியடங்கிவிடாமல்
இயங்கும்;ஒருவேளை கடைத்தெருக்களும் ஏனைய தெருக்களும் ஒலியடங்கி ஓய்ந்தாலும் அன்னை துஞ்சாமல் கடுஞ்சொற்களை ஒலித்துக்கொண்டிருப்பாள்;வீட்டையே சிறைக்கூடமாக மாற்றும் அன்னை ஒருவேளை உறங்கிவிட்டாலும் நகரைக் காவல்செய்யும் நகர்க்காவலர் உறங்காது விழிப்புணர்வுடன் செயற்பட்டு ஒலி எழுப்பிக் கொண்டிருப்பர்;ஒருவேளை அவர்கள் உறங்கிவிட்டாலும் கூரிய பற்களையுடைய நாய் உறங்காமல் குரைத்துக்கொண்டிருக்கும்;நாய் உறங்கி விட்டாலும் பேய்கள் திரியும் நள்ளிரவில் கூகை கொடுமையாகக் குழறிக்கொண்டிருக்கும்;கூகை குழறுதலை நிறுத்தி ஓய்வெடுத்துக்கொண்டால் மனையுறையும் கோழிச்சேவல்கள் கூவி ஒலியுண்டாக்கும்;இவையெல்லாம் மடிந்தாலும் நம் தலைவர் வாரார்.”எனத் தலைவி வருந்துவதாகக் குறிப்பிடும் இப் பாடல் இரவு முதல் வைகறை வரை ஒலியற்ற அமைதியான சூழல் ஏதுமில்லா நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.மதுரைக் காஞ்சியும் பட்டினப்பாலையும் நெடுநல்வாடையும் காட்டும் இத்தகைய ஓய்வறியா நகர்வாழ்க்கையையே எடுத்துரைக்கின்றன.
ஒலிமாசு தவிர்த்தலும் உயிர்நேயம் பேணலும்.
போக்குவரவுத் துறையில் பயன்படும் ஊர்திகள் அனைத்தும் நகரில் பேரொலியை ஏற்படுத்தி உடல்நலனுக்கும் ஊறு விளைவித்தலைத் தவிர்ர்க்கும் நெறிகளைப் பற்றி இன்று சிந்தித்துவருகிறோம்.இத்தகைய சிந்தனை சங்கச் சான்றோரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
உமணர் வெள்ளை உப்பை விலைபகர்ந்து வரும்வேளையில் அவர்தம் வண்டிகள் மணலில் இயங்குங்கால் எழும் ஓசையைக் கேட்டு வயலிலுள்ள வெண்குருகுகள் அச்சங்கொள்ளும் என்னும் குறிப்பைத் தலைவி கூற்றாக அம்மூவனார் குறிப்பிடுகிறார்45.
சகடம் மணலில் மடுத்து முழங்கும் ஓசைக்குக் கழனி நாரை அச்சங்கொள்ளும் என்னும் குறிப்பு உள்ளுறைப் பொருளாகத் தலைவன் சான்றோர் முன்னிலையில் அருங்கலன் எடுத்துத் திருமணம் வரைந்துகொண்டால் அலர் எழுப்பிவரும் ஏதிலாட்டியர் அஞ்சி வாய்மூடியிருப்பர் என்பது கூறப்பட்டாலும் சூழல் பற்றிய எண்ணமும் ஒலிமாசு குறித்த குறிப்பும் இப் பாடல்வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளதனை மறுத்தல் இயலாது.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் நல்கி உயிர்நேயம் போற்றிய சங்க காலத்தில் உயிரினங்களுக்குத் தேரொலியால் ஊறு நிகழக்கூடாது எனக் கருதிய தலைவனைப் பற்றித் தோழி கூற்றாகக் குறுங்குடி மருதனார் இயற்றிய அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது46.
வளைந்த தலையாட்டத்தாற் பொலிந்த கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகள் தேரை இழுத்து விரைந்து வருகின்றனதேருக்குப் பொலிவும் சிறப்பும் வழங்குவன அத் தேரில் பிணைக்கப்பட்டுள்ள மணிகளே எனல் மிகையன்று..’தேர்மணித் தெள்ளிசை’47’திண்தேர்த் தெரிமணி’48 ‘இன்மணி நெடுந்தேர்’49 என்னும் தொடர்கள் தேருடன் மணி கொண்டுள்ள தொடர்புக்கும் மணியொலியால் தேரின் இயக்கமும் வருகையும் உணர்த்தப்படுதற்கும் சான்று பகர்வன.இந்நிலையில் தேர்மணி ஒலி எழுப்புதல் வண்டுகளை அச்சுறுத்தும் எனவும் இதன் விளைவால் தம் துணையுடன் இருக்கும் வண்டுகள் பிரிந்துசெல்ல நேரிடும் எனவும் தெளிந்து தேரின் மணிகளை இறுக்கிக் கட்டி அவை ஒலியெழுப்பாமல் செலுத்திய தலைவனின் அருள் உள்ளத்தை எடுத்துரைக்கும் தோழி, வண்டுகள் தம் துணையைப் பிரிதல் கூடாது என எண்ணும் தலைவன், தலைவியைப் பிரிந்திராது, விரைவில் வருவான் என்று தலைவிக்கு ஆறுதலுரை பகர்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.இங்ஙனம் ஒலி மாசு தவிர்க்கும் எண்ணமும் வல்லொலிகளை எழுப்பி உயிரினங்களின் இயல்பான வாழ்க்கைக்கு ஊறு ஏற்படுத்திவிடக் கூடாது என்னும் உயர்நெறியும் சங்கப் பாடல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது தமிழர் தம் தொல்நாகரிகச் சிறப்புக்கு மற்றுமோர் சான்றாகும்.

ஒலிச்சூழலமைவும் வாழ்வியல் விழுமியங்களும்
ஒலிச்சூழலமைவின் வழி வாழ்வியல் விழுமியங்களை நயம்பட உரைத்தலும் சங்கப் புலவரின் பாடுநெறிகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. ‘புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய சினையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல் ஆய் அண்டிரனது நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அழகு செய்யப்பட்ட நெடிய தேரினது ஒலி போல் ஒலிக்கும்’.என்றுரைக்கும் நற்றிணைப் பாடல்(167) இயற்கையெழிலையும் ‘கொடை ‘ என்னும் வாழ்வியல் விழுமியத்தையும் ஒரே குரலில் போற்றிப் பாராட்டுவதைக் காண்கிறோம்.நாரையின் ஒலிச்சூழலமைவும் ஆய் அண்டிரனின் நாளோலக்கம் என்னும் வரலாற்றுச் சூழலமைவும் ஒப்ப நோக்கப்படுவதுடன் நாரைக்கூட்டத்தின் நரலுதலை எண்ணுந்தோறும் ஆய் அண்டிரனின் நாளோலக்கத்தையும் அவனால் பரிசிலாக வழங்கப்பெற்ற தேர்களின் ஒலிச்சூழலமைவையும் பாடலைக் கற்போர் மனக்கண்ணில் தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ஆய் அண்டிரனின் நினைவு நிலைத்துநிற்க வழி செய்த பெயர் தெரியாத அப் புலவர் நம் போற்றுதலுக்குரியவர்.
ஓரம்போகியார் இயற்றிய பாடல் ஒன்றில்“அஃறிணையாகிய கம்புள் கோழி தன் பெட்டையைக் கூவியழைக்கும் கழனியூரனே! தலைவியை வரைவு கொள்ளுதற்குரிய முயற்சி மேற்கொள்ள நீ அறிந்திலையோ” 50 என அறிவுறுத்தும் வகையில் கம்புள் பறவையின் அகவல் ஓசை பொருள்நயம்பட விளக்கப்படுகிறது.
இயற்கை-செயற்கை:நேர்முரண்
இயற்கைச் சுழலமைவுடன் செயற்கைச் சூழலமைவு எதிர்நிறுத்தப்பட்டு வாழ்வியற்சூழல்கள் புதிய முறையில் விளக்கம்பெறும் இக்காலப் புதுமையியல் உத்தி,சங்க இலக்கியத்திலும் அமைந்து கருத்துவிருந்து வழங்குகிறது. ‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’51என்னும் பாடலடிஇயற்கையாக முழங்கும் களிற்றுடன் அப் பிளிறலைப் போன்றே முழக்கம் எழுப்பக்கூடிய கருப்பாலை எதிர்நிறுத்தப்படுகிறது.களிறு கரும்பைச் சுவைக்கும் அவாவின் உந்துதலால் பிளிறுகிறது;கருப்பாலையோ கரும்புகளை உள்வாங்கிப் பிழிந்து சாறு வேறாக்கிவிட்டு (மேலும் பிழிதற்குக் கரும்பை வேண்டி) முழங்குகிறது.அறம் நீங்கிய இன்பத்தில் திளைத்துவிட்டு வாயில்வேண்டிவந்து நிற்கும் தலைவனின் வேண்டுகோள் குரல் கருப்பாலையின் முழக்கமாக நமக்குப் படுகிறது.இல்லறத்தை நல்லறமாக நடத்தவேண்டிய பொறுப்பை மறந்துவிட்டுப் புறத்தே திரிந்த தலைவனிடம் நீதிவேண்டி முழங்கும் தலைவி உண்மையான பசியால் உந்தப்பட்டு முழங்கும் களிற்றை நம் மனக்கண் முன் நிறுத்துகிறாள்.இங்ஙனம் ‘இயற்கை-செயற்கை எதிர்முரண்’,படிப்போர் உள்ளத்தில் ஒரு முரண்காட்சிப்படிமத்தைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இப் பாடல் ஒரு சான்றாகும்.
சங்க இலக்கியத்தின் உள்ளடக்கத்திலும் உத்திமுறையிலும் ஒலிச்சூழலமைவுகள் பெற்றுள்ள சிறப்பிடமும் அவை இலக்கிய ஆர்வலர்க்கும் ஆய்வாளர்க்கும் வழங்கும் செய்திகளும் விரிவான ஆய்வுக்குரியன.
மரபில் ஆழங்கால்பட்டுப் புதுமையைச் சுவைக்கும் ஆய்வாளர்கள் இப் பணியில் முனைந்தால்
சங்க இலக்கியக் கல்வி மேலும் சிறப்படையும்.
அடிக்குறிப்புகள்
18.நற்றிணை-4
19.குறுந்தொகை-42
20.ஐங்குறுநூறு:அன்னாய்வாழிப்பத்து-(21:)-205
21.ஐங்குறுநூறு-தெய்யோப்பத்து-(24)-233
22.அகநானூறு-25
23.அகநானூறு-172
24.குறுந்தொகை-365
25.குறுந்தொகை-78
26.அகநானூறு-143
27அகநானூறு-229
28நற்றிணை-68,129
29.நற்றிணை-380
30.நற்றிணை:344, குறுந்தொகை- 237,396, ஐங்குறுநூறு:அன்னாய்ப்பத்து-(22)218., அகநானூறு:389,
31 குறுந்தொகை158,,குறுந்தொகை-268.
  1. நற்றிணை.289,குறுந்தொகை396
33 குறுந்தொகை-200
  1. நற்றிணை-111,227,-207, குறுந்தொகை-78,குறுந்தொகை-336
  2. நற்றிணை-67, 117, 138.ஐங்குறுநூறு-171, பதிற்றுப்பத்து-55
36.நற்றிணை-154
37.நற்றிணை-14
38.குறுந்தொகை-307
  1. நற்றிணை-195, 267, 287
  2. நற்றிணை-320, 348
41.நற்றிணை-17
42.ஐங்குறுநூறு- இளவேனிற்பத்து (35)-341
  1. நற்றிணை-167, 189
  2. அகநானூறு-122
45.நற்றிணை-4
46.அகநனூறு-4
  1. நற்றிணை-287
  2. நற்றிணை-323
  3. குறுந்தொகை.301
  4. ஐங்குறுநூறு:தோழி கூற்றுப்பத்து-60
  5. ஐங்குறுநூறு:-தோழி கூற்றுப் பத்து-55
 (நிறைவு)
– முனைவர் மறைமலை இலக்குவனார்
செம்மொழி மாநாட்டுக் கட்டுரை
http://semmozhichutar.com


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்