திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்


arangarasan_thirukkural_arusolurai_attai
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
  அதிகாரம் 010. இனியவை கூறல்

      கேட்பவர் மனமும் மகிழும்படி,
       இனியநல் சொற்களைக் கூறுதல்.

  1. இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,
     செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.

         இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல்,
அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல்.

  1. அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),
     இன்சொலன் ஆகப் பெறின்.

     மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து
       இன்சொல் சொல்லல் நன்று.

  1. முகத்தான் அமர்ந்(து),இனிது நோக்கி, அகத்தான்ஆம்,
   இன்சொ லினதே அறம்.

       முகமலர்ச்சியோடு பார்த்து, மனத்தால்
       இன்சொல் சொல்லலே அறம்.

  1. துன்(பு)உறூஉம் துவ்வாமை, இல்ஆகும், யார்மாட்டும்,
     இன்(பு)உறூஉம் இன்சொல் அவர்க்கு.

       இன்பந்தரும் இன்சொல் சொல்வார்க்குத்
     துன்பந்தரும் வறுமையே இல்லை.

  1. பணி(வு)உடையன், இன்சொலன் ஆதல், ஒருவற்(கு)
   அணிஅல்ல, மற்றுப் பிற.    

         பணிவும், இன்சொல்லும் ஒருவர்க்கு
அணிநகைகளைக் காட்டிலும் அழகு.

  1. அல்லவை தேய, அறம்பெருகும், நல்லவை
   நாடி, இனிய சொலின்.

       நல்லன, இனியன, சொல்லின்,
தீயன அருகும்; அறம்பெருகும்.

  1. நயன்ஈன்று, நன்றி பயக்கும், பயன்ஈன்று,
   பண்பின் தலைப்பிரியாச் சொல்.

         பண்பான இன்சொற்கள், விருப்பமும்,
நன்மையும், இன்பமும் நல்கும்.

  1. சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்,
   இம்மையும், இன்பம் தரும்.

         சிறுமை கலவாத இன்சொற்கள்,
எப்பிறப்பிலும், இன்பமே தரும்.

  1. இன்சொல், இனி[து]ஈன்றல் காண்பான், எவன்கொலோ,
     வன்சொல் வழங்கு வது….?

         இன்சொற்கள், இனிமை தருவது
கண்டும், கடும்சொற்கள் எதற்கு….?

  1. இனிய உளஆக, இன்னாத கூறல்,
     கனிஇருப்பக், காய்கவர்ந்(து) அற்று.

         இன்பச்சொல் இருக்கத், துன்பச்சொல்
சொல்லல், கனிஇருக்கக், காய்ப்பறிபோல்.

– பேராசிரியர் வெ. அரங்கராசன்



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்