கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்

kanavunanavaakumaa-thamizhaazhan
ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து
ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து
ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும்
உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக்
காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும்
கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே
நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில்
நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே !
பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப்
பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம்
வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி
வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத்
திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித்
திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும்
கட்டாயம் பணிகிடைக்கும் வகையில் கல்வி
கற்பிக்கும் புதியமுறை இருக்கும் இங்கே !
அரசாங்க அலுவலர்கள் எல்லாம் இலஞ்ச
அரிச்சுவடி அறியாத நேர்மை யாளர்
வரவுதனைப் பார்க்காமல் கடமை செய்து
வந்தகோப்பை விரைவாக முடிக்கும் பண்பர்
அரவணைத்து மக்கள்தம் குறைகள் கேட்டு
அன்போடு சரியான பதிலு ரைப்பர்
அறவழியே தம்வழியாய் மக்க ளெல்லாம்
அனுதினமும் நடந்திடுவர் நன்றாய் இங்கே !
வாக்களிக்கத் தொகைகொடுக்கும் வழக்க மில்லை
வன்முறைகள் மிரட்டல்கள் சிறிது மில்லை
தாக்குகின்ற பேச்சில்லை மேடை யில்லை
தனைப்பற்றிச் சுவரொட்டி எழுத்து மில்லை
ஆக்கத்தை அளிப்போரைத் தேர்ந்தெ டுக்கும்
அமைதியான தேர்தலாக நடக்கு மிங்கே
வாக்களிப்போர் யாருக்கும் அஞ்சி டாமல்
வாக்களித்தே தேர்தெடுப்பர் முறையாய் இங்கே !
ஆட்சியிலே ஊழலில்லை ஆட்சி யாளர்
அதிகார ஆர்ப்பாட்டம் செய்வ தில்லை
காட்சிக்கே எளியவராய் அமைச்ச ரெல்லாம்
கால்நடந்து மக்கள்குறை தீர்க்கின் றார்கள்
தீட்டுகின்ற திட்டத்தில் சுரண்ட லின்றித்
தினையளவும் குறையாமல் சுணக்க மின்றி
வாட்டுகின்ற துயர்களைந்து நாளும் மக்கள்
வாழ்க்கையினை மேப்படுத்த உழைப்பார் இங்கே !
சாதிகளின் பிரிவுயில்லை உயர்வு தாழ்வு
சண்டையில்லை சாத்திரத்தின் பேத மில்லை
ஆதிக்க மதங்களில்லை வணங்கு கின்ற
ஆண்டவனில் முரண்பட்ட கருத்து மில்லை
வாதித்து வருத்தத்தை வளர்ப்போ ரில்லை
வளரன்பே இறையருளின் வழியா மென்று
போதிக்கும் அறிவுரையில் மக்க ளெல்லாம்
பொதிந்துமனம் ஓரினமாய் வாழ்வார் இங்கே !
பலமொழிகள் பேசினாலும் அன்பு என்னும்
பாலத்தால் ஒருங்கிணைந்தே வாழு கின்றார்
கலக்கின்ற கருத்தாலே மொழிக ளுக்குள்
காழ்ப்புகளும் உயர்வுதாழ்வு காண்ப தில்லை
இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்தே தங்கள்
இலக்கியமாய்ப் போற்றுகின்றார் ! கணிணி மூலம்
பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற
பயனாலே மொழிச்சண்டை இல்லை இங்கே !
நாடுகளுக் கிடையெந்த தடையு மில்லை
நாடுசெல்ல எவ்விசைவும் தேவை யில்லை
நாடுகளுக் கிடையெந்த பகையு மில்லை
நட்பாலே உதவுதற்கும் எல்லை யில்லை
வாடுகின்றார் ஒருநாட்டு மக்க ளென்றால்
வளநாடு கரங்கொடுத்தே காத்து நிற்கும்
பாடுபட்ட பலனெல்லாம் அனைவ ருக்கும்
பகிர்ந்தளித்தே வாழ்ந்திடுவர் பொதுமை என்றே !
உயிர்பறிக்கும் குண்டுகளைச் செய்வோ ரில்லை
உயிர்மாய்த்து நிலம்பறிக்கும் போர்க ளில்லை
உயர்சக்தி அணுக்குண்டு அழிவிற் கின்றி
உயர்த்துகின்ற ஆக்கத்தின் வழிச மைப்பர்
உயரறிவால் கண்டறிந்த விஞ்ஞா னத்தை
உயர்வாழ்வின் மேன்மைக்குப் பயனாய்ச் செய்வர்
நயமாக நான்கண்ட கனவு என்று
நன்மைதரும் நனவாக மாறும் இங்கே !

– பாவலர் கருமலைத்தமிழாழன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue