திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு
01. அறத்துப் பால்
001. அதிகாரம்
01. பாயிர இயல்
001. இறைமை வழிபாடு
மக்கள் கடைப்பிடிக்கத் தக்கஇறைமை ஆகிய நிறைபண்புகள்.
- அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி
எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;
உலகினுக்கு, இறைவன் முதல்.
- கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன்
தூய அறிவன்வழியைப் பின்பற்றாத
சீரிய கல்வியால், பயன்என்….?
- மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்,
மலரைவிட, மெல்லிய இறைவன்
வழிநடப்பார், நெடிது வாழ்வார்.
- வேண்டுதல், வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு,
விருப்பு, வெறுப்பு இல்லான்வழியில்
நடப்பார்க்குத் துயரங்கள் இல்லை.
- இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
இறைவனின் புகழ்செயல் செய்வாரிடம்,
இருள்சேர் எவ்வினையும் சேராது.
- பொறிவாயில் ஐந்(து)அவித்தான், பொய்தீர் ஒழுக்க
ஐம்புலஆசை இல்லானின் பொய்இல்லாவழி
நிற்பார், நெடிது வாழ்வார்.
- தனக்(கு)உவமை இல்லாதான், தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்,
இணைஇலா இறைவன்வழி நடப்பார்,
மனக்கவலை மாறும்; மறையும்.
- அறஆழி அந்தணன், தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்,
அறக்கடல்ஆம், இறைவன்வழி நடப்பார்க்குப்,
பிறவித் துயரங்கள் இல்லை.
- கோள்இல் பொறிஇல் குணம்இலவே, எண்குணத்தான்
எண்அரிய குணத்தான்வழி நடவான்,
ஐம்புலன்களால் எப்பயனும் இல்.
- பிறவிப் பெரும்கடல் நீந்துவர்: நீந்தார்,
இறைவன்வழி நடப்பார், பிறவிக்கடல்
கடப்பார்; நடவார், கடவார்.
– திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன்
– உரை தொடரும்
Comments
Post a Comment