மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

thamizh_maaridumo.
ஞாலம் தோன்றிய நாள்முதலாய்
நடந்தன நடப்பன மாற்றங்கள்!
காலம் ஓடும் வேகத்தில்
கழிந்தன புகுந்தன எத்தனையோ!
மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி
மேவுதல் என்பது முயற்கொம்பே!
சாலவும் எல்லாம் மாறிடினும்
சால்பும் அறமும் மாறாவே!
நங்கை ஒருத்தி தன்மனத்துள்
நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே
தங்கும் அன்புக் கணவனெனத்
தாங்கிய பின்னை மாற்றுவளோ?
அங்கம் குழைந்தே அழதழுதே
ஆண்டவன் அடிசேர் அடியார்கள்
பங்கம் நேரத் தம்மனத்தைப்
பாரில் என்றும் மாற்றுவரோ?
அறிவியல் வளர்ந்த காரணத்தால்
அடைந்தன பற்பல மாற்றங்கள்!
பொறிகள் தம்புலன் மாற்றியொரு
புதுமை தன்னைச் செய்ததுண்டோ?
நெறிகள் மாறா நீணிலத்தில்,
நிற்பன நடப்பன மாறுவதால்!
வறியோர் செல்வர் மாற்றமெல்லாம்
வாழ்வின் உண்மை உரைப்பனவே!
ஆடைகள் அணிகள் மாறிடினும்
அரசியல் கட்சிகள் மாறிடினும்
ஓடைகள் யாறுகள் மாறிடினும்
உயர்மலை மடுவாய் ஆகிடினும்
கோடையும் குளிரும் மாறிடினும்
கொள்கையை அற்பர் மாற்றிடினும்
வாடைக் காற்றாம் இந்திமொழி
வரினும் செந்தமிழ் மாறிடுமோ?
சட்டை வேட்டி துண்டுகளைச்
சடுதியில் மாற்றும் செயலெனவே
திட்ப மின்றிக் கட்சிபல
தினம்தினம் மாறுவ தரசியலோ?
பட்டம் பதவி பெறுவதற்காய்ப்
பல்லை இளித்து மனம்மாற்றி
திட்ட மின்றி வாழ்வதெலாம்
தெள்ளியர் என்பார் கொள்வாரோ?
(1967)
கவிக்கோ ஞானச்செல்வன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்